தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உனக்குள்ளே

பாரதிபிரியா
நீயும் நானும் கைகோர்த்து
நடந்து சென்ற, கடந்த நாட்கள்,
கண்களில் கனவுகளாக!

புதுப்பாடல் போல புனிதமான
உன் அன்பு, எனக்குள்ளே!
புதுவரவாய், புதுவசந்தமாய்,
உன்னுள் விழவைத்தது!

சோர்ந்துபோன இதயம்
உன் வரவால் உயிர்பெற்றது.
பட்டாம்பூச்சி வாழ்க்கையில்,
பூபாளமாய் உன் வரவு!

பனித்துளியினும் தூய்மையான
நின் நேசத்தில், நான்
நிலைகுலைந்து போனது, உன்
அன்பின் ஆழத்தை சொல்லும்!

என் உயிரை திருடிவிட்டு
உள்ளத்தை மட்டும் விட்டுவிட்டாய்.
அது ஆழ்ந்த  உன் அன்பு அருவிக்குள்
தத்தளிக்கிறது...
கரையேறமுடியாமல்

தேவனின் திருக்கரம்

ப.மதியழகன்
 

 
அடர்ந்த கருமை சூழ்ந்த வனாந்திரம்
விறகுவெட்ட வந்தவனின் கால்கள்
புதைகுழியில் சிக்கியது
கொஞ்சம் கொஞ்சமாக
மண்குழம்பு அவன் உடலை
விழுங்கிக் கொண்டிருந்தது
எத்தனையோ கோடி மனிதர்களை
உண்டு செரித்த வயிறல்லவோ
அதற்கு!
அவனது வாய் இறைவனின்
நாமங்களை உச்சரித்து அழைத்தது
அவனது கண்களும் மண்ணுக்குள்
புதைந்தன
மேலே நீட்டிக் கொண்டிருந்த
அவனது கைகளை
ஒரு உருவம் பற்றியது
சேற்றிலிருந்து மேலே வந்த அவன்
கண்களால் அவ்வுருவத்தைப் பார்த்தான்
வேதத்தையும், சடங்குகளையும்
மறுத்துப் பேசியதால்
தன்னுடைய கிராமத்தினரால்
கல்வீசித் துரத்தப்பட்ட
புத்தரல்லவோ இவர்
எனது கையினால் வீசப்பட்ட கற்களால்
காயமடைந்த கரங்களா
என் உயிரைக் காப்பாற்றியது
என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான்
உயிரற்ற ஓலைச் சுவடிகளில்
இறைவனைத் தேடினோம்
உயிர்களின் மேல் காட்டும் கருணையே
கடவுளெனப் போதித்த
கண்ணெதிரே நிற்கும்
ஜீவனுள்ள மனிதனை மறந்து!
 

க(னவு) விதை

கல்முனையான்
காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று

காதலனும் காதலில் தோற்றவனும்
புதிய, பழைய கனவுகளை மீட்க
பண்படுத்திய இதய மண்ணிலே
விதைக்கின்ற விதைகள்தான் இது

சில வேளை அழகு என்ற கறையானும்
வசதி என்ற எறும்புகளும்
குடும்பம் என்ற நத்தையும்
க(னவு)விதைகளை நாசம் செய்யும்

அப்போதே விடடுக்கொடுக்க தயாராக
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்
அன்புக் குழந்தையை மட்டும்

அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்
மற்றதெல்லாம் மாறிவிடும்
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற
வெள்ளப் பெருக்கினால்

காண வேண்டி

உமா
வியாபித்து இருந்தன
என் கனவுகள் புவனமெங்கும்
என்று உன்னை கண்டேனோ
அன்று முதலாய்
முகவரி கூட அறியா
உன் நினைவுகளுடனே
முடங்கி போயின அவை

வாகன நெரிசலில் கூட
பறந்து செல்லும்
பட்டாம் பூச்சியாய்
எங்கும்  உன்னை
தேடி  தொலைகிறது
என் மனம்!

என் வாழ்க்கை திருப்பத்தில்
தேடாமலே    கிடைத்தாய்!
கிடைத்தும்  தொலைத்தேன்!
தொலைத்தும்  தேடுகிறேன்!
தேற்றம்  அடைய  முயன்று
மறுபடி  தோற்கிறேன்
என்னிடமே  நான்!

என் இதய தோட்டத்தில்
காதல் மொட்டுக்கள்.
தவிப்பு  எனும் நெருப்பில்
ஜனகனின்  மகளாய்
தினம் தினம்
தீ குளிக்கிறது  என் மனம்
பூக்க  துடிக்கும்  அவைகளுக்கு
கண்ணீர் அல்ல
தரிசனம்  என்னும்
தண்ணீர் ஊற்றி  விட்டு  போ
உயிர் பெற்று விடும்

வானம் வரைக்கும்

எழிலி
ஓலமிட்டுக் கொண்டே
ஒருவாரம் மழை!

யாரோ அடித்த
குழந்தை போலே
உரக்க அழுகிறது !
யதார்த்தமாய்ச்
சொல்லிப் போனாள்
அம்மா!

ஓயாத உன்
திட்டு போலே
சத்தம் போடுது
அதிரடியாய்ச்
சொன்னது குழந்தை!

ஆராய்ந்ததில்
ஒரு உண்மை!

கோவையில் இறந்த
குழந்தைகளுக்காக-
தன் வருத்தத்தைக்
கொட்டித் தீர்த்தது
ஆகாயம்!

வானத்தையும்
எட்டியது சோகம்

விடியல்

நித்ய ஜெய ஜோதி
விடியல்

நீல வானில் உலா வந்த நிலவு
அழைத்துப் பேசியது பூங்காற்றை.
விசுக்கென்று கிளம்பியது காற்று
பசும் மரக்கிளைகளில்
ரகசியப் பேச்சு.
சருகுகள் பறந்தன
ஆற்றுநீர் விழித்துக்கொண்டாட்டம்
மலையருவி வீழ்ந்த இடமெல்லாம்
முத்துப் பரல்களாய்
நிலாத்துண்டுகள்
பூக்கள் எல்லாம் சோம்பல் முறித்தன.
விடியப் போகும் செய்தியை
இப்படிச் சொல்லி அனுப்பியது
குறும்பு நிலா.
சூரியனின் வருகையை-
'தாமரைக்கு'

நிறைவேறாத ஆசைகள்

கீதா மதிவாணன்
ஆழ என்னெஞ்சில் தைத்த
அயல்மொழிப் படத்தின் கதையை
அருகிருந்து உனக்கு நான்
அங்குலம் தவறாது சொல்ல வேண்டும் !

தூக்கத்தில் வந்தென்னைத்
துரத்திய மதயானையைப் பற்றித்
துடிக்கும் உதடுகளால் சொல்லித்
துயரத்தைப் பகிர வேண்டும்!

நித்தமும் என் நெற்றிப் பொட்டில்
நச்சென்று தெறிக்கும்
தலைவலியின் கொடுமையைத்
தவறாமல் சொல்ல வேண்டும்!

குட்டிப் பாப்பா செய்கின்ற
குறும்புச் சேட்டைகளையெல்லாம்
குறைவில்லாமல் சொல்லி, உன்னைக்
கிறுகிறுக்க வைக்க வேண்டும்!

உனக்குப் பிடித்தப் புடவையொன்றை
இந்நேரம் உடுத்தியிருப்பதையும்,
உன் மீதான என் காதலையும் சொல்லி
உன்னைத் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்!

அலைமோதும் என் ஆசைகளை
அப்படியே சொல்லிவிட,
தொலைபேசியில் அழைக்கிறேன்,
தொலைவில் வாழும் உன்னை!

"ஏழு நாட்களுக்குள் ஏனிந்த அழைப்பு?
அதிகமாய்ச் செலவாகுமே,
அடுத்தவாரம் பேசுவோமெ"ன்று
அவசரமாய்த் துண்டிக்கிறாய்!

நிராசையாகிப்போன என் நித்திய வலிகள்
கலையாத என் கண்மையைக்
கரைந்தோடச் செய்கின்றன

மாங்காய்ச்சோறும்

வித்யாசாகர்
அதெப்படி
இன்றிருந்து விட்டு
நாளை இல்லாதுபோய்விடுமெனக்கு
இத்தனை ஆசைகள்.. ஏன்?

என் ஆசைகளில் ஒன்றினைக்கூட
செறிக்கவில்லையே; எனது நரை.. (?)

நடந்து நடந்துத் தீர்ந்திடாத
எனது காலடிச்சுவடுகளும்,
காலத்தைச் சொட்டியும் தீராத
வியர்வையும்,
சொல்லிமாளாத ஏக்கங்களும்
எனக்குள் இருளுள்பொதிந்த முகத்தைப்போல
மரண நிறத்தில் தெரிகிறது;

ஏதேதோ செய்து
கிழித்துவிடும் மதப்பில்
நிறைவேறாமல் நீர்த்துவிட்ட
நிறைய கனவுகள்
பணத்திற்குள்ளும்
இடத்திற்குள்ளும்
பொருளிற்குள்ளும்
பதவிக்குள்ளும் அசிங்கமாகயிருப்பது தெரிகிறது;

அவைகளையெல்லாம்
எரித்துப்போடாத மூப்பிது; அசிங்கமான
வாழ்க்கை,
நிர்வாணத்தை மூடி மூடி வைத்த
நாற்றம் கொண்ட மனசு இது;

பசி
வலி
பயம்
கோபம்
அது பிடிக்கும்
இது பிடிக்கும்
மாங்காச் சோறு ருசி..
மன்னிக்கத் தெரியாது
மதிக்க மதிக்க வாழனும்
இந்த ஜாதி அந்த மதம்.. ச்ச.. ச்ச..
என்ன மனிதனோ நான் -

எனக்காகப் பாவம்
தெருவெல்லாம் பூப்பறித்து
வழியெல்லாம் போடப்போகிறார்கள்..

ஒ பூக்களே.. பூக்களே
ஓடிவாருங்கள்..

உங்களின் காம்பறும்முன் ஒருமுறைப்
பூத்துகொள்ளுங்கள்; நான் போய்விடுகிறேன்!!
போய்விடுகிறேன்

சில நாட்களில்

மதுரபாரதி
சில நாட்களில்
மனம்
மிக நொய்தாய் இருக்கிறது

ஏதோ ஒரு அநாதை சுவரத்திற்கும்
இனங்காணாத பரிமளத்திற்கும்
கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டு
வேடிக்கை பார்க்கிறது

பார்க்கமுடியாத அஸ்தமனத்தில்
மேக விளிம்பை நெருப்பேற்றிவிட்டு
சீறிப்பிரியும் கிரணங்களுக்கு
தேக மயிர்களாலே
அஞ்சலிக்க வைக்கிறது.

வயிறொட்டிய தெருநாய்
எதேச்சையாய்ப் பார்க்கும்
பொறிவிழிகளிலே
சகோதரம் விரியும்
சமிக்ஞை படிக்கிறது.

மனம் நொய்தான
இந்த நாட்கள்தாம்
இதர நாட்களின் பளுவை
சல்லிசாய்ச் சுமக்க
தோளுக்கு உரமூட்டுவன

கரையோர முதலைகள்

பாலக்குமாரன்
கரையோரம் முகவாய் வைத்து
கதவுபோல் வாயைப் பிளந்து
பல்லிடுக்கில் அழுகிப் போகும்
மாமிச எச்சம் கொத்த
பறவைக்குக் காத்திருக்கும்
முதலைகள் சோகத்தோடு
பறவையும் மாமிசம்தானே
பட்டுப் போல் வாசனைதானே
முதலைகள் தர்மம் மாறா
ஞானிகள் எந்த நாளும்
வஞ்சனையில்லாப் பிறவி
மனிதருள் மாமிச எச்சம்
குப்பையாய் கிடந்த போதும்
ஒரு நாளும் வாயைத் திறவார்
உள்ளதை வெளியே சொல்லார்
சுத்தத்தை விரும்பும் உயிர்கள்
தர்மத்தைக் கட்டிக் காக்கும்
மனிதரைத் தவிர இங்கே
அத்தனைப் பிறப்பும் சுத்தம்