நெடுங்கண் நிறைக்கும்
ருத்ரா
மைபொதி வானம் மஞ்ஞை களிப்ப
மடலம் பெண்ணை கூர் ஒலி எழுப்ப
கல்படு அவிழ்கதிர் விரிநிலம் பூப்ப
பளிங்கின் நுண்சிறை வண்டினம் ஆர்ப்ப
ஆநிரை சூழ்தரு அணிநகர் இலங்க
கோல் கொள் ஆயர் குரவை ஒலிக்க
பொறைபடு வெள்ளிய அருவியும் சிலம்ப
கறியும் வேங்கையில் படர்தந்து புரிய
கவின் நிறை குறிஞ்சி உள் உள் தகைய
குண்டுநீர் நீலம் குய்புகை நிழல
கள்ள மென் நகை கவிழ்ந்தே பூக்கும்
மாஇழை முன்னே வளைமுரல் செய்யும்.
காந்தள் ஐவிரல் கண்ணில் அளைஇ
ஆறு அடைத்து கதழ்பரித்து ஆங்கே
ஆர்கலி ஒல்லென நெடுங்கண் நிறைக்கும்