தலைகீழான தமிழன் - பாவலர் கருமலைத்தமிழாழன்

Photo by Jr Korpa on Unsplash

நாடிழந்த இலங்கைமன்னன் மான வர்மன் நாடுதன்னை மீட்டளிக்கக் கையை ஏந்தி நாடிவந்து தமிழ்நாட்டுக் காஞ்சி மன்னன் நரசிம்ம பல்லவனை வணங்கி நின்றான் தேடியவன் வந்தபோது காஞ்சி மீது தெவ்வரான சாளுக்கியர் படையெ டுக்கக் கூடியவர் திட்டமிட்ட செய்தி தன்னைக் கூரறிவு ஒற்றனவன் உரைத்த நேரம் ! தன்படையை அணியமாக வைத்தி ருக்க தடந்தோளன் நரசிம்ம பல்ல வன்தான் தன்வீரப் படைகளினைப் பார்வை யிட்டுத் தகுவுரையால் எழுச்சியினை ஊட்டி விட்டு மன்னுபுகழ் மாமல்ல புரத்தை நோக்கி மானவர்மன் பின்தொடரச் செல்லும் போது நன்பகலாம் கடும்வெயிலில் சாலை யோரம் நல்லிளநீர் விற்பதினைப் கண்டு நின்றான் ! இளநீரின் காயொன்றை வெட்டச் சொல்லி இதழ்களிலே வைத்தபோதோ உப்பாய் கரிக்க இளநீரைக் கீழ்வீச முனைந்த போதோ இருகையால் மானவர்மன் அதனைப் பெற்றே உளம்மகிழப் பருகியதைக் கண்ட மன்னன் உளம்துடிக்க என்எச்சில் உப்பு நீரை இளவரசே நீர்எதற்காய் பருகி னீர்கள் இனியகாய்கள் உள்ளபோதே என்று கேட்டார் ! அரசிழந்தே உதவிக்காய் ஏங்கி யிங்கே அண்டியுள்ள நானிதனைப் பார்க்க லாமா இரக்கமுடன் எனைப்பேணும் நீங்கள் தந்த இளநீரை எறிவதுவும் முறையோ என்று சிரம்தாழ்ந்தே அவனுரைத்த பதிலில் மானம் சிதைந்ததாழ்வு மனப்பான்மை தனையு ணர்ந்த நரசிம்ம பல்லவன்தான் உளம்நெ கிழ்ந்தே நட்புகரம் நீட்டுதற்கு முடிவு செய்தான் ! காஞ்சிமீது சாளுக்கியன் படையெ டுக்கக் காத்துள்ளான் என்பதினை அறிந்தி ருந்தும் காஞ்சிதன்னைக் காத்திருந்த படைகள் தம்மைக் கருணையுடன் இலங்கைக்கே அனுப்பி வைத்துப் பூஞ்சோலை போல்இயற்கை சூழ்ந்தி ருந்த புகழ்பூத்த அநுராத புரத்தை மீட்டு வாஞ்சையுடன் தானளித்த வாக்கிற் கேற்ப வர்மனுக்கு முடிசூட்டி அமர வைத்தான் ! எச்சிலினை உண்டவன்தான் தமிழர் தம்மை எச்சில்நாய் போலின்று நடத்து கின்றான் ! பிச்சையாக நாடுதன்னைப் பெற்ற வன்தான் பிச்சையெனத் தமிழரினை விரட்டு கின்றான் ! உச்சரிக்கும் இலங்கையென்றும் தமிழர் தம்மின் உரிமையுடை நாடென்றே தோள்கள் தட்டிப் பச்சைரத்தத் தமிழரெல்லாம் எழுந்தால் போதும் பாரினிலே தோன்றிவிடும் தமிழர் நாடு !
பாவலர் கருமலைத்தமிழாழன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.