ஒரு காகிதத்தைக் கொடுத்து
ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள்
எது நல்ல கவிதையென்றேன்?
“நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும்
நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும்
கவிதை
நில்லாமல்
ஓட வேண்டும்
வானம் போல்
இல்லாத ஒன்றுக்கும் நிறம் தர வேண்டும்
வார்த்தை ஒவ்வொன்றும்
எழுந்து நிற்க வேண்டும்
காதல் இருக்கவேண்டும்
காமம் இருக்கவேண்டும்
களப் போராளியின்
வீரமிருக்க வேண்டும்
நீ இருக்க வேண்டும்
குறிப்பாக
நானுமிருக்க வேண்டும்”
எனக்கவர்கள் வேண்டுதல்கள் புரிந்தது
காகிதத்தை
மடித்து
மடித்து
.
.
.
.
.
மடித்து
பிரித்து
சேர்த்து
விரித்து
கொடுத்தேன்
தலைப்புக் கேட்டார்கள்
‘கப்பல்’ என்றேன்
-

சங்கர்