தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நின் நினைவுகளில்

பாரதிபிரியா
 
சின்னச்சின்னதாய் நீ விட்டுச்சென்ற
நினைவுகளால் நிதம் வாழ்கிறேன்...
கரையில்லா உன் அன்புக்கு முன்னே
கவலையின்றி உன் நினைவில்!

பார்த்துப் பார்த்து நீ  தந்த
கனவுகளெல்லாம் ... நீ
என் இதய பெட்டிக்குள் இருப்பதுபோலே
பத்திரமாக.... நீ வரும் வரையில்!

சேர்ந்தே நடந்து சென்றோம்....
நினைவிலும் கனவிலும்.....
தனியே கடக்கிறேன்....
ஒவ்வொரு பொழுதுகளையும்!

வறண்ட நிலமாகத்தான் நானிருந்தேன்
வற்றாத அன்பு தந்தாய்...
உன் நினைவுகளின் வலிமைக்கு முன்னே..
நான் உடைந்து போகிறேன்..!

நெருங்கி நொறுங்கி போவதுதான்
உன் அன்பின் பரிசானாலும்....
இன்னாளும் என்னாளும் உனக்காக
உன் நினைவில் நான் ....!
 

காந்த ஈர்ப்புச் சொல்

பனசை நடராஜன்
வாலிபத்தின் ஆரம்பத்தில்
போதை தரும் கள்,
வீழ்ந்த பின்னே உள்ளத்தினைக்
காயமாக்கும் முள்,
ஆண்பெண் பேதமின்றி
தாக்கும் அம்புவில்,
என்றபோதும் எல்லோருக்கும்
எண்ணும்போதே தித்திக்கும்
காதல் என்ற அந்த
காந்த ஈர்ப்புச் சொல்

கடுதாசி

எழிலி
செம்பவல்லிஅறிஞ்சங்குப்பம்,
(ஆறாம் வகுப்பு)

அன்புள்ள அப்பாக்கு,

பள்ளிக் கூடம்  தெறந்தாச்சு!
பாடமெல்லாம் புதுசாச்சு!

பள்ளிக்கூட
உடுமாத்துத் துணியாட்டம்
பாடம் மொத்தமும் ஒண்ணாச்சு!

பட்டணத்தத்தாண்டி  நம்ம
ஊரும்   தெரிஞ்சாச்சு!

நம்மூரு இன்னைக்கு
பேப்பர்ல வந்திருக்கு !

என்னைக்காவது ஒரு நா(ள்)
என் படமும் டி.வி.யில!

இன்னாரு மகதா(ன்)
மாநிலத்துல மொதன்னு
அன்னைக்கு
ஒம்பேருக்கும்,நம்மூருக்கும்
பெருமை வரும்  நிச்சியம்!

' சமச்சீர்'  கல்வி
சகலருக்கும் பொதுவாச்சு!
சத்துணவு  (திட்டம்)போல
புத்திக்கு ஊட்டமாச்சு!

என்ன நா(ன்) சொல்லுதேன்னு
ஒனக்குப்
புரிஞ்சிதோ தெரியலை,நீ
அடுத்தமொற   வரையில
கட்டாயம்   நா(ன்)
பேசுவேன்  இங்கிலீசுல!

புறப்படறேன்
இப்போ  நேரமாச்சு,
ஆறாம் வகுப்புப்
புத்தகம்
வாங்கணும் நாழியாச்சு!


பெறுநர்,
கொளுத்து - கோயிந்தன்,
துபாய்

மனிதம்

சு.மு.அகமது
வருவது பேருந்து
பரிச்சயப்பட்ட பேருந்து
கடக்கையில்
சதுர வெளிச்ச அட்டகையில்
பரிச்சயப்படாத முகங்கள்

அதில்...
பரிச்சயப்பட்டதாய்
ஓர் புன்முறுவல்

இன்னும்
மீதமிருக்கிறது நம்முள்
மனிதம்
இரவல் கவிதையின்
அழகிய வரிகளாக

தொலைந்தவை

நா.விச்வநாதன்
பாண்டியாடத் தெரியாதென
வீடியோ கேம்ஸுக்கு ஓடினாள்
பம்பாயிலிருந்து வந்த மாமா பெண்.

கிட்டிப்புள் ஆடாமலே
கம்ப்யூட்டர் எஞ்சினியராகிவிட்டான்
என்னோடு படித்த கணேசன் -
பிரபந்தம் மறந்துவிட்டு
பாரீஸ் போன மகனின் கடிதத்துக்காய்
ஈசிச்சேரில் காத்திருப்பார் நரசிம்மாச்சாரி
திருமண் இட்ட அடையாளம் மட்டும்
அழியாது தெரியும் லேசாய்-

மழையில் நனைந்தால்
உடம்புக்காகாதென்று
உள்ளே விரட்டுவாள் அம்மா -
கெட்ட வார்த்தைகளைப் பேசியே
பஞ்சாயத்து முடிக்கும் தாத்தாவிற்கும்
வயசாச்சு -
மூலையில் பழந்துணிகளோடு அவரும் -
அரசியல் கொடிகள் ஏழெட்டு பறக்கின்றன
ஏற்றியவர் ஒவ்வொருவரும்
கட்சி மாறியதறியாமல் -

சருகை உதிர்த்து பூமியைமூடும்
வேப்பமரத்தை வெட்டியாயிற்று
நல்ல விலைக்கு -
ஈரப்புடவை உடலை அழுந்த
தெருவை அடைக்க
குளித்து திரும்பும் குமரிப்பெண்களும்
காணாத சூனியம் தெருவெல்லாம் -

விளக்கின்றி இருட்டுக்குள் தவிக்கும்
பிள்ளையாருக்குத் துணையாய்
எல்லோரும் எதையோ தொலைத்ததுபோல்
சந்தோஷம் தொலைத்த நான்

சின்ன சின்ன ஆசைகள்

இதயவன்
நான்...
வானில் பறந்து
மேகமாய் ஓட
வேண்டும்!

நான்...
நிலவில் விழுந்து
வின்மினாய் விழ
வேண்டும்!

நான்...
தென்றலில் புகுந்து
புயலாய் மாற
வேண்டும்!

நான்...
மலரில் நுழைந்து
தேனாய் சிந்த
வேண்டும்!

நான்...
கடலில் அலைந்து
கரையாய் ஒதுங்க
வேண்டும்!

நான்...
பகலில் பட்டாம்
பூச்சியாய் பறக்க
வேண்டும்!

நான்...
இரவில் மின்மினி
பூச்சியாய் திரிய
வேண்டும்!

நான்...
தாமரை இலையில்
பனித்துளியாய் தூங்க
வேண்டும்!

நான்...
மரத்து கிளையில்
இலையாய் தொங்க
வேண்டும்!

என்றும் நான்
இயற்கை உடன்
வாழ வேண்டும்

மழலையின் மொழியில்

எழிலி
அப்பாவின் ஞாபகம்
வரும்போதெல்லாம்

அலமாரியில் இருக்கும்
இதைத்தான்
அடையாளம் காட்டுவாள்
அம்மா!

வெளிநாட்டிலிருக்கும்
அப்பாவுக்கு - என்
ஏக்கத்தின் 
அடையாளமாக
எதை?...

தொலை பேசியில்
முகம் தெரியும்
நூதன கண்டுபிடிப்பு
வந்து விட்டதாமே!

உள்ளம் தெரியும்
உணர்வைச்சொல்லும்
கருவி வந்துவிட்டதா?

கேலிப் பேசும் என்
பள்ளிப் பிள்ளைகளின்
கேள்விக்குப் பதிலாய்
அப்பாவிடமிருந்து  எப்பொழுது?

காதல் காசுக்காக விற்கப்படுகிறது

ரமேஷ் சிவஞானம்
நினைவுகள் எழுதிய
நிலவு
வெட்கித் தலைகுனிந்து
புருவம் உயர்த்தி
நீ பார்த்த அந்த
பார்வை முட்கள்
சிரிப்பு வரைந்த
குழி விழுந்த கன்னங்கள்
உன் புன்னகை உதடுகள்

ரசித்தது உண்மை

பருவம் படர்ந்த
முனைப்புகள்
நான் விழுந்த
அந்த தடங்கள்

வெளிச்சம் காட்டிய
உன் மனது
விழுந்துகொண்ட
என் மனது

நீ உடுத்திக்கொண்ட "சுடிதார்"
உன் "சோல்" லில் சுற்றிக்கொண்ட
நானும்....
என்னைப்பற்றிக் கொண்ட
நீயும்....

உன்னோடிருந்த அந்த நாட்கள்
நம்மை எழுதிக்கொண்டது
"காதல் பறவைகள்" என்று
இப்போது எழுதி்க்கொள்ளட்டும்
அது ஒரு நிலாக்காலமென்று

என்னை உடுத்திக்கொண்ட
என் குடும்பம்
என் காதலை விட
கரன்சியைப் பார்க்கிறது
என் தங்கச்சியின் சீதனத்துக்காய்

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

என்மானம் விற்கப்படப்போகிறது
முடிந்தால்
கேள்விப்பத்திரத்துக்கு
விண்ணப்பித்துக்கொள்...

கிடைத்தால் மீண்டும்
துளிர்க்கும் நம் காதல்

வெடக்கப்படுகிறேன்
துக்கப்படுகிறேன்
முகம் புரியா யாருக்கோவாக
நான் அறியா எவளுக்கோவாக
என் காதல்
புதைக்கப்படப்போகிறது

என் காதல்
காசுக்காக
கரைக்கப்படப்போகிறது

காதல் தேவதையே
என்னை தூக்கிலிடு

அதற்கு முன்
என்னை காட்டிய
எனது குடும்பத்தை பற்றி
சற்றே .....
யோசித்துக்கொள்
என் குடும்பத்தின்
வாழ்க்கை புகையிரதம்
இந்த தண்டவாளத்தால் தான்
ஓட்டப்படுகிறது..

நீங்கள் சொல்லுங்கள்...

பாழாயப்போன என்
காதல்
நாசுக்காகவா?
என் வாழ்க்கை
காசுக்காகாகவா?

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்

எங்கே சென்றாய் ? தனிமையில் நான் இங்கே

ஜெயந்த் கிருஷ்ணா
தூரமாகிறாயா இல்லை
மறைகிறாயா
என்னை தனியாக விட்டு
போகிறாயா.

எதற்காக நாம்
சேர்ந்தோம்?
எதற்காக நாம்
பிரிகிறோம்?

அந்த கண்கள்
அந்த புன்சிரிப்புகள் என்றும்
என் மனச்சிறையில்

தெரியாமல் தேடுகிறேன் என்றும்
காதலாய் நீ
என் அருகிலிருந்தாலும்.

எங்கே மறைந்தாய் நீ
ஒரு வார்த்தை கூட சொல்லாமல்
தூரமாய்.

காண்கிறேன் உன் முகம்
கேட்கிறேன் உன் குரல்
இடறாமல் பதறாமல் என்றும்.

தேவதையாய் நீ
வரும் நாள் பார்த்து
தனிமையில் நான் இங்கே

சிட்டுக் குருவியைப் போலே

சி.சுப்ரமணிய பாரதியார்
விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று