தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
நிலவை பார்த்திபன்
அது ஒரு ஆடை நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!
வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!
வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!
என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!
கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!
மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!
கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!
படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!
அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!
"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!
நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!
தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!
பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!
என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!
பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!
நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!
வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!
கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!
அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!
ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று