தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அன்புத் தோழி

எஸ்.ஆர்.கே. நந்தன்
 ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம்
குழந்தைகளோடு வேடிக்கை பார்த்து
வாசலில் அமர்ந்திருப்பேன் நான்...
கடைக்குச் சென்று ஏதேனும்
வாங்கி வரச் சொல்லி
என் மெளனம் கலைப்பாய் நீ....
பரபரப்பான அலுவலகம் முடிந்து
அமைதியாய் வீடு திரும்புவேன் நான்...
மத்தியான உணவின் பக்குவம் கேட்டு
என் மெளனம் கலைப்பாய் நீ...
மாத இறுதி வெள்ளிக்கிழமையில்
ஆலயம் சென்று பிரகாரம் சுற்றி
முன் மண்டபம் அமர்வேன் நான்...
புதிதாய் கோரிக்கை வைத்து
என் மெளனம் கலைப்பாய் நீ...
முதல்தேதி சம்பளத்தில் அத்தனைக்கும்
பட்ஜெட் போட்டு பற்றாக்குறையில்
பரிதவிப்பேன் நான்...
ஆறுதல் சொல்லியபடியாய்
என் மெளனம் கலைப்பாய் நீ...
ஆனால் நமக்கிடையேயான
சின்னச் சின்ன சண்டைகளில் மட்டும்
எப்படி எதிர்பார்க்கின்றாய்?
நமக்கான மெளனத்தை நான்தான் முதலில்
கலைக்க வேண்டுமென்று...- 

வரவேற்பாளர்

சேவியர்
ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம்
உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.

தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன

போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு
ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.

கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே
பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.

எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.

பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.

விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.

அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு
மாலைப் பொழுதுகளிலும்.

சிரித்து வாழவேண்டும் என்று
கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட
கவலையாய் இருக்கிறது இப்போது.

மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண்வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய்

நட்புடன்

இதயவன்
காதலின் சின்னம்
இதயம் என்றால்?
நட்பின் சின்னம்
உயிர் ஆகும்!

காதல் கல்லறைக்குள்
வாழ்த்தால்
நட்பு கருவறைக்குள்
வாழும்!

காதலின் இலக்கணம்
காதலி என்றால்?
நட்பின் இலக்கணம்
நண்பன் ஆகும்!

காதல் கண்ணீரை
சிந்த வைக்கும்
நட்பு கண்ணீரை
துடைக்க வைக்கும்!

காதல் ஆசைக்குள்
துடிக்கும்
நட்பு இதய ஓசைக்குள்
துடிக்கும்!

என்றும் நட்புடன்
நான்

மானுடம் வெல்லும்

ப.மதியழகன்
பிணவறையில் உறங்குகின்றன
தெய்வங்கள்
பூசைகளை ஏற்றுக் கொண்டு
நாட்களை ஓட்டி இருக்கலாம்
பிரார்த்தனைகளை செவிமடுக்காமல்
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கலாம்
பக்தர்களின் பாலாபிஷேகத்தில்
உள்ளம் குளிர்ந்திருக்கலாம்
அடிமுடியைத் தேடியபடியே
சென்றிருந்தாலும் பிரச்சனையில்லை
அதிகாரமற்ற அலங்காரப் பதவியில்
வீதியுலா சென்றிருக்கலாம்
பாதாள அறை பொக்கிஷங்கள்
பறிபோய்விட்டதை எண்ணி
மனம் கலங்கியிருக்கலாம்
வரம் வாங்கி திரும்புபவர்களின்
வாகனங்கள் எப்படி
விபத்தில் சிக்குகின்றன
என்ற கேள்வி உதிக்காமல்
இருந்திருக்கலாம்
அவதாரங்கள் பக்கமே
தர்மம் இருந்ததாக
புத்தகங்களில் படித்திருக்கலாம்
விதி என்ற பெயரில்
மக்களின் வாழ்க்கையில்
விளையாடாமல் இருந்திருக்கலாம்
தான்தோன்றித் தனமாக
செயல்படாமல் இருந்திருந்தால்
சரண கோஷம் எழுப்ப
ஆட்கள் கிடைத்திருப்பார்கள்
மரணத்தை வைத்து
பூச்சாண்டி காட்டாமல்
இருந்திருந்தால்
எல்லா கடவுளர்களும்
தற்கொலை செய்து கொள்ள
வேண்டியிருந்திருக்காது
மரணத்தை ஒருவன்
வென்றால் கூட
கடவுளின் நிலை
கேள்விக்குறிதான்

குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று

கடுந்தோட் கரவீரனார்
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே

தமிழர்களே! தமிழர்களே

ருத்ரா
தமிழர்களே!தமிழர்களே!
உங்கள் முகத்தில் நீங்களே
கரி பூசி கொண்டீர்கள்.
அந்த அய்யன் வள்ளுவன்
அட்டைப்படத்தையும்
செம்மொழிப்பூங்காவின்
முகப்பையும்
அந்த பச்சைப்பொய்கள்
(பச்சை ஸ்டிக்கர்கள்)
மூடியிருக்கின்றனவே!
தமிழ் செம்மொழி என்றாலே
எரிச்சல் கொண்ட‌
எத்தர்கள்
உங்கள் கைகள் மூலம்
உங்க‌ள் முக‌ங்க‌ளிலேயே
க‌ரி பூசிக்கொண்டிருக்கிறார்க‌ள்.
இன்னொரு அதிர்ச்சியான‌
உண்மை உங்க‌ளுக்கு தெரியுமா?
வேத‌ங்க‌ளை தொகுத்த‌தே
வியாச‌ன் எனும் திராவிட‌ன் தான்.
நீல‌மேக‌ சியாம‌ள‌ வ‌ண்ண‌ங்க‌ளில்
அதாவ‌து திராவிட‌க்க‌ருப்பு வ‌ர்ண‌ங்க‌ளில்
பிற‌ந்த‌ திராவிட‌ர்க‌ளான‌
ராம‌னும் கிருஷ்ண‌னும்
ஆண்ட‌ திராவிட‌ பூமியே இந்தியா!
திராவிட‌நாடு திராவிட‌ருக்கே!
திராவிட‌ர்க‌ளின் பாட்டன்க‌ள் ஆன‌
த‌மிழ‌ருக்கே இந்தியா சொந்த‌ம்.
அரிய‌ என்ப‌தே ஆரிய‌ ஆயிற்று.
அரிய‌ இன‌மே
க‌ண‌வாய் வ‌ழியே புகுந்து
க‌ண்ணிய‌ம‌ற்ற‌ ஆக்கிர‌மிப்பில்
இன்னும் ந‌ம்மை
தின்ன‌த்துடிக்கிற‌து.
கண‌க்கீட்டாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை
வெறுமே
மூன்று ச‌த‌வீத‌ம் என்கிறார்க‌ள்.
முந்நூறு ஆண்டுக‌ளுக்கு முன்னே
ம‌ட்டும் வ‌ந்த‌
வெள்ளை ஆதிக்க‌ம் அல்ல‌ இது.
மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு
முன்னே வ‌ந்து
ப‌த்தாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும்
முன்னே இருந்த‌
இந்த‌ ப‌ர‌த‌வ‌ர்க‌ள் மீதும்
(இது சிந்து வெளித்திராவிட‌னின்
நெய்த‌ல் நில‌ப்ப‌ர‌த‌வ‌ன்)
அவ‌ர்க‌ளின் பார‌த‌த்தின் மீதும்
ச‌வாரி செய்துக்கொண்டிருக்கும்
ஆதிக்க‌ம் இது.
ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ள்
க‌ல‌ப்பில்
இந்த‌ திராவிட‌ இந்திய‌ன்
வெள்ளையாயும்
க‌ருப்பாயும்
வெள்ளையும் க‌ருப்பும் க‌ல‌ந்த‌
ப‌ழுப்பாயும்
இருப்ப‌து ம‌ட்டுமே
நிஜ‌மான மூவ‌ர்ண‌ம்.
பொய்யாய் நான்கு வ‌ர்ண‌ம்
பேசுப‌வ‌ர்க‌ள் தான்
சிவ‌ப்பான‌ செம்மையான‌
சிற‌ப்பான‌ ந‌ம் த‌மிழ் மொழி மீது
தார் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சாமி படத்தின் மேல்
இப்படி ஒட்டினால்
இந்துக்க‌ள் ம‌ன‌ம்
புண்ப‌ட்டு போய்விடும்
த‌மிழ‌ர்க‌ளின் பூமி இது.
வான் புக‌ழ் வ‌ள்ளுவ‌னை
இப்ப‌டி மூடி ம‌றைத்தால்
மனம் புண் ப‌டாத‌
த‌மிழ‌ர்களின்
தமிழ்நாட்டுப் பூமி இது.

த‌மிழ‌ர்க‌ளே! த‌மிழ‌ர்க‌ளே!
இன்னும் நீங்க‌ள்
தூங்கிக்கொண்டிருந்தால்
த‌மிழ்ப்பூஞ்சோலைவ‌ன‌ம்
தார்ப்பாலைவ‌ன‌ம் ஆகிவிடும்!
விழித்திடுங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளே

ஒரு மழை நாளில்

ரிஷபன்
மழை பெய்து ஓய்ந்த நிமிடம்..
அலுவலக ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்தேன்.
எதிர் மாடியில்
சுவற்றின் விளிம்பில்
அணில் ஓடியது.
செடிகளின் இடையே
குருவிகள் பறந்தன,
தரைக்கும் உயரத்திற்குமாய்.
பறவைகளுக்கு யாரும்
குடை பிடிப்பதில்லை!
அணில்களுக்கும் தான்..
ஈரம் படிந்த தரையைத் தொட
விரல்களால் முடியவில்லை..
இருந்தது மூன்றாவது மாடியில்.
மாலையில் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போது
நினைவிலிருக்குமா?
ஈரத்தரையும்..
ஓடிய அணிலும்..
குருவிகளூம்..
இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள் மட்டுமே
அப்போது என்னைச் சுற்றி
நிற்கும்

மழைக்கால காதல்

அருட்பெருங்கோ
முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…
 
- அருட்பெருங்கோ (http://blog.arutperungo.com)

சுந்தர உண்மை

தமிழ்தாசன்
கைதட்டல் வேண்ட
பொய்யின் அம்மணத்தை
சபைகளில் படமிடுகிறோம்.
இரத்தின ரவிக்கை உடுத்தி
உண்மைகளை ரகசிய பெட்டிகளில்
அடைத்து விடுகிறோம்.
சூனிய பொய்களுக்கு இருக்கும் சுதந்திரம்
சுந்தர உண்மைகளுக்கு இல்லை

நம் காதல்

தமிழ்மதியன்
உன் உச்சந்தலைபரப்பு
சோலையில்
விழித்தெழுந்து,

உன் நெற்றிபரப்பு
தகவல் பலகையில்
என் நிகழ்ச்சி நிரலை
தெரிந்துகொண்டு,

உன் விழிகளின்
சூரிய ஒளியில்
என் பயணத்தின்
பாதையை அறிந்து கொண்டு,

உன் உதடுகளின் அசைவினால்
உற்பத்தியாகும் கட்டளைகளை
கவனத்தில் கொண்டு,

உன் காதின் பொன் வளையங்கள்
எழுப்பும் ஓசையின்
உதவி கொண்டு,

உன் இதயத்தை மட்டுமே
இலக்காக நினைத்து கொண்டு,

இவ்வுலக முடிவுவரை
நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம்...
நம் காதல்