நான் வெகுவாய் அறிகிறேன்
உன்னோடான என்
ஒரு தலை நட்பை!
நீயும் ,நானும் மழை நாளில்
கை கோர்த்து செல்லும்
ஆத்மார்த்த நண்பர்கள் இல்லை.
உனக்கும் எனக்கும்
சோர்வாய் துவள்கையில்
தோள் சாய்ந்து கொள்ளும்
கட்டாயம் இல்லை.
இருந்தும்
நீ எனை
கடந்து செல்கையில்
வீசி விட்டு போகும் உன்
கனநேர பார்வையில்
கண்டு இருக்கிறேன் என் மீதான
உன் அக்கறையை!
உதடுகள் மலர்ந்து நீ
என்னிடம் எதுவும் பகிர்தல் வேண்டாம்
உன் கண்களின் பரிபாஷனையை விட
எது உன்னை என்னிடத்தில்
இயல்பாய் இணைத்திட இயலும்?
உள்ளுனர்வுகளால் மட்டுமே
உணர்கிறேன் உனக்கும்
எனக்குமான நட்பை
மழை முடிந்தாலும்
சாலை ஓர மரஇலை
உதிர்த்திடும் ஒரு துளி ஈரமாய்,
தனியான ஜன்னல் ஓர பயணத்தில்
முகத்தை முத்தமிடும் வாடை காற்றாய்,
பழைமை தாங்கிய புத்தகத்தில்
பதுங்கி இருக்கும் மயிலிறகாய்,
இவை எல்லாம் எப்போதாவது தான்
எனினும்
என்றுமே இனிமையானவை
அவ்வண்ணமே உன் நட்பும்

உமா