மண்ணில் கால் பாவாமல்
நடக்கும் கன்னியின்
கல்யாணக் கனவுகள்
நான்கு வருடமாய் நீளுகிறது
வீட்டை விட்டு
ஓடிய அண்ணணுக்கும்
தறுதலையாய்த் திரியும்
தம்பிக்கும்
அவளைக் கரைசேர்க்கும்
எண்ணமில்லை
இரவில் குடித்துவிட்டு வரும்
தகப்பனோ
நாக்கூசுகிற அளவுக்கு
பெண்ணினத்தைச் சாடுவான்
வாக்கப்பட்ட நாளிலிருந்து
வடிச்சுக் கொட்டிக் கொண்டு தான்
இருக்கிறாள் அம்மா
வீட்டிலுள்ள பாத்திர பண்டங்கள்
ஒவ்வொன்றாய் அடகு கடைக்குப்
போய்ச் சேர்ந்தது தான் மிச்சம்
தினமும் கோயிலுக்குப் போகிறாள்
புகுந்த வீட்டு ஆண்களும்
இப்படி இருந்துவிடக் கூடாதென்ற
பயம் அவளுக்கு
இவளுக்கு ஒரு வழியக் காட்டக்கூடாதா
என்று அம்மா தினமும் அழுகிறாள்
இவற்றையெல்லாம்
பார்க்கச் சகிக்காமல் தான்
கடவுள் கல்லானாரோ
ப.மதியழகன்