பெருநாள் - கலைமகன் பைரூஸ்

Photo by Jr Korpa on Unsplash

வருக ஈகைத் திருநாளே!
திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின்
கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே இத்திங்களிதில்!

செய்த தவறுக்காய் தேம்பியழுது –நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லா னருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை-இன்று
மணந்திடும் பெருநாளீதில் – நாம்
மனங்களை இணைப்போமே ஒன்றாய்!

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத்திருநாளே!

அறையினிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் – அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தம நபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை யேந்திவா பெருநாளே!

- மதுராப்புர
கலைமகன் பைரூஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.