ஜனன வாசல் வழியே
உள்நுழைந்தோம்
மரண வாசலை நோக்கி
ஓடுகின்றோம்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அங்குலமாக
சாவின் நிழல்
என்னை நெருங்கிக்
கொண்டேயுள்ளது
துக்க வீடுகள்
யாரும் தப்பிக்க முடியாது
என தெரியப்படுத்துகின்றன
திரும்பிப் பார்க்காமல்
ஓடிக்கொண்டிருந்தால்
துரத்துவது நமக்குத்
தெரியாதென நினைக்கிறோம்
எப்போதும் ஏதாவதொரு
போதையிலிருந்து
சகலத்தையும் மறக்கிறோம்
வாழ்க்கை விரைந்தோடுகிறது
எந்த ரூபத்திலும்
மரணம் என்னை எதிர்கொள்ளும்
என்ற நினைப்பு
பீதியூட்டுகிறது
இயற்கை உயிர்களிடத்தில்
பாகுபாடு காட்டுவதில்லை
என உணர்ந்தபடி
பிரபஞ்சத்தில் சிறு துரும்பாக
எனதுடல் மண்ணில் சரிகிறது

ப.மதியழகன்