தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நெடில்

பாரதிராமன்
ஓ, இது விதி என்றாய்
இல்லை, வீதி என்றேன்
வீதியில் விரைந்ததால்தானே விதி வாய்த்தது ?

ஓ, இது சதி என்றாய்
இல்லை, சாதி என்றேன்
சாதி என்பதால்தானே சதி வெடிக்கிறது ?

ஓ, இது பணம் என்றாய்
இல்லை, பாணம் என்றேன்
பாணம் என்பதால்தானே பாதாளம்வரை பாய்கிறது ?

ஓ, இது நிதி என்றாய்
இல்லை, நீதி என்றேன்
நீதி என்பதால்தானே நிறைவாய்க் கிடைக்கிறது ?

ஓ, இது மனம் என்றாய்
இல்லை, மானம் என்றேன்
மானம் என்பதால்தானே மனமும் மருகுகிறது

ஓ, இது முடம் என்றாய்
இல்லை, மூடம் என்றேன்
மூடம் என்றபின்தானே வாய் முடமானாய் ?

ஒளிந்திருந்த கடவுள்

கார்த்திக்
தங்களின் பாரத்தை கடவுளிடன்
இறக்கி வைத்து விட்டு பக்தர்களும்

கோவிலை பூட்டி விட்டு பூசாரியும்
கிளம்பிய பின்னர் யாருமில்லை
என்று உறுதிப்படுத்தி கொண்ட

மரத்தின் பின்னால்
ஒளிந்திருந்த கடவுள்
பெருமூச்சுடன்
கோவிலுக்குள் புகுந்து கொண்டார்

பக்கத்து வீடு

ஸ்ரீமதி
தனியே ஆடும் ஒற்றை ஊஞ்சல்,
பூத்து, வாடி, உதிரும் மஞ்சள் ரோஜா,
நீளமான தாழ்வாரத்தின்
ஆள் வாசனையற்ற தூண்கள்,
மகிழ்ச்சிக்கென விலைக்கொடுத்து
தனிமையே கொண்டு சேர்க்கும்
தகவல் தொழில்நுட்பங்கள்,
விடிந்துவிட்ட எதோவொரு காலையின்
அவசர அயல்நாட்டு அழைப்புகள்,
சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்... - 

குருவிக் கூடு

தேவதேவன்
நிலத்தை ஆக்கிரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியைத் தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு
உயர்ந்து தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக் கூடாய் அசைந்தது
நான் அமர்ந்திருந்த அந்த மொட்டைமாடி

வேதனை

கல்முனையான்
மனிதனின் சோதனையின் உச்சக்கட்டம்
அவனுள் தோன்றும் வேதனை.
அவனையறியாமலே அவனுள்ளே
ஆட்கொள்ளப்படும் வெகுளித்தனம்

சற்று நிமிர்ந்தாலும் தலை வலி
காரணம் ஏதொ ஒரு வேதனை.. மனதளவில்
என் இரு கண்களும் ஏதோ இழந்த ஏக்கம்
இல்லை.. அது வேதனையின் தேக்கம்

என் காதுகள் கூட சரியாக கேட்பதில்லை
அவற்றின் திசுக்களில் கூட வேதனை போலும்
ஆமாம்,நேற்று என் காதில் எறும்பு ஒன்று
ஏதொ கூறியது மறந்துவிட்டது...

சற்று அண்ணார்ந்து பார்த்தேன்
வானத்தை அதிலும் ஒரு வேதனை
புரிந்தது எனக்கு தெளிவாக
வானில் இன்று நிலவு இல்லை அமாவாசையாம்

பூப்பூக்கும் காதல்

மன்னார் அமுதன்
நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்

உன்
பிஞ்சு மனதிலே
தஞ்சம் கேட்டு
நித்தம் சண்டை பிடிக்கும்

பசியில்லாப் பகல்களும்
பட்டிணி இரவுகளும்
பழகிப் போகும்

பல்லியிடம் வீசியெறிந்த
உன் முதல் பல்
என் காதல் கருவூலத்தை
அலங்கரிக்கும்

உனக்குள் கட்டமைத்த
வாழ்க்கைச் சுனையில்
என் வேர்கள் நீர்தேடும்

இருந்தும்..
தவறுகளின் பட்டியலால்
மலடான நம் காதல்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் பூப்பூக்கும்

ஆற்றில் ஒரு நேர்கோடு

பிரபு
இருபுறமும் நீளும் ஆற்றில்
தொலைதலுக்கு அஞ்சி
குறுக்கே கடந்து
அக்கரை அடைவேன்.

கால்தடங்கள் மட்டுமே
வழிந்தோடும் ஆற்றின்
தூரவெளியில்
எனக்கிணையாய் நகரும் புள்ளிகள்.
ஆற்றின் பரப்பு மிகப்பெரியது!

இரவில்
ஆணி அறைந்ததுபோல்
தூரவெளி நிலைத்துள்ளது.
ஆற்றின் பரப்பு
வெளிச்சம் அளவே.

ஆறு என்பது
மணலூறும் இடமாகவே
என் கற்பிதம்.
ஆற்றின் பயணம்
வலமிருந்து இடமா?
இடமிருந்து வலமா?
பார்த்ததில்லை.

எல்லையற்றுத் தெரியும் ஆற்றில்
எனக்குக் கிடைத்ததென்னவோ
ஒரு நேர்கோடுதான்.
'அக்கரைக்குச் செல்
அலுவல் புரி
திரும்பி வா'

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய்

சு.மு.அகமது
வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில்
கந்தலாய் அவனது வழித்தடங்கள்
ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய்
பாவக்கனியின் அழுகல் பிசிறுகள்
தொற்றாய் கிருமிகளென

வார்தெடுத்த சர்பமொன்று
சாத்தானின் நிழலென ஊடுருவி
மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும்
எரிமலையின் பொருமலாய்

அந்தி சாய்கிற நேரத்தில்
எரியும் சிவந்த தழலோடு
வாய் பிளந்து அபகரிக்கும்
பொசுங்கும் நினைவு -சாம்பலை

பொழுது புலராத முன்பனிக்காலத்து
மழுங்கின படலங்களினூடே
பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள்
விழியற்றோனின் உதவிக்கம்பாய்
நீண்டும் மடங்கியும்


விட்டுச் சென்றவன் திரும்புகையில்
எடுத்துச் செல்வான் கந்தலையும்
நான் சேர்த்த அழுகல் பிசிறுகளையும்
கிருமிகளை மட்டும் சுதந்திரமாய் விட்டுவிட்டு

புதுப் பிறப்பெடுப்போம் புத்தாண்டில்

மா. கலை அரசன்
அஞ்சதியாய் வந்தயுனை முழுதாய் உணர்வதற்குள்
ஆடிக்கழித்தேன் யானென்று புயலாய் செல்கின்றாய்
இன்புற்றிருந்து உன் தினங்கள் சுவைப்பதற்குள்
ஈசுரலீலை நடத்தி நடவாதுபோல் நகர்கின்றாய்
உழன்று சுழன்று உய்வது துணிந்தோம்
ஊசலாடல் வாழ்விலும் மனதிலும் மாறக்காணோம்
எதிரும் புதிருமான கால ஓட்டத்தில்
ஏகத்துக்கும் கனவுகளை வளர்த்தோம் – என்னே,
ஐதென ஐதுபடல் மனதினின்று துறந்தோம்
ஒரித்தல் செய்து இன்புற்று வாழ்வதென்பது
ஓர்குலத்துள்ளும் மறந்தோம் – வாதோழா
ஔவித்தலொழித்து புதுப்பிறப் பெடுப்போம் புத்தாண்டில்

நம்பிக்கை

இலெ.அ. விஜயபாரதி
 

பெரும்பாறையை
யானையாய் ஆக்கியவனுக்கு
எவ்வளவு நம்பிக்கையிருந்தால்
கால்களில் பிணைத்திருப்பான்
சங்கிலியை?