எழுதும்போது
எல்லாம் சுகமே
என் கவிதை ஒன்றை
முதன் முதலாய்
நீ வாசித்து நேசித்த போது
கரைந்தே போனேன் ...
மிரட்டும் உன்
விழிகளில்
குடியமர்ந்தேன் ...
இருதுளி கண்ணீரில்
மூழ்கி மரணிக்கும் வரை
சுகமாகவே தொடர்ந்தென
எல்லாம் ...
இன்றோ அத்தனையும் தலைகீழ் ...
உற்சாகம் கொடுத்த
வார்த்தைகளில்
ஒரு எழுத்துப் பிழையும்
இல்லாத போதும்
வாட..வைக்கின்றன!
செல்லமான பார்வை
பரிமாற்றங்களில்
கண்கள் அப்படியே
இருக்கும்போதும்
நெஞ்சம் ரணமாகிறது!
நினைவுகள்
நிறம்பிக்கிடந்த தனிமை
சூழல் மாறாதபோதும்
சுகம்தர மறுக்கிறது!
”பயணத்தில்
இன்பம் கொடுத்த
பாதைகள்
பிரிவில் எப்போதும்
முள்ளாய் குத்துகின்றன!”
உனக்கே உனக்காக
எழுதப்பட்டவை
என் கருவூலம் உடைபடும்
அளவு பெருகிவிட்டன
இன்னும் காகிதம் கேட்டு
தவிக்கிறது பேனா
மனம் புரியாத
உன் நினைவுகளுக்கு
மரணதண்டனை கொடுத்து
எழுதத் துவங்கினேன்
கடைசிக் கவிதை
-
தீர்ப்பின் முடிவில்
மரபின் காரணமாய்
முள் உடைத்தேன் ...
முற்றுக்கு பதிலாக
விழுந்தது ”கமா,”
சிந்தன்