தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நல்லதோர் வீணைசெய்தே

சி.சுப்ரமணிய பாரதியார்
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

வீழ்ச்சி

சு. வில்வரெத்தினம்
என்னுள் எழுந்து
பிளிறிற்று யானை

மதம் வழிய முகம் பிய்ந்து
தும்பிக்கையால் விகாரமாய்
பீறிற்று காமம்.

மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய
மோப்பம் பிடித்தலைந்தேன்
தும்பிக்கை நீட்டி.

வேலி மீறினேன்
கீறிய முட்கள்.
தடித்த காமத் தோலில்
தைக்குமா என்ன?

வேகநடை.
வேலியினுள் விதைத்திருக்க
பண்பாட்டுப் பயிர்கள்
காலடியில் துவம்சமாச்சு.

குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை
வளைத் தெடுத்துத் தழுவ
வழிந்த மதநீர்
வடிகால் தேடிக் கலந்தது.

தின வடங்கிற்றா?

தும்பிக்கை உட்சுருள
பூசி மெழுகிப் பண்பாடு காத்த
உருத்திராட்சப் பூனையாய் மெல்லப்
பதுங்கிப் பதுங்கி
வேலி ஓரமாய் ஓசைகாத்து
வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்
கீறியது மீண்டும் முட்களா?மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின.
மனச் சாட்சியை ஊடுருவி.

அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.

படைவீடிருந்த சிம்மாசனம்
குடைசாய
குப்புற வீழ்ந்தேன்

கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது.
"யானோ அரசன்? யானே கள்வன்."

மௌனம் சம்மதம்

சி. செல்வம்
உண்மையில்
மௌனம் சம்மதமில்லை

சுயநிலை
சூழ்நிலை
நிமித்தமாய்
வெளிப்படுத்த இயலா
அன்பை, அழுகையை
சிரிப்பை, வெறுப்பை
வெறுமையை, பிரிவை
வலியை, வாழ்த்தை
உள்ளடக்கிய
ஊமை நிலை.

உணர்வுகளின்
கெட்டிப்பட்ட திடநிலை
மௌனம்.

மௌனங்கள்
சம்மதங்களென்று
கூறாதீர்
அதை
மௌனங்கள்
சம்மதிப்பதில்லை

ஒவ்வொரு துளியிலும்

மணிமேகலை
தேடுகின்ற கண்களுக்கு தென்றல் போல்
வந்து போகும் உறவுகள்...
கட்டிலில் உறவாட தொட்டிலில் இசை பாட...
தொடந்து வரும் தொப்புள் கொடி உறவு...
மண்ணில் விழுந்த விதைக்கு...
மழைத் துளி உறவு...
படரும் கொடிக்கு போடும்
பந்தல் உறவாகுமா? வேலி உறவாகுமா?
சும்மா கிடந்த கொட்டாங்கச்சிக்கு - அதற்கு
பிடி வைத்து அகப்பை ஆக்கிய ஆசாரிக்கு
அவன் தொழில் உறவாகுமா?
அதை விற்கும் பணம் உறவாகுமா?
கல்மேல் உளி வைத்தால்...
சிலைக்கு வலிப்பது இல்லை...
உளிக்கும் வலிப்பது இல்லை - அவன்
அடித்து செதுக்கும் கைகளுக்கு வலிக்கும்...
அது தெய்வ சிலையாகிவிட்டால் - அதை
வணங்க கைகள் மறுப்பது இல்லை...
அடி வாங்கிய வலியை நினைப்பது இல்லை...
பத்து பிள்ளை பெற்றாலும் - தகப்பன்
அவன் முதல் எழுத்தை தர மறுப்பது இல்லை...
ஒவ்வொரு வியர்வைத் துளியைச்
சிந்தியதை நினைப்பது இல்லை...
தாய் கருவறையைத் தனி தனி இடமாக
ஒதுக்குவது இல்லை...
பாசத்தைப் பிரித்துக் கொடுப்பது இல்லை...
பெருக்கி கொடுக்கிறாள் - சில நேரங்களில்
சில பிள்ளைகள் தராசும் எடை போடும்
கல்லாக மாறி விடுகிறார்கள்

உனக்கெனவும்

முபாரக்
 எனக்கென நான்
என்ன வேண்டிக்கொள்ள முடியும்?

நான் தேடிவரும்
நீ எனக்கென மட்டும் இல்லை

மேலும்
உனக்கெனவும் இருக்கிறது
சில துயரங்கள்

எனினும் அது
உனக்காக காத்திருத்தலைப் போல
கடினமானதல்ல

பருவமெய்திய பின்

மன்னார் அமுதன்
பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்

வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா

மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..

முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு

துக்கம் தாழாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா

யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா

இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை

அவள் ரசித்த கவிதை

அனிஷ்
காற்றோ மரங்களோடு
கைகலப்பு செய்துகொண்டிருந்தது!

சிட்டுக்குருவிகளின்
சிணுங்கல் சத்தம்...

சூரிய ஒளியோ
சுருங்கிப்போய்
நிலவு வர
வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.

மாலைநேரம் மங்கிப்போய்
மெல்லமாய்,
இரவு தொடங்கும் தருணம் அது!

அந்த பூங்காவில்
அவனும் அவளும்...

ஒட்டிப் பிறந்த
இரட்டை குழந்தைகள் போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.

இருவரும் காதலிக்க தொடங்கி
இரண்டோ மூன்றோ வருடங்கள்
ஆகியிருக்கலாம்.

சின்ன கொஞ்சல்கள்!
செல்ல கோபங்கள்!!
மெல்லிய வருடல்கள்!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
நீண்டுகொண்டிருந்தது.

சட்டைப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
காகிதத்தை எடுத்தான் அவன்!

மூன்றாய் மடிக்கப்பட்டு
முழுவதும் கசங்கிப்போயிருந்தது,
அந்த காகிதம்.

ஒருவேளை அது
கண்ணே மணியே என்ற
காதல் கடிதமாய் இருக்குமோ?
யோசித்தாள் அவள்!

அவன் பிரித்துப் படித்தான்...
அவளோ மெல்லமாய் சிரித்தாள்!

கடிதம் அல்ல அது!
கவிதை!!

வழக்கமான கவிஞர்களின் பல்லவி!
நிலவு நீ...
நீலநிற வானம் நீ...

அவளுக்கு சலிக்கவில்லை...
அதையும் ரசித்தாள்!

அங்கங்கே மெல்லமாய்
அங்கமெல்லாம் சிவக்க வெட்க்கப்பட்டாள்.

கடைசியில்
கவிதை வாசித்து முடித்தான் அவன்...
அவளோ புன்னகைத்தாள்!

கவிதை எப்படியிருக்கு
என்றான் அவன்.

மறுநொடியோ
மனதார பாரட்டினாள் அவள்.

கவிதை எழுதிய - இந்த
கைகளுக்கு
ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்
என்றாள் அவள்.

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை!
என்
நண்பனின் காதலியின் முத்தங்களை
என் கைகள்
என்றுமே
ஏற்றுக்கொள்ளாது என்று

என் மகள்

சேவியர்
மெல்ல மெல்லச் சின்ன
மல்லிகைக் கால்கள் பின்ன
சின்னச் சின்ன சின்னம் வைத்து
அல்லி நடை போடுகிறாய்.

ஒற்றைப் புன்னகையில்
உலகை விற்று விட்டு
பிஞ்சு விரல் அஞ்சிலும்
வெற்றிப் பத்திரம் நீட்டுகிறாய்.

என் மீசைக் கயிறு பிடித்து
தோள் மலை ஏறுகிறாய்.
கன்னப் பிரதேசங்களில்
நகப் பள்ளம் தோண்டுகிறாய்.

செதுக்கிச் செய்த சின்னச் சூரியனாய்,
உன் கண்களின் சிரிப்பு
வாசல் முழுதும் சிதறிக்கிடக்கிறது.

பதுக்கி வந்த பகல் நிலவாய்
உன் குளிர்த் தழுவல்கள்
படுக்கை முழுதும் பரவிக்கிடக்கின்றன

செம்பருத்திப் பாதங்கள்
சமயலறைவரை
சிறு செம்மண் கோலம் வரைய,
தளிர் மாவிலைக் கைதரும்
ரேகைச் சித்திரங்கள்
வெள்ளைச் சுவரை அழுக்காக்கி அழகாக்கும்.

நீ
பிறப்பதற்குத் தவமிருந்தது ஒருகாலம்,
உன்
ஒவ்வோர் அசைவுகளும்
வரம் தருவது நிகழ் காலம்.

பிஞ்சுக்கன்னங்களை நெஞ்சில் தாங்கி,
ரோஜாத்தீண்டலாய் விழும்
மெல்லிய உன் மூச்சுக் காற்றில்,
மனசுக்குள் சில
மனங்கொத்திகளை பறக்கவிடுகிறேன்.

உன் அழுகைக் கரைகளில்
கரைந்து போகிறேன்.
உன் மெல்லிய உதைகளில்
மென்மையாய் மிதக்கிறேன்.

என் வாலிபங்கள் காத்திருந்தது
உன் வரவுக்காய் தானோ ?
நான் சந்தித்த
மகிழ்வுகளின் மாநாடு தான்
உன் வரவோ ?

காலங்களைப் பிடித்திழுக்கும்
உன் கரங்களுக்குள் கடிவாளமாகி
உன் கண்களோடு கலந்து போய்
கவியரங்கம் நடத்துகிறேன்.

உன்
முத்தங்களுக்காய் மனுச்செய்து
நான் மண்டியிடும் போதெல்லாம்
பக்கத்து வீட்டுச் சன்னல்
சத்தமாய் ஒலிபரப்பு செய்யும்.
‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” என்று.

உனக்கும் எனக்கும்
உயிர்ப்பாய்ச்சல் நடக்கும் போது
ஊர்ப்பாய்ச்சல் நமக்கெதுக்கு ?
தயங்காமல் தாவிவந்து
என்னிரு தோளில் தொங்கி
இன்னொரு முத்தம் தந்துவிட்டுப் போ.

இறுக்கமாய் சிறிது நேரம்
இருந்துவிட்டுப் போ

அந்த ஒருவன்

மன்னார் அமுதன்
உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்

எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தாய்

இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில் -உன்
ஒற்றைத் தலைவலியையும்
இணைத்துக் கொண்டாய்

பழகியதைப் போலவே
ஏதோ ஒரு நொடியில்
பிரிந்தும் சென்றாய்

ஏன் பழகினாய்
ஏன் பிரிந்தாய்
எதுவுமறியாமல்
அலைந்த நாட்களில் தான்
மீண்டும் வருகிறாய்
மற்றொரு காதல் மடலோடு

எப்படி ஏற்றுக் கொள்ள
நானலைந்த தெருக்களில்
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்

புத்தாண்டே உன்னால் முடியுமா ?

மு.வெங்கடேசன்
புத்தாண்டே
புதுமையாய்
பூத்திருக்கும்
பூச்செண்டே

நீ
ஓவ்வொரு நாளையும்
ஓவ்வொரு பூவாய்
உதிர்கின்றாய்

அந்த
உதிரளுக்காக எங்களை
உறுதிமொழி ஏற்க
உந்துகின்றாய்

புலமையான
புத்தாண்டே-நீ
புதுமை
படைகனுமென்றாய்

அதற்காகத்தான்
உனக்கே  உறுதிமொழி .
ஏனெனில் நான்
புது கவிஞன் .

காலகாலமாய்
கர்நாடகம் தாண்டாத
காவிரியை கடக்கவைப்பேன்
என்று உறுதிமொழி எடு

உன்
மூதாதையர்களால் முடியாத
முல்லை பெரியாரை
முடிதுவைப்பேன் என்று
உறுதிமொழி எடு

தலைமுறை தாண்டிய
தமிழ் ஈழ
தகராரை தவிடுபொடியாக்குவேன்
என்று உறுதிமொழி  எடு

போதும்
இதுபோதும்-ஏனெனில்
தலைசுமை ஏற்றமாட்டான்
தன்மான தமிழன்

புத்தாண்டே
இந்த மூன்றில்
ஒன்றையாவது  முடித்துவைக்க
உன்னால் முடியுமா ?