தத்தளிக்கும் ஓடங்கள்
கவிஞர் வல்லம் தாஜுபால் (தஞ்சை தாமு)
இளமை கரையுது வீணில்! - இனி
என்று வரும்இள வேனில்?
ஜன்னல் கம்பியில் சாய்ந்தபடி
ஜரிகைக் கனவுகள் மேய்ந்தபடி
இன்னும் சிந்தக் கண்ணீரின்றி
ஏங்கி இளைக்குது பருவக்கொடி!
திருமணம் என்பது வியாபாரமா? - வரும்
உறவுகள் எல்லாம் வெளிவேஷமா?
கூவத்தில் கூலி கொடுத்துக் குளிப்போர்க்குக்
கங்கையில் குளிக்கப் பணம்வேண்டுமா?
முகூர்த்த தேதிகள் கிழிகிறதே! - மூன்று
முடிச்சுக்கு வழியின்றிக் கழிகிறதே!
கன்னியர் விடுகிற பெருமூச்சுக் காற்றில்
கப்பல்கள்கூடக் கவிழ்கிறதே!
கல்யாண நிச்சயம் சொர்க்கத்திலே! - அதன்
கதவுகள் திறப்பது ரொக்கத்திலே!
வாலிப ரோஜா வாடிடும் முன்னே
வருமோ வண்டு பக்கத்திலே?
இதயம் மணக்கப் பூத்திருந்தாள்! ஓர்
இளைஞன் மணக்கக் காத்திருந்தாள்!
இரவும் பகலும் இமைகள் நனைய
எத்தனை ஊர்வலம் பார்த்திருந்தாள்!
கால காலமாய்க் காயங்கள்! பெண்
கதைகள் முழுவதும் சோகங்கள்!
கரைசே ராமல் மழையிலும் புயலிலும்
தத்த ளிக்குதே ஓடங்கள்!
ஜாதகம் சரியாய் இருக்கிறது!
ராசிகள் பொருந்திச் சிரிக்கிறது!
மோதிரம் வளையல் சங்கிலி தோடென
முப்பது பவுன்தான் தடுக்கிறது!
பெண்ணைச் சரக்காய் நினைக்காதே!
பேரம் பேசி மணக்காதே!
கண்ணிய மில்லா வருமா னத்தால்
புண்ணிய மில்லை மறக்காதே!