தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நான் = நீ

மீனாள்செல்வன்
என்னுளம் கேள்
உன்னுளம் தா
மாலைகள் மாற்று
மகுடமும்  மாற்று
தோளோடு நில்
தோளோடும் கொள்
இமைகளாய் இரு
என் பார்வையை மதி
உனக்குள்ளும் கொள்
ஒதுங்கியும் நில்
புதிதான சுகங்கள்
புரிந்திட விரும்பு
புதிதான வலிகள்
புரியவும் பழகு
சுமையொன்று கொடுத்தால்
சுமையொன்று இறக்கு
பாதைகள் ஒன்றே
பயணமும் ஒன்றே
சரிநிகர் செய்தால்
சாதனை நமதே

ஆட்டுக்குட்டிகளின் தேவதை

எம்.ரிஷான் ஷெரீப்
 
ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது

பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன
விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்
வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன
புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்
மந்தைகளின் தேவதை
முடங்கிப் போயிருக்கிறாள்
உஷ்ணப் பிரம்பினைக் காட்டி
அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்
கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை

பயணப் பாதைகளிலெல்லாம்
ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்
இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்
பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்
மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்
புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்
அவளுக்கு எப்போதும்
ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்

வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு
தொலைவில் அவள் கண்டாள்
யானையாய்க் கறுத்த மேகங்கள்
வானெங்கும் நகர்வதை

இனி அவள் எழுவாள்
எல்லா இடர்களைத் தாண்டியும்
துயருற்ற அவளது பாடலோடு
விழித்திருக்கும் இசை
ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்
ஆக்ரோஷமாக... ஆரவாரமாக...
ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி...
 

காலை

பாவேந்தர் பாரதிதாசன்
 
ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!
 

மழையாகிவிட்ட தவளையின் சாகசம்

சு.மு.அகமது
ஒரு முறைமையின் உதறலில்
எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும்
சதைக்கூளங்களை

எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த
கயமை குடி கொள்ளும்
நேசப் பறவைகளின் கூடுகளில்

பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி
பாசமாய் பாரம் சுமக்கும்
சுமைகளை தாங்கிய பாறை மனது

கெக்கலித்து புரளும் நினைவில்
ஊசலாடியபடி நெஞ்சக்கிடக்கை
விண்ணைத் தாண்ட எத்தனிக்கும்
மழைத் தவளையின்  சாகசத்தோடு

துளியென்பது
கூழ் பூசின கூட்டின் அடையாளமாய்
வீலென்று அலறும்
கனத்த மார்பில் அமுது சுமந்தபடி

நிழல் பிடிக்க முடியாதவன்
சுரக்காத ஊற்றுக்காய் கண்ணி வைப்பான்
அவனே மழையாகிவிட்டவனாய்

வட்டத்துக்குள் வாழ்க்கை

ப. மதியழகன்
வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது போலும்
ஒன்றுமே இல்லாதது போலும்
தோன்றுகிறது
தூரத்தில் கயிறுதானேயென்று
அலட்சியமாக வந்தால்
கிட்டத்தில் பாம்பாகிறது
துரோகக் கழுகு
என்னை வட்டமிடுகிறது
எங்கு போயினும்
மரண சர்ப்பம்
என்னைத் துரத்துகிறது
வாழ்க்கை வட்டம்
நிறைவுறும் போது
எனக்காக எதுவும்
மிச்சமிருக்காது
மாம்சம் சாம்பலாகும்
நினைவுகள் சூன்யமாகும்
இன்னார் இருந்தாரென்பதை
இவ்வுலகம்
சீக்கிரத்தில் மறந்து போகும்

கவிதை மயக்கம்

பனிதுளி சங்கர்
இதழ்கள் சொல்லாத
உன் இதயத்தின் இரகசியம் ஒன்றை
காதல் என காட்டிக் கொடுக்கிறது என்னிடம் .
நீ காகிதத்தில் கிறுக்கியக் கவிதையொன்று !

கட்டி அணைக்க இயலாத எழுத்துக்களிலும்,
மறைத்து வைக்க இயலாத ஊடல்களிலும்
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன்
உன் கவிதை தீண்டிய மயக்கத்தில்
காதல் உண்ட மங்கையென

வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…

ப்ரியன்
மேல் இதழ் முதல்வரி
கீழ் இதழ் மறுவரி
உன் இதழ்கள்
எனக்கான இருவரி கவி

நீ
அழகுக்கான
அளவுகோல்!

கவிதைகளில்
உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
உன்னழகை எழுதும் வேளைகளில்.

தூண்டிவிடுவது என்னவோ
உன்னழகு
பழி மட்டும் என் மேல்.

கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
நல்ல பிள்ளையாய்;
உன் அழகு போடுகிறது
குத்தாட்டம்!

நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…

உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…

இருத்தல்

ரேகா ராகவன்
இருந்தால்.......

மென் ரோஜா மொட்டொன்றில்
பூவாய் அமர்ந்துக்
கதிரவனைத் தன்னுள் பூட்டியிருக்கும்
ஒரு பனித்துளியாய்......

கோடைக்காலத் தாகத்தில்
உதட்டின் மேல்
லேசாய் வந்துவிழும்
ஒரு மழைத்துளியாய்.....

இருத்தல் வேண்டும்.

எண்ணங்கள் தேக்கி
எட்டி நடக்கையில்

தன் இருத்தலைத் தெரிவிக்கத்
தொலைவிருந்த நீர்வீழ்ச்சி
மயிலிறகாய் முகத்தில் தெறித்துது
ஒரு துளி நீர்

சிறகடிக்கும் கண் மூடித்
துடிக்கும் இதயம் அடக்கி
இத்துளியை ஸ்பரிசித்த ஒரு நொடியில்
அனைத்தும் அடைந்துவிட்ட
ஒரு பரிபூரணம்

இனி இருத்தலில்
தான் என்ன அவசியம் ?

ததும்பி வந்து
இமை உறுத்திப் பிரித்துத்
தன் இருப்பை உணர்த்தி
என் இருத்தலின் அவசியத்தை
உறுதிப்படுத்தியது
ஒரு துளிக் கண்ணீர்...

- ரேகா ராகவன் (நன்றி : திண்ணை)

வாசல்

சா.துவாரகை வாசன்
இரு கண்கள் மனதின் வாசல்
சிறுசிறு கருத்துக்கள் கவிதைக்கு வாசல்
உயர்குணம் நல் புகழ் கோட்டைக்கு வாசல்
அடக்கும் நல் உயர்நிலைக்கு வாசல்
கேள்வி தெளிவுக்கு வாசல்
உழைப்பு வெற்றிக்கு வாசல்
குற்றம் சீர்குலைவுக்கு வாசல்
மனமாற்றம் நல் வாழ்வுக்கு வாசல்

நான் என்னை மேலும் சமைக்கிறேன்

அழகிய பெரியவன்
 என் எண்ணத்தைப் பிட்டுனக்கு
தின்னத்தந்தேன் நேற்று

எண்ணம் உயிரைப் போன்றது
ஆகையால்
என் உயிரைத்தான் தந்தேன்

பின்பொருநாள்
என் கருத்தை செரிக்க முடியாமல்
உபாதை ஏற்பட்டதாகச்
சொன்னாய்

உனக்கு ஏற்கும் வகையில்
எந்த அளவுக்கு
என் சிந்தனையை
மசிய வேகவைத்துத் தர வேண்டும்
என்ற பக்குவம் தெரியவில்லை

உயிர்ச் சத்துகள்
வீணாகாமல் இருக்க
சில நேரத்தில் உணவு
அரைவேக்காட்டுப் பதத்தில்
இருக்க வேண்டும்
என்பது உனக்கும் தெரியும்

கருத்துச்சிக்கலும்
வயிற்றுச் சிக்கலும்
இப்படி முரண்படுகிறபோது
என்ன செய்யலாம் அன்பனே

எல்லாமும் ஏற்கும்படி
நீ உன்னை
பண்டிதம் பார்
எல்லார்க்கும் ஏற்கும்படி
நான் என்னை
மேலும் சமைக்கிறேன்