கண்ணடிக்கும் தாரகைகள்
கண்டுகொள்ளாத வெண்ணிலா
ஊர சுற்றும் முகில் கூட்டம்
உயிர் தடவும் பனிகாற்று
வாலி,வைரமுத்து
இளையராஜா.ARR சகிதம்
மெல்லிசை பாடல்களின் அணிவகுப்பு
கற்பனை தீர்ந்துபோகவே
பாதி மட்டுமே எழுதிய கவிதைக்காகிதம்
பக்கத்தில் உறங்க
இயக்கமெல்லாம் முடங்கிவிட
இதயம் மட்டும் நிதம் துடிக்க
கடக்கத்தொடங்கியதொரு
சலனமற்ற இரவுப்பயணம்,
நடுநிசி
யாரோ வரும் சப்தம்
தலை கோதும் சுகம்,
நிடலத்தின் மீதொரு முத்தம்,
ஆர்பரித்து எழுந்துபார்த்தால்
அருகில் அவள்,
இப்போது ஏன் வந்தாய்,என் கேள்வி?
பார்க்கணும் போல இருந்தது வந்தேன்...
ஏன் வரக்கூடாதா? அவள் பதில் கேள்வி
கைகளை கிள்ளிப்பார்த்தேன்,
அட கனவா...
டேய்,தண்ணிய குடிச்சுட்டு படு
மனசு...
பின்தலையில் அடித்துக்கொண்டு-மீண்டும்
போர்வைக்குள் புதைந்தது உடல்,
காலைவேளை
சிற்றுண்டிக்கான காகத்தின் கரைசல்
குழம்பி கோப்பையுடன் அம்மா வந்தாள்,
பருகும் வேளையில்-மீண்டும்
அவள் நினைவுத்தீக்குச்சி,
ஒருவேளை அவள்
உண்மையாகவே வந்திருந்தாள்?
இனிப்புடன் தொடர்ந்த விகசிப்பு,
டேய் பகல்கனவு காணாம
அலுவலகம் கிளம்பு-மீண்டும்
அதிகார மனசு,
இப்படித்தான் என் ஒவ்வொரு
இரவுகளும்,விடியல்களும்
கோபி