நீர்நெய் அகலில்
நிமிர்ந்த சுடரே!
என் சில இரவுகளைத்
துப்பறிந்தாய் நீ
ஓட வண்டுகள் மொய்கும்
சுதை மொட்டே !
உனக்குள் நான்
மகரந்தமானதுண்டு
நெருப்புத் துண்டுகளை
விழுங்கும் நான் - உன்
மெளன மணலில்
தலை புதைக்க வந்ததுண்டு
சில நேரங்களில்
உன் பனி நிழல்
என்மேல் உதிர்த்த
ஆயுதப் பூக்களின் இதழ்களை
அக்கினி நாக்குகள் ஆகியிருக்கின்றது
உன்மடியில் சிந்திக் கிடக்கும்
நாகலிங்கப்பூ ஆசனங்களில்
என் அதிசியங்களுக்கு
பட்டம் கட்டிய அந்த நாட்கள்
நினைவிருக்கிறதா உனக்கு......?
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம் மெதுவாக
நான் மெளுகுத்திரியாக
நீ ஊதுவர்த்தியாக
வேதனையை நான்
வெளிச்சப் படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைந்ததும் என்னை
மறந்து விடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக் கொண்டிருக்கும்
மு மேத்தா