ஓடுகின்ற நதியினிலே அழுக்கு தூசி
ஒருபோதும் இருப்பதில்லை அதுபோல் நாங்கள்
வாடுகின்ற போதினிலும் அருகே யாரும்
வருவதில்லை என்பதனை உணர்ந்துகொள்வோம்!
பாடுகின்ற தவளைகள் பசியால் வாடும்
பாம்புக்கு இரையாகும் ;ஆனால் வாயை
மூடுகின்ற மனிதனுக்கு எதுவுமில்லை
முழுஉலகும் அவன்வாயில் மண்ணைபோடும்
பெண்ணைப்போல் நாமொதுங்கி வெட்கம்தின்றால்
விண்ணைநாம் தொடமாட்டோம் விளங்கமாட்டோம்
என்னைப்போல் யாருண்டு என்று எண்ணி
எழுவானை கிழித்தால்தான் எதையும்காண்போம்
எமக்கான சுயத்தைநாம் தேடும்போது
எதற்குமே பயங்கொள்ளத் தேவையில்லை
நமக்கான பாதையிலே நாளும் சென்று
நடக்காத கால்களையும் நடக்கச்செய்வோம்
நடக்கின்ற போதினிலே நாய்கள் வந்து
நமக்கான பாதையிலே மறித்து நின்றால்
படக்கென்று கவிவாளை உறுவி அந்த
பதருர்களின் வாலறுத்து ஓடச்செய்வோம்.
மற்றவரின் கால்பிடித்து மண்டியிட்டு
மலம்தின்னும் மனசுக்கு மருந்து செய்வோம்
கற்பனையில் யதார்த்தத்தை கலந்து நல்ல
கவிதைகளால் உலகுக்கே விருந்து செய்வோம்

பொத்துவில் அஸ்மின்