தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உன் நினைவில்

பாரதி பிரியா
 
சின்னச்சின்னதாய் நீ விட்டுச்சென்ற
நினைவுகளால் நிதம் வாழ்கிறேன்...
கரையில்லா அன்புக்கு முன்னே
கவலையின்றி உன் நினைவில்!

பார்த்துப்பார்த்து நீ எடுத்து தந்தப்
பட்டுப்புடவை பெட்டிக்குள்ளே.... நீ
என் இதய பெட்டிக்குள் இருப்பது போலே
பத்திரமாக..... நீ வரும்வரையில்.

சேர்ந்தே நடந்து சென்றோம்...
நினைவிலும் கனவிலும்.....
தனியே கடந்து செல்கிறேன்
ஒவ்வொரு பொழுதுகளையும்!

வறண்ட நிலமாகத்தான் நனிருந்தேன்
வற்றாத அன்பு தந்தாய்..
உன் நினைவுகளின் வலிமைக்கு முன்னே..
நான் உடைந்து போகிறேன் ..!

நெருங்கி.... நொறுங்கிப்போவதுதான்
உன் அன்பின் பரிசானாலும்...
இந்நாளும்  எந்நாளும்  உனக்காக
உன் நினைவால் நான்!
 

இறப்பும் பிறப்பும்

ஜேகே
நாளை வாழ்ந்திருக்க இன்று
வாழ்பவர் பார்க்க வருதல் பிறப்பு!

நாளை இறந்திடுவோர்
பார்க்க இன்று வருவது இறப்பு!

எப்பொழுது என்றறியாமல்
எப்பொழுதும் நடக்கும் அதிசயமிது

காற்றின் இருப்பு

கே.ஸ்டாலின்
வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது
என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு

திருவிழா

கார்த்திக்
மிளகாய் பொடி தடவின பேரிக்காய்
கீழிறங்கும் போது வயிற்றில் சங்கடம் பண்ணும் ராட்டினம்
ஆல மர இலையில் கேசரி
கரகாட்ட புகழ் சங்கீதாவின் குலுக்கல் நடனம்
முட்டு சந்துகளுக்கு போய் ஒரு கட்டிங்
கடைசியாய் போன போவுதுன்னு
ஒரு தடவை கும்பிட்டு போகும் சாமி

மழை பொழிந்தது இங்கே

அருணா
நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது

பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது.

பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம்.
மழை பொழிந்தது இங்கே

உனது முதல் கவிதை…

சி.புகழேந்தி
நீ எழுதுகோலை
சோதிப்பதற்காக
வெற்று காகிதத்தில்
கிறுக்கி பார்த்தாய் …
நான் படித்த
முதல் மொழியில்லா கவிதை அது…

நனைந்த பூனைக்குட்டி

சு.மு.அகமது
சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி
பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி

ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு
தெருவில் கூடின நாய்கள்

ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு
’உர்’ரென்றது
சிலிர்ந்து நின்றதைப்பார்த்து

பூனைக்குட்டி
சிலிர்ப்பை விடுத்து ஒடுங்கிய விதத்தை
ஆக்ரோஷம் விடுத்து நோக்கின ’உர்’ரானவை

நான் கடக்கையில்
லாவகமாக பூனைக்குட்டியை கையிலெடுத்து
பூட்டிய கேட்டினுள் விட
கூம்பு போல் உடலை உயர்த்தி
ஓடிச்சென்று கூரையில் தங்கியது

திரும்புகையில்
கால்விரிப்பில் அனந்த சயனத்தில் பூனைக்குட்டியும்
தெருவில்
பரம எதிரியாய் எனை பாவித்த
நாய்களும் நானும்
மழை தூறலில் நனைந்தபடி
அமைதியாய்

ஒரு விதையின் பிரார்த்தனை

டி.வி. சுவாமிநாதன்
இலைகள் செறிந்து கிளை விரித்தால்
இணைந்து புள்ளினம் கூடமைக்கும்;
மலர்கள் பூண்டு நான்சிரித்தால்
மங்கையர் கொய்து சூடிடுவர்;

பழங்கள் குலுங்கிப் பூரித்தால்
பாய்ந்து மந்திகள் சூறையிடும்;
நிழல்வெளி பரப்பும் மோனத்தை
நித்தம் மனிதர் குலைத்திடுவார்.

வேரின் வழியே நீரருந்தி
வேர்வை சிந்தி நான்வளர்தல்
பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந்து
பட்டுலர்ந்த பின்ஒரு நாள்

கோடாரி கொண்டவன் வெட்டியதும்
கும்பி டென்றே அடிபணிந்து
வீடுசேர்ந்து அவன் உணவை
விறகாய் எரித்து சமைத்தற்கோ?

விதையைக் கருக்கி விட்டிடடீ!
வீணில் வளர்ந்து சாகாமல்
புதையுண் டிருளில் துயின்றிடுவேன்;
பூமகளே! அருள் புரிந்திடடீ

நல்லதோர் வீணைசெய்தே

சி.சுப்ரமணிய பாரதியார்
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

வீழ்ச்சி

சு. வில்வரெத்தினம்
என்னுள் எழுந்து
பிளிறிற்று யானை

மதம் வழிய முகம் பிய்ந்து
தும்பிக்கையால் விகாரமாய்
பீறிற்று காமம்.

மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய
மோப்பம் பிடித்தலைந்தேன்
தும்பிக்கை நீட்டி.

வேலி மீறினேன்
கீறிய முட்கள்.
தடித்த காமத் தோலில்
தைக்குமா என்ன?

வேகநடை.
வேலியினுள் விதைத்திருக்க
பண்பாட்டுப் பயிர்கள்
காலடியில் துவம்சமாச்சு.

குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை
வளைத் தெடுத்துத் தழுவ
வழிந்த மதநீர்
வடிகால் தேடிக் கலந்தது.

தின வடங்கிற்றா?

தும்பிக்கை உட்சுருள
பூசி மெழுகிப் பண்பாடு காத்த
உருத்திராட்சப் பூனையாய் மெல்லப்
பதுங்கிப் பதுங்கி
வேலி ஓரமாய் ஓசைகாத்து
வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்
கீறியது மீண்டும் முட்களா?மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின.
மனச் சாட்சியை ஊடுருவி.

அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.

படைவீடிருந்த சிம்மாசனம்
குடைசாய
குப்புற வீழ்ந்தேன்

கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது.
"யானோ அரசன்? யானே கள்வன்."