தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மாங்காய்ச்சோறும்

வித்யாசாகர்
அதெப்படி
இன்றிருந்து விட்டு
நாளை இல்லாதுபோய்விடுமெனக்கு
இத்தனை ஆசைகள்.. ஏன்?

என் ஆசைகளில் ஒன்றினைக்கூட
செறிக்கவில்லையே; எனது நரை.. (?)

நடந்து நடந்துத் தீர்ந்திடாத
எனது காலடிச்சுவடுகளும்,
காலத்தைச் சொட்டியும் தீராத
வியர்வையும்,
சொல்லிமாளாத ஏக்கங்களும்
எனக்குள் இருளுள்பொதிந்த முகத்தைப்போல
மரண நிறத்தில் தெரிகிறது;

ஏதேதோ செய்து
கிழித்துவிடும் மதப்பில்
நிறைவேறாமல் நீர்த்துவிட்ட
நிறைய கனவுகள்
பணத்திற்குள்ளும்
இடத்திற்குள்ளும்
பொருளிற்குள்ளும்
பதவிக்குள்ளும் அசிங்கமாகயிருப்பது தெரிகிறது;

அவைகளையெல்லாம்
எரித்துப்போடாத மூப்பிது; அசிங்கமான
வாழ்க்கை,
நிர்வாணத்தை மூடி மூடி வைத்த
நாற்றம் கொண்ட மனசு இது;

பசி
வலி
பயம்
கோபம்
அது பிடிக்கும்
இது பிடிக்கும்
மாங்காச் சோறு ருசி..
மன்னிக்கத் தெரியாது
மதிக்க மதிக்க வாழனும்
இந்த ஜாதி அந்த மதம்.. ச்ச.. ச்ச..
என்ன மனிதனோ நான் -

எனக்காகப் பாவம்
தெருவெல்லாம் பூப்பறித்து
வழியெல்லாம் போடப்போகிறார்கள்..

ஒ பூக்களே.. பூக்களே
ஓடிவாருங்கள்..

உங்களின் காம்பறும்முன் ஒருமுறைப்
பூத்துகொள்ளுங்கள்; நான் போய்விடுகிறேன்!!
போய்விடுகிறேன்

சில நாட்களில்

மதுரபாரதி
சில நாட்களில்
மனம்
மிக நொய்தாய் இருக்கிறது

ஏதோ ஒரு அநாதை சுவரத்திற்கும்
இனங்காணாத பரிமளத்திற்கும்
கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டு
வேடிக்கை பார்க்கிறது

பார்க்கமுடியாத அஸ்தமனத்தில்
மேக விளிம்பை நெருப்பேற்றிவிட்டு
சீறிப்பிரியும் கிரணங்களுக்கு
தேக மயிர்களாலே
அஞ்சலிக்க வைக்கிறது.

வயிறொட்டிய தெருநாய்
எதேச்சையாய்ப் பார்க்கும்
பொறிவிழிகளிலே
சகோதரம் விரியும்
சமிக்ஞை படிக்கிறது.

மனம் நொய்தான
இந்த நாட்கள்தாம்
இதர நாட்களின் பளுவை
சல்லிசாய்ச் சுமக்க
தோளுக்கு உரமூட்டுவன

கரையோர முதலைகள்

பாலக்குமாரன்
கரையோரம் முகவாய் வைத்து
கதவுபோல் வாயைப் பிளந்து
பல்லிடுக்கில் அழுகிப் போகும்
மாமிச எச்சம் கொத்த
பறவைக்குக் காத்திருக்கும்
முதலைகள் சோகத்தோடு
பறவையும் மாமிசம்தானே
பட்டுப் போல் வாசனைதானே
முதலைகள் தர்மம் மாறா
ஞானிகள் எந்த நாளும்
வஞ்சனையில்லாப் பிறவி
மனிதருள் மாமிச எச்சம்
குப்பையாய் கிடந்த போதும்
ஒரு நாளும் வாயைத் திறவார்
உள்ளதை வெளியே சொல்லார்
சுத்தத்தை விரும்பும் உயிர்கள்
தர்மத்தைக் கட்டிக் காக்கும்
மனிதரைத் தவிர இங்கே
அத்தனைப் பிறப்பும் சுத்தம்

கவிதை பிரசவம்

அருட்பெருங்கோ
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்

நீ... நான்... காதல்

முகவை சகா
சினிமா பார்த்துவிட்டு வெளியேறியதும்
போகும் வழி எங்கும் படத்தின் காட்சிகளை
பேசிக்கொண்டே செல்லும் மக்களைப்போல
உன்னை பிரிந்ததும் உன்னை பற்றியே
பேசிகொள்வேன் தனியாய்

எதேச்சையாக ஒருமுறை என்னை
பார்த்திருப்பாய் நீ
மறுபடியும் பார்க்க மாட்டாயா என
மரண பார்வை பார்துகொண்டிருபேன் நான்

" அவளிடம் அப்படி என்னடா இருக்கிறது "   என்று
என் நண்பர்கள் கேட்டால் அன்று முழுதும்
தூங்காமல் சந்தோசபடுவேன்.
எல்லோரும் ரசிக்கும் சராசரி பெண்ணாய்
இல்லாமல் நான் மட்டும் ரசிக்கும்
சமத்து பெண்ணாய் இருக்கிறாயே என்று

உன்னை அழகியாக காட்டியது என் கண்கள்
பேரழகியாக காட்டியது என் காதல் தான்

என் அருகில் இருக்கும் எல்லோரிடமும் பேசிவிட்டு
என்னிடம் மட்டும் ஒரு பார்வை
உதிர்த்து போவாய்
எனக்கு தெரியும்
அம்மனின் அருள் எபோதுமே பக்தனுக்கு தான்
அருகிலே இருந்து அர்ச்சனை செய்யும்
அர்ச்சகனுக்கு இல்லை
அருகிலே இருப்பவர்கள் அர்ச்சகர்கள்
நான் உன் பக்தன்

என் கடைசி வாழ்க்கை வந்தாலும்
என் காதலை சொல்லமாட்டேன் உன்னிடம்
கல்யாண நாள் குறித்தால் சொல்லி அனுப்பு
மொய் எழுதும்போது என் பெயருக்கு நேரே
உயிர் என எழுத வருகிறேன்

நெஞ்சிற்கு நீதி

மன்னார் அமுதன்
கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று - பணம்
காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு - என
நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த
நீதிமான்களைக் காலம் வெல்லும்

கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும்
கீழான மனிதர்தம் பாதம் தொட்டு - நல்ல
மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள்
நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும்

பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல
பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு
கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த
நீரினில் ஒருபுறம் நீதி தவழும்

பட்ட மரங்களும் ஓர் பட்டதாரியும்

விவிக்தா
நான் ஒரு பட்டதாரி.
வாழ்க்கைப் பாதையில்
ஓரமாய் நடந்தும்
அனுபவ வாகனங்களில்
அடிபட்டவன்.

மானுடத்தைத் தின்று
மனிதனைத் துப்பும்
பல்கலைக் கழகத்தில்
வெளிப்பட்டவன்.

மரத்திலேறி
கனிபறிப்பதை விடுத்து
பட்டம் விட்டு நிலவைத் தொட
புறப்பட்டவன்.

வேலை தேடுவதே
வேலையாகிப் போன
வேதனைத் தீயில்
வதைபட்டவன்.

எனவே நான் ஒரு பட்டதாரிதான்!

அன்று
உண்ணாமல் உறங்காமல்
படித்தேன்,
பட்டம் பெற!
இன்று
உண்ணாவிரதம் இருக்கிறேன்
வேலைபெற!

நான் ஒரு பட்டதாரி!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை!

வேலையற்ற எனக்கு
தினமும் உண்ணாவிரதம் தான்.
நேற்றுவரை வீட்டில்!
இன்று முதல் வீதியில்!!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை!

இதோ
மெல்ல மெல்ல
குறைகிறது.
என் உடல் வலிமை மட்டுமல்ல
வேலை கிடைக்குமென்ற - என்
கனவின் கனமும் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

அரசியல்வாதிகளே! - இங்கு
உண்ணாமல் இருப்பது
உங்கள் வோட்டுக்கள்தான்.

பெற்ற மனங்களே! - இங்கு
உறங்காமல் கிடப்பது
உங்கள் உதிரங்கள்தான்.

பஞ்ச பூதங்களே! - இங்கு
உணர்வின்றிப் படுப்பது
உங்கள் உறுப்புகள் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

என் முதற் சம்பளம்
வாங்கும் நாள்வரை
மருந்தின் துணையுடன்
உயிரைத்தாங்கும்
என் அம்மா

தமயன்வழிச் சீதனமாய்
ஒரு தாவணியாவது கொண்டுசெல்ல
பிறந்த வீட்டிலேயே காத்திருக்கும்
வயது வந்த
என் தங்கை

வெறுமையே நிறைந்தாலும்
இளமையே கரைந்தாலும்
வேலை கிடைக்கும்
நாள்வரையாவது
வாழ நினைக்கும்
என் காதலி

இவர்களுடன்
கைகோர்த்தபடி - காத்திருக்கின்றன
என்
கனவுகளும் இலட்சியங்களும்!

என்ன செய்வேன் நான்?
நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

கண்கள் மயங்கி
உணர்வுகள் அடங்கி
துவண்டு விழும்
என் தலையைத் - தாங்க
நிச்சயம் நீழும்
இன்னுமொரு
வேலையில்லாப் பட்டதாரியின்
வேதனைக் கரங்கள்.

நாளை
அவனைத் தாங்கவும்
இன்னும் சில கரங்கள்

அந்த வகையில் கவலையில்லை!

உண்ணாவிரதிகளை
உற்பத்தி பண்ணத்தான்
இருக்கிறதே
பல்கலைக்கழகமெனும்
பல தொழிற்சாலைகள்!

இதோ என் இறுதிச் சிரிப்பு.
இதோ என் கடைசி ஏக்கம்.
என் இறுதிப் பார்வை
என் கடைசிக் கவிதை...

விடைபெறுகிறேன் நான்.

என் வாழ்வின்
எல்லைக்கோடுவரை - வந்த
அம்மாவின் அன்பு முகம்
தங்கையின் பாசம்
காதலியின் உதடு
நண்பர்களின் இதயம்
இன்னும்
கவிதைகள்
கனவுகள்
இலட்சியங்களுடன்
விடைபெறுகிறேன் நான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி

மரண ஒத்திகை

ப. மதியழகன்
எனக்கான அழைப்பு வந்துவிட்டது
கையூட்டு கொடுத்து காரியம்
சாதிக்க முடியாது அங்கே
நாட்கள் நத்தை போல்
நகர்ந்ததாக நினைவிலில்லை
எனது வாழ்க்கை கோப்பை
நிரம்பி வழியவில்லை
எனது மரணமொன்றும்
உலகுக்கு இழப்பில்லை
வாழ்க்கை என்னை
சாறாகப் பிழிந்து
என்ன சாதிக்க நினைத்ததோ
துயரங்களை மூட்டையாகச் சுமந்து
உடல் கோணிப் போனது
எனது உறுப்புகள்
எனது கட்டளைக்கு
இணங்க மறுத்தன
இவ்வுலகத்தில் எனது இருப்பு
கேள்விக்குறியானது
மரணத்திற்குப் பிறகு வாழ்வுண்டா
என்ற கேள்விக்கு விடை
கிடைக்கப்போகிறது
வாழ்க்கையெனும் மைதானத்தில்
மற்றவர்கள் கால்களில் உதைபடும்
பந்தாகத்தான் இருக்க முடிந்தது

தூரல் கவிதைகள்

ருத்ரா
குடை மழைக்கல்ல‌
நாம் ஒட்டிக்கொள்ள.

வானத்தின் கைகள்
கிச்சு கிச்சு மூட்ட.

குற்றாலம்
பாறையின் ஏக்கம்.

ம‌ழை ஊசிக‌ள்
ம‌யில் இற‌குக‌ளில்.

உன்இமை ம‌யிர்க‌ளில்
வைரத்துளிக‌ள்.

கைக்குட்டை போதும்.
இருவ‌ரும் குடியிருக்க‌.

வ‌ய‌துக்கு வ‌ந்ததால்
ந‌மக்கு ப‌ருவ‌ ம‌ழை.

ப்ள‌ஸ் டூவும் ப்ள‌ஸ் டூவும்
ந‌னைந்து ஒன்றான‌து.

விசும்பின் துளியில்
காத‌ல் புல்.

ந‌ம் உட‌ம்பே ஆடை
ஊசி நீர் தைத்த‌து.

தூர‌ல் தொட்ட‌தில்
இத‌ய‌ம் வ‌ரை இனிப்பு

நண்பன் நான் என்றால்

அ.ஸ்விண்டன்
கரையை சந்திக்க வரும் அலை
நுரையை எல்லாம்
கரையிலேயே விட்டுவிட்டு
உவர் நீரை மட்டும்
உடன் எடுத்து செல்வது - போல்
தோழா
உன் சுகங்களை எல்லாம்
நீயே வைத்துக்கொள்
உன் சோகங்களை மட்டும்
என்னிடம் தந்துவிடு
உன் உண்மையான நண்பன்
நான் என்றால்