நாம்பிரிந்து ஆயாச்சு
நாட்கள் நாற்பது - அது
ஏனென்ற காரணத்தை
யாரு கேட்பது
நல்லுலகு கேட்டாலும்
எதை மறைப்பது
நாயொருவன் செயலினாலே
என்றா உரைப்பது
பகலிலவன் பேசுகையில்
இரவு உனக்கு
இருட்டினிலே கொண்டது நீ
காதல் கிறுக்கு
வந்த காசு தீர்ந்ததுமே
வயிறு வத்திடும்
வயிற்றை நிரப்ப வங்கி போனால்
வைப்பும் வத்திடும்
மாயையிலே வாழ்வது தான்
உந்தன் விருப்பு - அதை
மாறி மாறி உரைத்ததாலே
என்னில் வெறுப்பு
பந்த பாசம் அறுப்பதுவோ
உனக்குப் புதுசு
பாழாப் போன கதைகள் நான்கு
இருக்குப் பழசு
அவன் சிரித்த நாட்களிலே
நீயும் சிரித்தாய் - இருந்தும்
நீயழுத நாட்களிலே
நானே துடைத்தேன்
காதறுந்த ஊசியவன்
கானம் படித்தான்
கானமின்று கானலாக
நீயும் தனித்தாய்
பாடல் ஒன்று
இராகம் இரண்டு பாட்டிற்கிருக்கலாம்
பாவை கணவன் மாண்ட பின்பே
மீண்டும் மணக்கலாம்
மீண்டும் நீயோ மணப்பதற்கு
என்னை வெறுக்கிறாய்
பிரிவு என்ற நோயை ஏற்றி
உயிரைச் சிதைக்கிறாய்
கண்டதிரு மேனியெந்தன்
கண்கள் குத்துதே
பாதகமே புரிந்தது போல்
நெஞ்சம் பத்துதே
காத்திருந்து காக்கவைத்துக்
கொண்ட காதலே - இன்று
கானகத்தில் கண்ணைக் கட்டி
தவிக்க விட்டதே
காதலென்ன சாதலென்ன
இரண்டும் ஒன்று தான்
கனிந்தவுடன் வெட்டப்படும்
வாழைக் கன்று தான்
பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே
பிரிந்து கூடிப் பழகிப் பிரிய
மனசு வலிக்குமே
கோர்வையாக வழிந்த
கண்ணீர் கோர்த்திருக்கின்றேன்
கோலமயில் இரத்தினமே
மாலையாக்கிக்கோ

மன்னார் அமுதன்