கோடை காலத் தொடக்கம்!
உலை நீரின் உஷ்ணமாய்
உக்கிர வெயில்!
அலுவலகம் நோக்கி
வழக்கம் போல்
அவசரப் பயணம்!
நூறடி சாலை தொடங்கி
புறவழிச்
சாலையின் போக்கில்.....
திடீரென குளிர்ந்த காற்று
திசை தெரியாத இருட்டு
சூரியனைச் சூரையாடிய
மேகக் கூட்டம்! நிமிடத்தில்
சொட்டு சொட்டாய்த்தூறல்!
தூறல் -
ஆலங்கட்டி மழையின்
அளவிற்கும் சற்று சிறிதாய்
பெருகிப் பெருகி .........................
நிமிடமாய் வலுத்தது!
தேகம் குளிர்ந்து மணத்தை
எங்கும்தெளித்தது பூமியின்
புழுதிப் படலம்!
சின்னக் குழந்தைகள்;
குழந்தைகளாகப் பெரியவர்கள்;
பாதசாரிகள்;ஆண்கள், பெண்கள் ;
அழகாய் இளைஞர்கள்;
இன்னும் அழகாய்
யுவதிகள்!
மழை முத்து முத்தாய்த்
தெறித்து முத்தமிட்டது!
பூமியை! மரங்களை!
மரங்களின் குழந்தைகளை!
அவைகளில் பதறிப் போய்
அமர்ந்த பறவைகளின்
பருத்த சிறகுகளை! தூசிப்
படிந்த அடுக்கு மாடிகளை !
போக்குவரத்து வாகனங்களை!
புகை கக்கும் ஊர்திகளை!
சுடிதார் பூக்களை!
சேலை சிற்பங்களை!
மேல் சட்டை கால்
சட்டை மனிதர்களை!
யாரிடமும் எதிர்ப்பில்லை!
எவரிடமும் முகச் சுளிப்பில்லை!
முழங்காலளவுத்தண்ணீர்...
முட்டி மோதிக் கொண்டு
பழுதடைந்த சாலைகளின்
பள்ளங்களில்...
குட்டிக் குட்டிக் குளங்களாகி!
எல்லோரும் மகிழ்ந்தனர்!
நனைந்து நனைந்து
அவர்களின்
ஆசுவாசப் பெருமூச்சு
உஷ்ணத்தில் - நிமிடமாய்
வெளிப்பட்டது வானத்தில் -
முகமூடி மாட்டிக் கொண்ட
முரட்டு சூரியன்!
கோடை மழை
கொதித்த வெயிலுக்கு
இயற்கையின்
குளிர்ச்சிக் குடை!
வெப்பமயமாதலைத்
தடுக்க
வேண்டிய பொழுதெல்லாம்
வந்து போ மழையே!
நன்றியோடு வணங்கியவர்
வரிசையில்
நானும் ஓர் ஆளாய்

எழிலி