என் கனவுகளை,
கவிதைகள் தின்று,
எச்சத்தை
என் வீட்டு தலையணை தின்று
பெருத்து கிடக்கிறது
அதுவும்
காதல் கற்று கொண்டது போல
துணை வேண்டி
ஆர்ப்பாட்டம் செய்கிறது
இரவில் அதன் தொல்லை
தாங்கமுடியவில்லை
நீயாவது ஜோடியோடு இரு
என்று துணைக்கு ஒரு
தலையணை வாங்கி போட்டேன்
இப்போதெல்லாம் அவர்கள்
செய்யும் குறும்புகள்
தாங்கமுடியவில்லை
வழக்கமான காதலர்கள் போல்
தொட்டுக்கொள்ள ஆரம்பித்து
இப்போது கட்டிக்கொள்ளும்
வரை வந்து நிற்கிறது
தலை அணைப்பதற்கு பதிலாய்
தலைவனையே அணைத்து கிடக்கிறது
தலைவி தலையணை
உயரம் வேண்டி அடுக்கிவைத்து
உறங்கும்போது
முத்த சத்தம்வேறு
இரண்டாம் சாமத்தில்
அவள் நினைவில் கட்டிக்கொண்டு
உறங்கும்போது
அவைகள்
உறங்குவதும் இல்லை
உறங்க விடுவதும் இல்லை
அரை தூக்கம் குறை தூக்கமாய்
இருந்த என்னை
அறவே தூக்கம்
இல்லாமல் செய்து விட்டன
உறை மாற்றும் வேளையில்
வெட்கப்பட்டு போர்வைக்குள்
ஒளிந்து கொள்கின்றன...
இப்போதெல்லாம்...
ஏன்டா எங்களை
இருவேறு உறைகள் இட்டு பிரித்து
வைக்கிறாய் என்று திட்டி
தீர்த்துவிடுகின்றன
என் கண்ணீர் தொட்டு
கவிதைகளும் எழுத கற்று
கொண்டு விட்டன.
ஒரேஒரு குறை,
அவைகள் இன்னும்
குட்டிபோட
கற்றுக்கொள்ளவில்லை
சீமான்