மெல்ல மெல்லச் சின்ன
மல்லிகைக் கால்கள் பின்ன
சின்னச் சின்ன சின்னம் வைத்து
அல்லி நடை போடுகிறாய்.
ஒற்றைப் புன்னகையில்
உலகை விற்று விட்டு
பிஞ்சு விரல் அஞ்சிலும்
வெற்றிப் பத்திரம் நீட்டுகிறாய்.
என் மீசைக் கயிறு பிடித்து
தோள் மலை ஏறுகிறாய்.
கன்னப் பிரதேசங்களில்
நகப் பள்ளம் தோண்டுகிறாய்.
செதுக்கிச் செய்த சின்னச் சூரியனாய்,
உன் கண்களின் சிரிப்பு
வாசல் முழுதும் சிதறிக்கிடக்கிறது.
பதுக்கி வந்த பகல் நிலவாய்
உன் குளிர்த் தழுவல்கள்
படுக்கை முழுதும் பரவிக்கிடக்கின்றன
செம்பருத்திப் பாதங்கள்
சமயலறைவரை
சிறு செம்மண் கோலம் வரைய,
தளிர் மாவிலைக் கைதரும்
ரேகைச் சித்திரங்கள்
வெள்ளைச் சுவரை அழுக்காக்கி அழகாக்கும்.
நீ
பிறப்பதற்குத் தவமிருந்தது ஒருகாலம்,
உன்
ஒவ்வோர் அசைவுகளும்
வரம் தருவது நிகழ் காலம்.
பிஞ்சுக்கன்னங்களை நெஞ்சில் தாங்கி,
ரோஜாத்தீண்டலாய் விழும்
மெல்லிய உன் மூச்சுக் காற்றில்,
மனசுக்குள் சில
மனங்கொத்திகளை பறக்கவிடுகிறேன்.
உன் அழுகைக் கரைகளில்
கரைந்து போகிறேன்.
உன் மெல்லிய உதைகளில்
மென்மையாய் மிதக்கிறேன்.
என் வாலிபங்கள் காத்திருந்தது
உன் வரவுக்காய் தானோ ?
நான் சந்தித்த
மகிழ்வுகளின் மாநாடு தான்
உன் வரவோ ?
காலங்களைப் பிடித்திழுக்கும்
உன் கரங்களுக்குள் கடிவாளமாகி
உன் கண்களோடு கலந்து போய்
கவியரங்கம் நடத்துகிறேன்.
உன்
முத்தங்களுக்காய் மனுச்செய்து
நான் மண்டியிடும் போதெல்லாம்
பக்கத்து வீட்டுச் சன்னல்
சத்தமாய் ஒலிபரப்பு செய்யும்.
‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” என்று.
உனக்கும் எனக்கும்
உயிர்ப்பாய்ச்சல் நடக்கும் போது
ஊர்ப்பாய்ச்சல் நமக்கெதுக்கு ?
தயங்காமல் தாவிவந்து
என்னிரு தோளில் தொங்கி
இன்னொரு முத்தம் தந்துவிட்டுப் போ.
இறுக்கமாய் சிறிது நேரம்
இருந்துவிட்டுப் போ