காதலித்து
கெட்டுப்போனவர்களுக்கும்
காதலிக்காமலேயே
கெட்டுப்போனவர்களுக்கும்
காதல்
ஒரு கெட்ட வார்த்தை தான்.
ஒரு பொருளை
அதிகமாக பயன் படுத்தினாலும்
அது கெட்டுப்போகிறது.
ஒரு பொருளை
பயன்படுத்தாமல் விட்டு விட்டாலும்
அது கெட்டு போகிறது.
காதலிப்பவர்களுக்கும்
காதலிக்காதவர்களுக்கும்
இடையே நடக்கும்
இந்த கயிறு இழுப்பு போட்டியில்
வெற்றி தோல்வி என்பதெல்லாம்
அப்புறம் இருக்கட்டும்.
போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களே!
நீங்கள் கையில் பிடித்திருப்பதை
கொஞ்சம் உற்றுப்பாருங்கள்.
காலம் கெட்டு கிடக்கிற வேளையிலே
இந்த கருமாந்திரம் எல்லாம் எதற்கு?
கயிற்றை உற்றுப்பார்த்தார்கள்
அது பாம்பாக இருந்தது!
அய்யோ என்று ஓடிவிட்டார்கள்
பாம்பை கையில் பிடிக்கிற
விடலைகள் நாங்கள்.
விட்டால் பாம்புகளிடமே
கடலை போடுவோம் என்று
வீராப்பாய் உற்று பார்த்தவர்களுக்கு
அது வெறும்
அழுக்கேறிப்போன கயிறு.
சே!இதை எவண்டா பிடிப்பான்?
அவர்களும் நழுவி விட்டார்கள்.
அது
கீழேயே கிடந்தது.
அது பாம்பா? கயிறா?
ஆம்.
காதல் காதலாகவே கிடந்தது.
கெட்டது..
வார்த்தையா? அர்த்தமா?
ருத்ரா