தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பெயரைத் தேடி

ரியாஸ் அகமத்
நட்பாக
பல வருடங்கள்
பழகியும்
எந்தொருநாளும்
அவளுக்கு
பொருந்தா
(ஒரு) வெட்கத்தை
அவளிடம்
கண்டிருக்க,

அவ்வெட்கமும்
அவள் இமைகளை
ஒன்றொடு(ஒ)ன்று
சண்டைக்கு அழைத்த
அந்நொடியில்
நான் எதிர்பார்த்திரா
காதலை
சொன்னாள்
அழகாக.

இது கனவென்று
மெல்ல
என்னைக் கிள்ளிப்பார்த்த
அத்தருணத்தில்
என்னுள்
உருவமற்றிருந்த
என் காதலும்
சற்றென்று
உருவெடுத்து நிற்க
நான்
புரிந்துக்கொண்டேன்
மறைந்திருந்த
என் காதலை.

காதலின்
வினையால்
வருடங்களும்
நாட்களாக
கழிந்துபோக
(ஒர்)நாள்
முகத்தோடு முகம்
நின்று
சொன்னாள்

என்னை மன்னிக்க
வேண்டுகின்றேன்
உன்னை
மறக்க போவதால்
ஏன்னெற்று கேள்வி
கேட்கும் முன்பே
அவள்
வேறுவரிடம்
நிற்க

அவள் விட்டுபோன
வார்த்தைகள்
மட்டும்
இதயத்தில் அடைப்பட

கல்லறையில் புதைப்படா
ஜடமாக
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்

நடந்த நாடகத்தின்
கதாபாத்திர
பெயரைத் தேடி

முகப்பில்

எழிலி
 
வாழ்க்கைத் துணையாய்
வந்தமைந்த
சகதர்மினிக்கு......!

உலகத்தின் தோற்றம்
குறித்த உன்
சந்தேகங்களுக்குக் கூட
என்னால் விளக்கங்கள்
கூறிட முடியும்!

நம் வாழ்வில் இன்னும்
எத்தனைக் காலம்
பிளவும் பிணக்கும்
என்பதைக் கூட
ஓரளவிற்கு ஊகித்து
உணர்த்திட முடியும்!

இன்னும் என் சுயங்கள்
முழுமையும் உன்னையே
சேர்ந்திருக்கச்
செய்ய முடியும்!

தவமிருந்து என்னைத்
தன் விலாசமாய்ப்
பெற்றவளுக்கு
எதை ஈடாய்த் தந்து
உன்னுடனான என்
இழப்பைச் சரிகட்ட....!

தோழியாய் உன்னிடம்
ஒரு கெஞ்சுதல்!
கடவுளாய் உன்னிடம்
சில பகிர்தல்கள்!

சேர்த்துக் கொள்ளத்தான்
வேண்டும் அவளையும்!

சந்தோஷ முகப்பில்
நீ!
வாழ்வின் வயோதிக
முகப்பில் அவள்!

கடமை காத்திருப்புகளின்
முகப்பில் ஏனோ
நான் மட்டும் .......
? போனேன்!
 

இரவல் இரவுகள்

எழிலி
எல்லாமே முடிவதாய்
நான் உணர்ந்தேன்!

இந்த எழுபத்திரெண்டு
வரை!
என் தூக்கம்,  என் உணவு,
என் பாவனைகளில்
நான் தோற்றுப்போனதே
கிடையாது!

எல்லா மகிழ்ச்சிகளும்,
வேதனைகளும்
பழக்கப்பட்டவைகளே!

தற்போதைய  நாட்களில்
என் பார்வைக்  குறைவு,
பசியின்மை, ரத்தக் கட்டிகள்,
மாத்திரைகள் உடலுக்குள்
செய்யும்  மாயஜாலம்,
யார் யாரோ வந்துபோகும்
ஆஸ்பத்திரி முதல்
மாடியின்    கிழக்கில்
என் திரை மூடிய அறை,

விரைவாய்ப் பரவும்
வேதியல் வாசம்,
தெர்மாஸ்  குடுவை
சுடுதண்ணீர், காபி,
உப்பில்லாதக் கூழ்,
இயற்கை  உபாதைக்கு
மறைவாய்ப் பாலிதீன் பை!

என் தலைமுறைகளின் 
உறக்கம், 
உணவு, 
மகிழ்ச்சி, 
சௌஹரியம்,
தற்காலிகமாய்-
என்னால்   தடைப்பட...

நிச்சயமாய் நான் இரவல்
இரவுகளில்  தவிக்கிறேன்!
என்பது மட்டுமே  உண்மை  -
மரணம்  வரும்
வரையில்!

நான் உறங்குவதுமில்லை,
விழிப்பதுமில்லை

என் விழியில் விழுந்தவளே

ரமேஷ் பாரதி
என் விழியில் விழுந்தவளே!
உன்னைத் துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்

உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமலே..

என் இரு விழிகளிலும்
கனவுகளை விதைக்கும்
உன் விழிகளுடன்
யுத்தம் செய்தே
எனது இரவுகள் கழிகின்றன..

நீண்டு கொண்டே போகும்
உன் நினைவுகளில்
கால் பதிக்க முடியாமல்
தடுமாறி போவதால்
என் இதயத்தை தீண்டும்
உனது பார்வை ஒன்றை
திருடி கொண்டு
உன் வருகை ஒன்றுக்காக
வாசல் பார்த்தே காத்திருக்கிறேன்

பயணிப்போம் இலக்கை நோக்கி

கா.ந.கல்யாணசுந்தரம்
நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மிதக்கவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே!
இது நியாயமா?
ஓடம் ஓடவேண்டும்...
மூழ்கினாலும் கப்பல் அழகென்று
இந்த மானுடம் வர்ணிக்கிறதே!
அலைகள்தான் எங்களின் வாழ்கையை
நிலைப்படுத்தும் ஆயுதம்!
நங்கூரங்கள் கூட பலநேரம்
நம்பிக்கை இழக்கிறது!
நில அதிர்வுகளில் அலைகள்
அரக்க குணம் கொண்டழிக்கிறது!
எங்களுக்கு உறுதுணையாய்
உடன்வந்தாலும் .....
உனது உள்ளமதை நாமறிவோம்!
இலக்குகளின்றி பயணித்தலை
பாய்மரக்கப்பல்கள் அறிந்திருந்தாலும்
மாலுமியின் திறனறிந்து
பயணித்தலே எங்கள் நோக்கம்!
அடி பெண்ணே! உண்மையை சொல்லிவிடு...
சும்மா எங்களுடன் உறவாடாதே...!
உனது எண்ணத் திசைகளை நன்கறிவோம்...!
இனி காத்திருப்பு பயனில்லை...
இனிய பயணிப்பு நம்மோடு பூத்திருக்கு....
பயணிப்போம் இலக்கை நோக்கி

பெண்ணும் ஐம்பூதமும்

பிரவீன் குமார் செ
நிலமும்
நீயும்
ஒன்றேயடி.
என் ஜீவனை சுமப்பதால்!

நீரும்
நீயும்
ஒன்றேயடி.
ஆழம் தெரியவில்லை!

காற்றும்
நீயும்
ஒன்றேயடி.
உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!

வானும்
நீயும்
ஒன்றேயடி.
முதலும் முடிவும் தெரிவதில்லை !

நெருப்பும்
நீயும்
ஒன்றேயடி.
கண்களால் தொடமுடிந்தும் …..
கைகளால் முடியவில்லை

நண்பர்கள் தினம்

முத்து கருப்புசாமி
ஒவ்வொரு தேசிய கீதத்தின்
கடைசி வரியிலும்
நிகழுமே அது!

ஒவ்வொரு முகூர்த்த நேரத்தின்
கடைசி நிமிடத்திலும்
நிகழுமே அது!

ஒவ்வொரு வருடப் பிறப்பின்
முதல் வாழ்த்திலும்
நிகழுமே அது!

தோட்டத்துப் பூச்செடியில் மலர்ந்த
முதல் பூவிலும்
நிகழுமே அது!

பெற்ற குழந்தை உச்சரித்த
முதல் வார்த்தையிலும்
நிகழுமே அது!

என...

அத்தனை உணர்வுகளையும் கூட்டி
உன் ஒரு முத்தில் காண்கிறேன்
அனுதினமும்!

இனி,

நமக்கெதற்கு நண்பர்கள் தினம்!
அது நம் கடலில்
விழுந்த ஒரு துளி

நீ நனைந்த மழை துளிகள்

முகவை சகா
மாலை மழைக்கு
நனைந்துவிட வேண்டாம்
என நீ ஓடினாய்
மழையும் விடாமல் துரத்தி
அணைத்தது உன்னை

முதல் துளி உன் மீதும்
மறு துளி மண் மீதும் விழுந்தது
உன் மீது விழுந்த
மழைத்துளி சிலிர்த்தது
மண் மீது விழுந்த
மழைத்துளி மறித்தது

பனி பிரதேசத்தில் கூட
பார்க்கும் வரம் கிடைக்குமா தெரியாது
உன் போன்ற பனிப்பாறை
மழையில் நனைவதை

உன்னைவிட உன் ஆடைக்கு தான்
குளிர் அதிகம் போல
உன்னை இறுக்கி அணைத்தது

மரத்தின் அடியில் ஒளிந்துகொண்டாய்
மரத்தில் பட்ட துளிகளெல்லாம்
மண்மேல் விழாமல் உன் மேல் விழுந்தது

இன்று உன் குடைக்கு விடுமுறை
அதே போல உன்னை ரசித்து நடந்த
என் நடைக்கும் விடுமுறை

உன்னையே நீ இறுக்கி கட்டி கொண்டாய்
ஒருசில நிமிடம் உன் இறுக்கத்தின் இடையில்
இருப்பதாய்  உணர்ந்தேன்

குளிரில் சிலிர்த்தாய்
என் பாவங்களும் சாபங்களும்
புண்ணியமானது !

தயவு செய்து நீ நனைந்ததை
நினைத்து வருந்தாதே!
உன்மேல் விழுந்த எத்தனையோ
துளிகளை நனைத்துவிட்டாய்
அதுதான் உண்மை

உங்களுக்கும் பிடிக்கும்

சுதாகர்
 
இடம்மாறி துடிக்கும் இதயத்தின்
இடைவெளி இல்லா உச்சரிப்பு
காதல்!

தனிமையில் சிரித்து பாருங்கள்,
கைகோர்த்து நடந்து பாருங்கள்,
இருவரும் விரல்விட்டு நட்சத்திரங்களை
எண்ணிப்பருங்கள்,
காதலின் இதயத்துடிப்பை கேட்டுப்பாருங்கள்,
தோல்மீது சாயுங்கள்,
மடிமீது தவழுங்கள்,
"காமம்" காதலின் ஏற்ப்பாடு
கொஞ்சம் அரங்கேற்றுங்கள்,
உங்கள் நிழல்கலை கட்டி அனைக்க
விடுங்கள்,
முத்தத்தில் முதுற்ச்சி அடையுங்கள்,
ஒரே போர்வைக்குள் உங்களை
சிறை படுத்துங்கள்,
காதோரம் ரகசியம் பேசுங்கள்,
இதழோரம் இசை பாடுங்கள்,
"கொழுசு" காதலின் சிணுங்கல்
கொஞ்சம் இசைத்துப்பாருங்கள்,

இவை அனைத்தையும் கற்ப்பனை
செய்து பாருங்கள்
"காதல்" உங்களுக்கும் பிடிக்கும்.
 

உரையாடல் தரும் உவகை

மலர்
உவமைகள் தேடுகிறேன்
என்
உவகையை உணர்த்த!

காலம் மாறும் தருணங்ளில் - என்
காதலியும் மாறிவிட்டாள்!
'நான் எப்படி இருக்கேன்' - என வினவ

விடை கொடுத்தேன்!
என் காதலுக்கும் என் காதலிக்கும்
நட்பின் உறவை அவள் விழைவதால்!

சில நிமிட பேச்சுகள் தந்த
சில்லரை சந்தோஷங்கள்
சிலிர்த்தே தழுவும் அவள் நினைவுகளை!

அவள் குரல் - காதில் ரீங்காரமாய்
அவள் நினைவு - இதய துடிப்பாய்
அவள் வாசம் - எந்தன் சுவாசமாய்

இப்படி செல்லரித்த வரிகள்
இன்னும் ஏனோ சலிக்கவில்லை!

உவப்பு நீரிலே - உண்மையை உணர்கிறேன்!
உன்னை இன்னும் மறக்கவில்லை என்று.

ரோஜாவின் சிவப்பாய்
என் நினைவில்
உன் நிழல்கள்!

அதன் மீது படரும்
பனித்துளியாய்
உன் கனவு!

தைக்கும் முட்களிலே
தான் உணர்கிறேன் - என்
உறவின் பலவீனத்தை!

உன்னை பறிக்கும் உரிமை
எனக்கு இல்லை என்று!

ஆனால்...

மலர்ந்த உன் சிவப்பை விட
வாடிய உன் சருகுகளும் - எந்தன்
வாழ்க்கை புத்தகத்திலே இடம் பெற
விழைகிறேன் - விளிக்கிறேன்!

மீண்டும் ஒரு உரையாடல்!
உதிரத்திலே உறையும்
உறவின் உண்மைகளை
உன்னிடம் உணர்த்த