யான் வழிபடும் தெய்வம் - கவிமாமணி மீ.விசுவநாதன்

Photo by Jr Korpa on Unsplash

விதையே இல்லா விண்வெளி மூலத்தைக்
கதையா சொல்லிக் கணக்கிட முடியும் ?

எல்லாத் திசையும் இன்பம் கண்டவன்
சொல்லையா தேடுவான் சுகத்தை விளக்க ?

கல்லுள் தேரை கசியும் மூச்சில்
நல்லதோர் கவிதை நயத்தை ரசித்தோன்;

சொட்டுத் தேனைச் சுவைக்கும் போதே
கொட்டும் தேளின் கொடுமை மறந்தோன்;

கட்டுக் கூந்தலார்க் கன்னியின் காதல்
பட்டும்,,யோகப் பயிற்சியைப் பெற்றோன்;

பிச்சை கேட்கும் பிழைப்பை உணர்ந்தே
பச்சை வயலின் பார்வை அறிந்தோன்;

விரிந்த வானில் திரிந்த போதே
தெரிந்த மேடு பள்ளம் தெளிந்தோன்;

வாழ்வில் மயங்கும் வசதியைப் பெற்றும்
தாழ்வில் உழலும் வறுமையைப் புரிந்தோன்;

அச்சம்,அடிமை, ஆணவச் சிறுமை
துச்சம் என்றே துன்பம் கடந்தோன்;

பறவை, பூச்சி, பருவக் குழந்தை,
நிறமெலாம் ஒன்றெனத் தியானம் செய்வோன்;

அடுப்பில் தெரியும் அனலைக் கொஞ்சம்
சொடுக்கிப் பார்த்துச் சொந்தம் சேர்த்தோன்;

பக்குவ மனத்தைப் பரிச்சயம் கொண்டோன்
எக்குல மாயினும் என் குல தெய்வமே
கவிமாமணி மீ.விசுவநாதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.