என்னை மறந்த நிலையில்
எச்சில் வடித்துத் தூங்கிய
ஓர் இரவில்
எனக்குள் இருந்த
‘நீ’யும் நானும்
பேசிக் கொண்டோம்
‘நலமா?’ என்றாய்
‘இருக்கிறேன்’ என்றேன்
‘இருப்பது எதற்கு?’ என்றாய்
‘இனியொரு நாள் காண’ என்றேன்
‘காண்பது எதற்கு?’ என்றாய்
‘இன்று போல் வாழ , நாளையையும்’ என்றேன்
‘இன்றென்ன வாழ்ந்தாய்?’ என்றாய்
“முழுதாய் விடியும் முன் எழுந்தேன்,
மூச்சுவாங்க தண்ணீர் இறைத்தேன்,
முற்றம் தெளித்துக் கோலமிட்டேன்,
வீடு துடைத்தேன்
துணிதுவைத்து உலர்த்தி
உலர்ந்ததை மடித்தேன்
மூன்று வேளை சமைத்தேன்
பாத்திரம் துலக்கி அடுப்படி மெழுகினேன்
பரிமாறி பசியாறினேன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சொல்ல மறந்த வேலைகளும் செய்தேன்” என்றேன்
‘வாழ்ந்ததைக் கேட்டேன் –
செய்த வேலைகளைச் சொல்கிறாய்
இது தான் உன் வாழ்க்கையா?’ என்றாய்
‘சுருக்’கென்றிருந்தது எனக்கு
‘நீ யார்?’ என்றேன்
‘இதுவரை நீ வாழாத வாழ்க்கை’ என்றாய்
மறைந்தாய்
விடிந்தது – எழுந்தேன்
தண்ணீர்க் குடம் தூக்கி
கிணற்றடி நடந்தேன்
”வாழ்வது எப்படி?”
என்று சிந்தித்துக் கொண்டே
க.காந்திமதி