நீ தானா - செண்பக ஜெகதீசன்

Photo by Pawel Czerwinski on Unsplash

வேடங்களில்
மூடி வைத்த
மேடை நாடகமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
மண்ணில்
மனித வாழ்க்கை !

உறவின் மடியில்
உல்லாசத்தில் இருப்பவன்
போதிக்கிறான்
துறவின்
தூய்மை பற்றி !

பாலுக்காகக் கூட
பிள்ளைக்கு அவிழ்க்காத
மார்பை
காசுக்காக எவனுக்கோ
காட்டும்
காரிகை பேசுகிறாள்
கற்பைப் பற்றி !

ஆடுமுதல்
அனைத்து ஜந்துவையும்
அடித்துத் தின்பவன்தான்
அடியாராம்,
அவன் போதனைதான்
சுத்த சைவமாம் !

சம்பளம் ரூபாய்
மாசம் பத்து,
சம்பாதித்தது
மா சம்பத்து,
மற்றவரையும்
மனச்சாட்சியையும் ஏய்க்கும்
அவன்தான் அதிகாரியாம்
லஞ்ச ஒழிப்புக்கு !

அடிமைகளைக்
கொள்முதல் செய்துவிட்டு
பேசுகிறான்
அன்பைப் பற்றி !
மாறுபாடே
நீ தான்
மனிதன் என்பதோ
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.