வளைக்க முடியாத
உலோக விதிகளால் ஆனவை
இடங்களின் ஒழுங்கமைவுகள்
தெருவில்
எங்கோ நடந்து போகிறவர்கள் மீது
விரோதம் கொண்டிருக்கின்றன
கேட்டிற்குப் பின்னே
மினுங்கும் கண்கள்
மேலும் வேகமாக நடக்கிறோம்
தயங்கித்தயங்கி
ஒரு சதுரத்தில் பிரவேசிக்கிறீர்கள்
அச்சதுரத்தின்
புலனாகாத உட்சதுரங்கள்
உட்சதுரங்களின் உள்ளறைகள்
உள்ளறைகளின்
திறக்கக் கூடாதெனச்
சாபமிடப்பட்ட மர்ம அறைகள்
துரதிர்ஷ்டசாலிகள்
திரும்பவியலாத
சூட்சும வழிகள்
காற்றில் மிதக்கும்
நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறோம்
ஒரு தேனீரை அருந்தும்விதம்
ஒரு சிரிப்பின் அளவீட்டு விதிகள் மற்றும்
திடீரென உருவப்பட இருக்கும்
நம் நிர்வாணம் பற்றி
பெரும் அச்சங்கள் சூழ்ந்திருக்கின்றன
நுழைய வேண்டிய நேரத்திற்கும்
வெளியேற வேண்டிய நேரத்திற்குமான
தகர்க்க முடியாத அரண்களுக்குள்
மீண்டும்மீண்டும் நிகழ்வதாகிறது
காட்டுமிராண்டி நிலைக்கும்
நாகரிக நிலைக்குமான
பெரு வரலாறு
இடங்களின் ஒழுங்கமைவுகளை
நாம் கட்டுவதில்லை
அவை இடங்களாக இருப்பதாலேயே
ஒழுங்கமைவுகளாகவும் இருக்கின்றன
ஒழுங்கமைவுகளைத் தீவிரமாகப்
பின்பற்றுதலின் அவசியம்
முற்றிலும் அழிந்துபோகாமல்
தாக்கிக் கொள்ளவும்
அன்பு செய்யவும்
ஓர் உடன்படிக்கை
அல்லது சதிச்செயல்
இடங்களின்
வரைபடக் கோடுகள் மீதே
தெளிவாக அறியும்படி இருக்கின்றன
அவற்றின் மனநோய்க்கூறுகள்
சாய அனுமதிக்காத
சுவர்களின் முன்
தடைசெய்யப்பட்ட
கண்காணிக்கப்படும் உடல்கள்
இறுகிஇறுகி
இறுதியில் அவையும் இடங்களாகின்றன
நான் வெறொரு இடத்தின்
ஒழுங்கமைவாக
இவ்விடம் வராதிருந்தால்
இவ்விடத்தின் ஒழுங்கமைவு
இந்த அளவு
கழுத்தை நெரிக்காதிருந்திக்கலாம்
தப்பிச் செல்வதாக
ஒருவர் கூறும்போது
அது முற்றிலுமாக
இடங்களற்ற இடங்களுக்குத்
தப்பிச் செல்வதையே
குறிக்க வேண்டும்
நாம் தப்பமுடியாதவர்கள் என்பதாலும்
நம்முடைய ஒழுங்கமைவுகளில்
பிறருடைய இடங்களை அனுமதிக்க
இயலாதவர்கள் என்பதாலும்
மீறல்களின் அதிர்ச்சிகளுக்கேனும்
இரத்த ஓட்டத்தைப் பழக்கலாம்

மனுஷ்ய புத்திரன்