வெளிச்சத்திற்குப்
பயந்து
ஓட்டுக்குள் பதுங்கும்
மெல்லுடலி போல்-
இங்கு சில
முதுகெலும்பிகள்!
வறுமைக்குப் பயந்து
வாழும் வழி மறந்து
உழைப்பு ஒய்வு
ஏதும் தெரியாப்
பித்தராகி!
பாவனையா?
பாவம்!விதியா?
எங்கோ உறவுகளைத்
தொலைத்து விட்டு
நகரங்களின்
நடைபாதைகளில்!
நச்சுக் காற்றின்
சுவாசத்தில் !
குப்பைக் கிடங்குகளில்
கோணிப் பையும்-
கிளறும் குச்சியும்
மூலதனமாகக் கொண்டு!
எச்சில் உணவின் மிச்சம்
கிடைத்த பொழுதில் உண்டு!
கீழ் மேலாய்
மேல் கீழாய்
நெகிழிப் பைக்குள்
முகம் மட்டும் தெரிய
உடல் புதைத்து!
இரவின் கடைசி
உறக்கமும்
பகலின் முதல்
உதயமும் இவர்களாகிப் போக!
மழையிலும் பனியிலும்
இன்னமும்
வாழ்க்கையை
பத்திரப் படுத்துகிறார்கள்!
உண்மை -
நடைபாதைகளின்
இடைவெளிகளில்
எதிராளியை சந்திக்காத
தருணம் வரை!
எந்த இட
நெரிசல்களும்அவர்களை
நெருங்காத வரை !
தொடரும்
வறுமைக் கோலம்!
'அவர்களின்'
அகராதிகளில்
இதுவும் -
ஒரு வகை துறவறம்!
அறியாமை
ஆழத்திலிருந்து அவர்களை
மீட்பவர் இல்லை!
உதவுவோர் முயன்றாலும்
பிடிவாதத்தின் பிடியை
அவர்கள் விடுவதாய்த்
தெரியவில்லை!
நகரத்தின் பழகிப் போன
எத்தனையோ
காட்சிப் பதிவுகளில்-
நகரும் இந்த
நத்தை மனிதர்களும்
எழிலி