இறந்தவனின் ஆடைகளை
எப்படி பராமரிப்பதென்றே
தெரியவில்லை
இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்து கொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்
அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமில்லை
தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பார உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்
இறந்தவனின் ஆடைகளை
அழித்து விடலாம்தான்
இறந்தவனைத்
திரும்ப திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன
இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது
மனுஷ்ய புத்திரன்