தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காதல் விருட்சம்

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
  வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ
விதையானாய்?

பாறையாய் இறுகி இருந்த என்னுள்
எப்போது நீ
உன் வேர்களை நுழைத்தாய்?

உத்தரவில்லாமல்
என் கனாக்களில்
பூவாய் சிரித்து
ஏனடி நீ
உலா வருகிறாய்?

ஒற்றுக்களே சரியாகத் தெரியாத என்னுள்
கவிதைக் காய்களை
பழுக்க வைத்தது எவ்வாறு?

என்னைச் சுற்றிலும்
விருட்சமாக வளர்ந்து
சுகமான தனிமைச் சிறையில்
என்று எனை அடைத்தாய்?

  உன் நிழல் ஒன்றே
என் வாழ்க்கை என
மாறிப் போனது எந்தத் தருணத்தில்?

எல்லாம் சரிதான்
உனக்கு மட்டும் ஏனடி
மிதித்துச் செல்லும்
தரைபடர் புதராகிப் போனேன்
நான்?
 

விழிகளின் வலிகள்

மீனாள்செல்வன்
தொட்டுவிடும் தூரத்தில் நீ
ஆனால் நமக்குள்ளே
ஒரு ஜென்மத்தின் இடைவெளிகள்.

எனக்குள்ளே என் சுகம்போல
என் வலிகளும்...
உறவின் சந்தோசத்தைக்கூட
பிரிவின் வேதனையுடன் அனுபவிக்கும்
என் பொழுதுகளில்
இன்னும்தான் வாழ்கிறேனா என்று
எனக்குள் நானே அடிக்கடி கேட்டு
மீண்டும் மீண்டும் பூத்து
மீண்டும் மீண்டும் வாடி
மாலைக்கும் ஆகாத
செடிக்கும் ஆகாத  மலர்போல
எல்லாம் முடிந்துபோன ஒரு வாழ்வின்
கனவுகளில் மீண்டும் நுழைகிறேன்.
உந்தன் கைவிரல்களை
எட்டிப் பிடிக்கும் பேராசையில்
தன்னைக் கடந்து போனவனிடம்
யாசித்து ஏங்கும்
பிச்சைக் காரனைப் போல.
சீ... என்ன கேவலம்
கண்விழித்திருந்தாலும்
கனவுச் சுகத்தில்
காலங்களைத் தின்று தீர்க்கிறது
எனது காதல்

இன்றா சுதந்திரம்?

இட்ரிஸ் பாண்டி
இணையற்ற
இந்தியாவிற்கு
இன்றா
சுதந்திரம்???

ஊரை அடித்து
உலையில் போடும்
ஊழல் பெருச்சாளிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
பூமத்திய கோட்டையே
புவியிலிருந்து விரட்டிய
வறுமைக் கோட்டிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
சொர்க்க பூமியதை
இரத்த பூமியாக்கிய
ஈனப் பிறவிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
சாதியின் பொயரால்
சண்டையிடும்
சண்டாளர்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
பெண்மையைப்
பேணிடாத
பேடிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
கையூட்டினால்
கொழுத்திட்ட
களவாணிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
மதத்தின் பெயரால்
மனிதத்தை கொல்லும்
மனித மிருகங்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
கல்வியினை
காசுக்கு விற்றிடும்
கயவன்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
காவல்துறையை
களங்கப்படுத்தும்
கருங்காலிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
மருத்துவத்துறையின்
மாண்பினை மறந்திட்ட
மானமிழந்தவரிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
ஓட்டுக்காக மட்டும்
ஒன்றுகூடிடும் பச்சை
ஓணான்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
தேர்தலன்று மட்டும்
தேடி வந்திடும்
தேச துரோகிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
தாய்மொழியினை
தலைகுனிவாய் நினைக்கும்
தருதலைகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
ஆன்மீகமதன் பெயரால்
அநியாயம் செய்திடும்
அதர்மிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
இப்போது
கூறுங்கள்
இன்றா சுதந்திரம்
இந்திய தேசத்திற்கு!!
 

சாமி(யார்)

பாண்டூ
அமைதி முகம்
அருளும் கரம்
நவீன வியாபாரத்தில்
இது தனி ரகம் !

இந்த அவதார உலா...
கடவுளின் கடாட்சத்தாலா?
இல்லை
கயவர்களின் கைங்கரியத்தாலா?

இவர்கள்...
அவதரிக்கும் போதெல்லாம்,
அதர்மம் தலைதூக்கும்!

ஆசிர்வதிக்கும் போதெல்லாம்,
அஞ்ஞானம் அருளப்படும்!

தலையாட்டினால் பக்தன்...
கேள்வி கேட்டால் பித்தன்...
நல்லதென்றால் அவன் செயல்...
அல்லதென்றால் இவன் விதி...
இவர்கள் பிழைப்பிற்கு,
இதுவே நல்ல வழி ?!


இவர்கள்...
பற்றற்றவர்கள்...
அதனால்தானோ
வரவை மட்டுமே பார்க்கிறார்கள்!

இவர்களது ஆசிரமங்கள்
கருப்புப் பணத்தின்
காக்கைக் கூடுகள் !

ஏழு சக்கரங்களைப் பற்றி சிலாகித்தாலும்..
இவர்களது இறுதிக்காலம் என்னவோ
சக்கர நாற்காலியில்தான்...

தீராத நோயெல்லாம் 'சத்ய'மாய்
தீர்ப்பார்கள்...
இவர்களுக்கொன்றென்றால்
அவசரப் சிகிச்சைப் பிரிவில்
சேர்ப்பார்கள் !


இவர்களது ஆனந்த அலைகள்
மன்மத வளையங்களை
எழுப்பத் தவறுவதே இல்லை !

'நித்ய' கண்டத்திலிருந்து
தப்பித்தோர்க்கே வெளிச்சம் !

மனிதக் கண்களில்
மிளாகாய்ப் பொடித் தூவும் இவர்களால்...
கேமராக் கண்களிலிருந்து
தப்ப முடிவதில்லை !

இவர்களா நமக்கு
வாழும் கலையை
போதிப்பது ?

பக்தர்களே!
உங்களுக்கு பட்டை நாமம்
'பாபா'க்களுக்கோ கொள்ளை லாபம்!

கால் கழுவக்கூட
காசு வாங்கும் இவர்களைக்
கை கழுவுங்கள் !

உதிர்ந்த மயிரைக் கூட
இவர்களால் ஒட்டவைக்க முடியாது
உணருங்கள் !

விழித்திருங்கள்...
இதுவே சிறந்த தியானம்!
விவேகானந்தரின் விவேக மொழி !

இனியாரும்,கண்களை மூடச்சொன்னால்...
காதுகளை மூடுங்கள்!
முடிந்தால்...
ஆசிரமங்களையும் !!

தோழமை மேகமும் காதல் தூறலும்…

ஷக்தி
பின்னிய முடிகளின் பிரிந்ததோர்
கற்றை முடி - உன் காதுகளை
வருடியதும்,
அதிலிருந்து பிரிந்ததோர்
ஒற்றை முடி - உன் கண்ணங்களை
கோலமிட்டதையும்,
ஒற்றை விரல் கொண்டு அதை நீ
அடிக்கடி ஒதுக்குவதையும்,
ரசித்திருக்கிறேன்…
அப்போது கூட
சொல்லியிருக்கலாம் - நான்

கடற்கரை மணலில் நாம்
தனியாய் அமர்ந்திருந்த வேளையில்
“ஆர்டின்” வரைந்துவிட்டு
அர்த்தமுடன் சிரித்தாயே,
அதை நானும் ரசித்தேனே..
அப்போது கூட
சொல்லியிருக்கலாம் - நீ

திரைப்பட இடைவேளையில்
தின்பண்டத்துணுக்கொன்று
உதட்டோரம் ஒட்டியிருப்பதை
சொல்ல மனமின்றி - நானே
அள்ள நினைத்தேனே!- அதை
நீ ஆமோதித்து ரசித்தாயே..
அப்போது கூட
சொல்லியிருக்கலாம் - நான்

கோவில் பிரகாரத்தில் - எனக்கு
விபூதி கீற்று அணிந்து விட்டு
சுண்டலுக்கு அலைந்த என்னை
கண்களால் கடிந்தாயே
அதை நான் ரசித்தேனே..
அப்போது கூட
சொல்லியிருக்கலாம் - நீ

சொல்லவே இல்லை எப்போதும்
நான்,
தோழமை துரோகம் எனக் கருதி,
நீயும்..

தோழமைக்கும் மேலான - ஆனால்
காதலுக்கும் சேராத..
புதியதோர் பந்தத்தில் வந்த தோழி
என் அலைவரிசை கண்ட தோழி
அமெரிக்கா சென்றுவிட்டாள்
யார் வீட்டிற்கோ விளக்கேத்த..
என் வீடு இன்னும் இருளில்..

தோழமை பார்த்ததில் எனக்கு
ஓர் தோழமை நஷ்டம் - மேலும்,
ஓர் காதலும் நஷ்டம் போலும்.

பெண்மம் பிடித்துப் போனால்
பெண்மத்திற்கும் பிடித்துப் போனால்
வன்மம் எதுவுமில்லை.,
தோழமை நிரந்தரமாக்க,
தோழமை தாண்டுவதிலும் கூட..



துரோகப் பாம்பு

ஆண்டனி
ஆதாம் ஏவாளுக்கு
ஆப்பிள் கொடுத்து
ஆண்டவரிடமிருந்து பிரித்த
அந்தப் பாம்பு..!

சீசர் கொன்று ஆண்டனி கொன்று
கிளியோபாட்ரா மார்தவழ்ந்து
கிளியொத்த பேரழகி கொன்ற
அந்தப் பாம்பு..!

கர்ண்னைக் கொல்ல
காப்பியத்தில் கண்ணன் பிடித்த
அந்தப் பாம்பு..!

எட்டப்பனை வைத்து
கட்டபொம்மன் கதை முடிக்க
வெள்ளையர் பிடித்த
அந்தப் பாம்பு..!

அன்பை அழிக்கும்
நட்பை நசுக்கும்
அந்த நச்சுப் பாம்பு..!

அரசியெலாம் ஆழ்கடலில்
அதிகமாய் ஊரும்
ஆசை காட்டி அழிவு தரும்
அந்தப் பாம்பு..!

எவரும் எட்டிப் பார்க்கமுடியா
மனிதனின் மனமெனும்
அடர்ந்த பெருங்காட்டுக்குள்
ஏதோவொரு மரத்தின் நெடுங்கிளையில்
அழிவில்லாத ஆகாயமாயின்னும்
நெளிந்து கொண்டுதானிருக்கிறது
துரோகமெனும் பெயர் சுமக்கும்
அந்தப் பாம்பு...!
 

மழை

புரட்சி கவிஞர் பாரதிதாசன்
மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ்
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ? மழையே...- புரட்சி கவிஞர் பாரதிதாசன்   

தொலைந்துபோகிறேன்

நம்பி.பா
உளம் கொண்ட காதலிலே
விழி கொண்ட ஒளியதனிலென்
மனம் கண்டிருப்பாய்...

அகம் கொண்ட காதலிலே
இதழ் கொண்ட வேகத்திலே
வெட்கம் கொண்டிருப்பாய்..

இருந்தாலும்
காதல் கொண்ட பார்வையினில்
காலம் கடக்கும் பாடத்தினை
நித்தம் சொல்லாமல் சொல்லுமுந்தன்
நறுமுகைத்திருமுகத்திலே
இன்றும் நான்
இன்னொருமுறை
தொலைந்துபோகிறேன்

துன்ஹிந்த நீர்வீழ்ச்சி

விவிக்தா
தண்ணீர் ஊற்றி
வளர்த்த மரமல்ல - இது
தண்ணீராகவே
வளர்ந்த மரம்.

இந்த அதிசய விளக்கில்
எண்ணையே தீபமாக
எரிகிறது,
தீபமே எண்ணையாக
வழிகிறது.

அந்த மலைநாட்டு(ப்)
பால்காரன்
பாலில் தண்ணீரைக்
கலக்கவில்லை,
தண்ணீரில் பாலைப்
பிரிக்கிறான்.

எத்தனை வருடங்களாய்
மலையகத்தின்
கலையகத்தில்
இந்த அற்புத நடனம்
அரங்கேறுகிறது....
அடடா,
அங்கே பாறைகளில்
எதிரொலிப்பது
இரசிகர்களின்
கை தட்டல்கள் தானா?

வெள்ளை நிறத்தில்
வானவில் ஒன்று - இது
கண்ணுக்கு விருந்தாகும்!
கவலைக்கும் மருந்தாகும்!!

தற்கொலை புரிவதிலும்
இத்தனை ஆனந்தமா...
வீழ்ச்சியிலும் சிரிக்கிறாய்!!
புதிய கீதை
போதிக்கிறாய்!!

எல்லாம் சரி பெண்ணே..
பாறை இடுக்குகளில் நீ
ஆனந்த கானம் தான்
மீட்டுகிறாய்...
எவரைப் பிரிந்ததற்காய்
வெள்ளைப் புடவை
உடுத்துகிறாய்??

வாரிசுகள்

கல்முனையான்
 
பூரண நிலவினிலே! என் வீட்டுத் தோட்டத்தின்
எலுமிச்சை செடிகளுக்கும், எலி-மிச்சம் வைத்த வற்றாளை
கொடிகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று

அரிதாரம் பூசிக் கொண்டு அரட்டை அடிக்கின்ற
பாகற் கொடியும் அதன் இறுகிய இணைப்பில்
மயங்கி நிற்கும் மரத்துப்போன கிளிசரியா கம்பும்

தொல் பொருள் நிபுணராய் தன் உடல் பரப்பி
ஆராய்ச்சி செய்யும் வெள்ளரியும் அவருக்கும் உதவியாய்
ஒத்தாசை புரிந்து பூரித்துப்போன பூசணியும்

உரம்திண்ட தெனாவட்டில் திறன் காட்டி நிற்கின்ற
மரவள்ளியும் தரம் கெட்ட காய் என்று
தகுதியுடன் தள்ளிவைக்கப்பட்ட வெண்டிச் செடியும்

வீராவேசம் பேசி வெடுக் கென்று மிடுக்கோடு
நிற்கின்ற கத்தரியும் ஏட்டிக்கு போட்டியாய்
வளர்ந்து வயசுக்கு வந்திருந்த தக்காளியும்

வாழ்த்துக்கள் கூறி வாயாராப்புகழ.. அடுப்படியில்
இருந்து கொண்டு இன்னும் சட்டியினிலே
கனவு காண்கிறனர் வற்றாளைக் கொடியின் வாரிசுகள்.