தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மழைக்குருவி

வைரமுத்து
நீல மலைச்சாரல் - தென்றல்
நெசவு நடத்துமிடம்
ஆல மரக்கிளைமேல் - மேகம்
அடிக்கடி தங்குமிடம்

எந்திர ஓசைகளைக் - கழற்றி
எங்கோ எறிந்துவிட்டு
மந்திரம் போட்டதுபோல் - ஒரு
மௌனம் வசிக்குமிடம்

கட்டடக் காடுவிட்டு - நிழல்
கனிகின்ற காடுவந்தேன்
ஒட்டடை பிடித்தமனம் - உடனே
உட்சுத்தம் ஆகக்கண்டேன்

வானம் குனிவதையும் - மண்ணை
வளைந்து தேடுவதையும்
காணும் பொழுதிலெல்லாம் - ஒரு
ஞானம் வளர்த்திருந்தேன்

வெவ்வேறு காட்சிகளால் - இதயம்
விரிவு செய்திருந்தேன்
ஒவ்வோர் மணித்துளியாய் - என்
உயிரில் வரவுவைத்தேன்

சிட்டுக் குருவியொன்று - ஒரு
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் - என்னை
வாவென்றழைத்தது காண்

மொத்தப் பிரபஞ்சமும் - என்
முன்னே அசைவதுபோல்
சித்தப் பிரமைகொண்டு - அந்தச்
சிட்டை ரசித்திருந்தேன்

அலகை அசைத்தபடி - அது
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் - சற்றே
உயரப் பறந்ததுவே

பறக்க மனமிருந்தும் - மனிதன்
பறக்கச் சிறகுமில்லை
இறக்கை துடிக்கையிலே - என்
இமைகள் துடிக்கவில்லை

சொந்தச் சிறகுகளில் - வானைச்
சுருட்டி எடுத்துக் கொள்ளும்
இந்தக் குருவியினும் - மனிதன்
எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?

கீச்சு கீச்சென்றது - என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே - என்மேல்
பிரியமா என்றது

 அறிவுக்கு விரிவுசெய்ய - மனிதர்
ஆயிரம் மொழிகாண்பினும்
குருவிக்கு விடையிறுக்க - ஒரு
குறுமொழி கண்டதுண்டா?

ஒற்றைச் சிறுகுருவி - நடத்தும்
ஓரங்க நாடகத்திலே
சற்றே திளைத்திருந்தேன் - காடு
சட்டென்று இருண்டதுகாண்

மேகம் படைதிரட்டி - வானை
மிரட்டிப் பிடித்ததுகாண்
வேகச் சுழற்காற்று - என்னை
விரட்டியடித்துது காண்

சிட்டுச் சிறுகுருவி - பறந்த
திசையும் தெரியவில்லை
விட்டுப் பிரிந்துவிட்டேன் - விரைந்து
வீட்டுக்கு வந்துவிட்டேன்

வானம் தாழ்திறந்து - இந்த
மண்ணில் வீழ்ந்ததென்ன
காணும் திசைகளெல்லாம் - மழையில்
கரைந்து போனதென்ன

மின்னல் பறிக்குதென்று - சாரல்
வீட்டில் தெறிக்குதென்று
ஜன்னல் அடைத்துவைத்தாள் - மனைவி
தலையும் துவட்டிவிட்டாள்

அந்தச் சிறுகுருவி - இப்போ(து)
அலைந்து துயர்ப்படுமோ?
இந்த மழைசுமந்து - அதன்
இறக்கை வலித்திடுமோ?

காட்டு மழைக்குருவி - போர்த்தக்
கம்பளி ஏதுமில்லை
ஓட்டை வான்மறைக்க - அதன்
உயரே கூரையில்லை

கூடோ சிறுபுதரோ - இலைக்
குடைக்கு  கீழ் ஒதுங்கிடுமோ?
தேடோ தேடென்று - இடம்
தேடி அலைந்திடுமோ?

பெய்யோ பெய்யென்று - மழை
பெய்தால் என்ன செய்யும்
அய்யோ பாவமென்று - குருவி
அழுவதை நினைத்திருந்தேன்

காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த
கதையே வேறுவிதம்
கூட்டை மறந்துவிட்டுக் - குருவி
கும்மியடித்ததுகாண்

வானப் பெருவெளியில் - கொட்டும்
மழையில் குளித்ததுகாண்
கானக் கனவுகளில் - அது
கலந்து களித்ததுகாண்

சொட்டும் மழைசிந்தும் - அந்தச்
சுகத்தில் நனையாமல்
எட்டிப் போனவனை - அது
எண்ணி அழுதது காண்

இன்றைய இளைஞர்கள்

சந்தோஷ்ராஜ்
சோற்றுக்கே வழி இல்லை
சோனி எரிக்சனோடு போராட்டம்!
ஏறுபிடிக்கும் கலாச்சாரம் மறந்து
ஏர்செல்லோடு திண்டாடிக் கொண்டிருந்தாயே!
நோக்கத்தை மறந்து விட்டு
நோக்கியாவோடு என்னய்யா பேச்சு
எதிர்காலம் புதைந்து கொண்டிருக்கிறது
நீ சாம்சங்கோடு இசைமழையில் நனைந்து
கொண்டுருக்கிறாயா!
நம் முன்னோர்கள் போராட்டத்தின் வாரிசுகள்
இன்றைய இளைஞர்கள் வோடோபோனின்
இரசிகர்கள்

நீயில்லாமல்

பாரதி பிரியா
மணித்துளிகளின் மதிப்பு தெரியாமல்
மணி நேரஙகள் பேசிய நாட்கள்...
நிமிடஙகளை கூட கடக்கமுடியாமல்
தவிக்கிறேன் ... இன்று!

தொட்டு செல்லும் தென்றல் கூட..
தேகம் வேகச்செய்கிறது...!
முடியாத இரவுகள்... நித்திரையின்றி
சித்திரையாய் வதைக்கிறது!

நிலவு தேய்வதும் வளர்வதும்போலே
நின் நினைவுகளால் நானும்...!
சில்லறையாய் சிதறிப்போன கனவுகள்
நீயில்லாமல் கனவுகளாகவே!

நீ நடந்த பாதையெங்கும் என்
விழிகளின் தேடல் ....
நீ தந்த நினைவுகளெல்லாம் என்
உயிரின் தேடல்...

தேடல்கள் நீண்டு கொண்டே போகலாம்..
உயிரின் தூரம் குறைந்தும் போகலாம்..
உயிர் சுமக்கும் இந்த  தேகம்..
உன் நினைவாலே.. உலகம் உள்ளவரை

பயணம் தொடரும்

டி.எஸ்.பத்மநாபன்
அது ஒரு சின்ன ரோஜாமொட்டு
ஆண்டவன் படைத்த அழகிய மொட்டு
அதன் இதழ்களை அழகாய்ப் பிரித்திடும்
ஆற்றல் என் கரங்களுக்கில்லை

இதழ்களை விரிக்கும் அந்த அதிசயம்
ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியம்
மானிடன் நான் விரிக்க முயல்கையில்
இதழ்கள் மடியும் என் கரங்களில்

மாயவன் படைத்த மலரைக்கூட
விரித்திட இயலா வீணன் நான்
என் வாழ்க்கையின் ரகசியம்
எப்படி அறிவேன்?

தலைவன் அவன் தன் தாள் பற்றினேன்
நாளும் பொழுதும் ஒவ்வொரு கணமும்
தடம் பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும்
துணையிருக்கும் ஆசான் அவனே

அவனன்றி யாரறிவார் என்
வாழ்க்கைப்பாதையின் வளைவுகளை
ரோஜாவின் இதழை விரிப்பதுபோல
வாழ்க்கைப் புதிரை அவிழ்ப்பவன் அவனே

பயணம் தொடரும் படைத்தவன் அருளால்

இரவு நேரக் குறிப்பு

ப.மதியழகன்
வீதியின் இறுதி வரை
ஆட்களில்லை
அடர்த்தியான இருள்
நிரம்பியிருந்தது

இன்றைக்கு வேலைப் பளு
அதிகமென்பதால்
நித்திரையில் ஆழ்ந்துவிட
உள்ளம் துடித்தது

பின்புறமாக வந்த நாயொன்று
எனது பையை மோப்பம் பிடித்தது

பிச்சை பாத்திரத்திலுள்ள ஆகாரம் போல
வீடு கலைந்து கிடந்தது

மேஜையிலிருந்த எனக்கான குறிப்பில்
இன்றாவது சீக்கிரம் வரக்கூடாதா
என எழுதியிருந்தது

அடுக்களையிலிருந்த பூனையை
விரட்டியடித்தேன்
எனக்கானதை எடுத்து
தின்றுவிடுமோ என்ற பயத்தில்

எப்போதும் விட்டம் பார்த்து
ஐந்து நிமிடம் படுத்துக் கிடப்பது
எனது வழக்கம்

தினசரி காலண்டரில்
தேதியைக் கிழிப்பது போல்
அன்றைக்கு நடந்த
அவமானங்களையும்,
ஏளனங்களையும்
மனதை விட்டு விரட்டுவதற்கான
நேரமது

சூட்சும நெறிகளை அறியவேண்டும்

கா.ந.கல்யாணசுந்தரம்
உணர்வுகள் மனித உடலின்
இரசாயனக் கலவை என்பதை
யாவரும் அறிந்ததே!
மனித இதயத்தின் இயக்கங்களை
மன அழுத்தம் கட்டுப்படுத்த இயலும்!
வெளியில் சொல்லப்படாத கவலைகள்
இரத்த நாளங்களை செயலிழக்கச் செய்யும்!
மொத்தத்தில் மனிதன் தனது
மூளையின் ஒழுங்கான செயல்பாட்டில்
இயங்கவிடாமல் வாழ்கிறான்!
செம்மையான சிந்தனைகளாலும்
அமைதி தியானம் போன்ற
அக ஒழுக்கங்களில்
வாழ்நாளை கூட்டவும் செய்யலாம் !
சிரிக்கத் தெரிந்த மனிதன்
வாழ்நாளில் புலம்பும் அவலநிலையை
சிரமேற் கொள்கிறான்!
சும்மா இருத்தலே சுகம் எனும்
ஞானியர் கூற்றில் ஒளிந்திருக்கும்
சூட்சும நெறிகளை அறியவேண்டும்!
மனிதம் வாழத்தான் பிறந்துள்ளது
என்பதை அறிய வேண்டும்!
வீடு பேற்றின் வாயிலைத் தொட
நாடு கடந்து போகத்தேவை இல்லை !
மனம் எனும் உள்ளக் கோயிலின்
மணிக் கதவுகளை சாந்தமெனும்
சாவி கொண்டு திறந்தாலே போதுமானது

சித்தனும் பித்தனும் இயற்கை

வித்யாசாகர்
பிரபஞ்சத்தின் நிர்வாணத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து -
மனிதம் நிலைப்பதே இயற்கை;

கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம் வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து -
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை

பொருள்வயிற் பிரிதல்

அ.ரோஸ்லின்
 
மூங்கில்களுக்கிடையே வெளிச்சப்புள்ளியென நீ கடந்து சென்றதைக் கண்களில் நிறைத்து, முகிழ்த்து இயம்புகிறது என் திசைவழி, வயல் வெளியின் பசுமையொத்து, நிர்பந்தித்தலுடன் கிடக்கிறது என் மௌனம்,, பிரிவின் ரேகை படிந்த வார்த்தைகளை, நம் சேய்களோடு முணுமுணுத்தபடி, கடந்து செல்கிறது களிப்பற்ற பொழுது,, நீயற்ற நம் நிலத்தினை, நீயற்ற நம் நதியினை, நீயற்ற் நம் இரவினை, அழித்தொழிக்காமல் பிணைத்திருக்கிறது, எமக்கு உணவாகும் உன் பிரயாசத்தின் குருதி,, நீ கடந்து சென்ற ஸ்தலமெங்கும், முளைத்தெழும்பிப் படர்கிறது உன் விளைவித்தல்,, ஒரு நீரோட்டத்தினைப்போல் நிகழ்ந்திருக்கும் உன் நகருதலில், கானல் வரிப்பாடலொன்றை இசைக்கும்,, தன் மீட்பின் அனுமானங்களுடன் இடும்பை விழையாப் பறவை

மழை

திருமாவளவன்
இன்று 'இடியுடன் கூடிய மழை '
பொழியுமென மொழிகிறது
வானிலை அறிக்கை
புகலிட வாழ்வினுள் சபிக்கப்பட்ட நாளில்
நான் நனையப் பெய்ததில்லை
மழை
பால்யத்து மழைநாட்கள்
பெய்யெனப் பெய்கிறது
இன்றும்

*

காலத்தின் உக்கிரத்தில்
வான் கிழிந்து கொட்டியது
பெருமழை
தவளைகள் புணரக்கிளர்த்திய
ஒலியும்
அம்மாவின் சேலையுள் குடங்க
கணண்ற உடற்சூடும்
உறங்கப்போறேன்

மறுநாள் பள்ளி
அரைநாள் விடுமுறை
வீடுதிரும்பு வழியில்
சுடலைவெளி நிறைய வெள்ளம்
முழந்தாள் தாண்டி
அரைக்களிசான் விளிம்பெல்லாம்
ஈரம்
நீரிலாடி நேரங்கழித்து
வீட்டுள் நுழைகிறேன்
முதுகில் உறைக்கிரது
'பூவரசம்பழம் '
நினைவிடை நான் நனைய

*

மறுமழை
மூன்றுநாட்கள் அடைமழை
மேட்டுக்குடி ஒழுங்கை
நீரோடி
வெள்ளவாய்க்காலாதல் இழுக்கென்று
அணையிட்டு நீர் அடக்க
நிறைந்து கிடக்கிறது வளவு
தலைவாசல் படிதாண்டி உள்நுழைய
ஒரு விரலிடை இருக்கையிலே
மழை ஓய
அடுப்பில் உலையேற்றி
அரிசிவாங்கிவர ஓடுகிறாள்
அம்மா

வாசல்படியிருந்து
கப்பல் மிதக்கவிட்டு
களியுற்றிருக்கிறோம்
மறுபாட்டம் சொரிகிறது
வானம்

அம்மாவும் இல்லாத் தனிமை
நீரெழுந்து படிதாண்டி உள்நுழைய
ஊர்திரண்டு அணை வெட்டி
சிறை மீட்கப் பதிகிறது
நெஞ்சில்

*

ஊழி தொடங்கி ஊரெரிந்தபோதில்
பொழிந்து
மூன்றாம் மழை
தீயின் விழுதுகளுள் விலகி
பெடியளுக்கு
மண்ணெண்ணை தேடி
வெள்ளாங்குளம் போவதாய்
போக்குக்காட்டிவிட்டு
சங்குப்பிட்டித்துறையில் படகிற்கு
காத்திருக்கிறேன்

பெருவளி
நடுநிசி
மனிதர் வரிசை
துறையின் திசைநீள
துவக்கொடு அலையும் மைந்தர்
உயரக்காற்றில் எழுகிறது
ஹெலியொலி
கிலியில் உரைகிறது குருதி
திடாரென
வானம் கருக்கொண்டு
பெருந்துளிகள் சொரிய
குலைகிறது மனித ஒழுங்கு
ஒதுங்க நிழலற்று
உடல் விறைத்து
தெப்பமாய் நனைந்திருக்கிறேன்

ஒரு மணி கழிய
வானில் பூக்கிறது வெள்ளி
வயிற்றில் பூக்கிறது பசி
பிரிவின் துயரொடு
காதற்துணைவி கண்ணீர் கலந்து
கட்டிய பொதிசோற்றில்
கையை நுழைக்கிறேன்
மழைநீர் கலந்து நெக்குருகி
கிடக்கிறது சோறு
கூடவே மனசும்
பால்யத்து மழைநாட்கள்
பெய்யெனப் பெய்கிறது
இன்றும்

கரை அலையைக் காதலிக்கிறது

வையவன்
 
கோடானு கோடி
காலடிச்சுவடுகள்
பதிந்து பதிந்து
அழிந்து மாறும்
கடற்கரை இது.
எந்த காலடிச்சுவட்டையும்
ஆக்ரோஷமாக
அழிக்கிற அலைகளைக்
கரையோரம் அமர்ந்து
கவனித்தேன்
கரையோரத் தென்னையின்
நிலவொளி பூசிய
புதிய ஓலைகளினூடே
நடந்து போனவர்களின்
இரவுகளும் பகல்களும்
குடியேறியிருப்பது
கண்ணில் பட்டது
அலைகள் அவற்றை அழிப்பதில்லை
புது வருகைக்குத்
தடம் போடுகிறது
அலை கரையைக் காதலிக்கிறது
கரை அலையைக் காதலிக்கிறது
நிறைவேறவே நிறைவேறாத
இந்தக் காதல் நாடகத்தை
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்
தென்னை சலசலத்து சொல்கிறது