நட்சத்திரம் மின்னாத
என் இல்லற இரவுகள்
எப்போதும் விடிந்தே கிடக்கிறது
விலைக்குப் பெற்ற
சுதந்திரம் போலவே
கடமையாய்க் கழிகிறது
காதல்
ஆர்வமாய் எதையோ
நாற்பத்திரண்டிலும் தேடுமவர்
இருட்டில் என்னைத் தொலைத்துக்
கொண்டிருக்கிறார்
எத்தனை கதறியும்
எதிரொலிக்காத வயிறு
ஆண்டுகள் இரண்டு
காத்திரு என்கிறது
ஏலவே கடந்துவிட்ட
முப்பத்தியெட்டில்
திக்கித் திக்கி
தள்ளிப்போகிறது மாதம்
அத்தனைக்கு மத்தியிலும்
அவல் கேட்கும்
வெறும் வாய்களுக்கெல்லாம்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
“I am fine”

மன்னார் அமுதன்