காற்றின் பனிவிரல் தீண்டி
பச்சை இலைகள் சிலிர்த்துப் படபடக்க
ஆயிரம் கிளைகள் நீட்டி
ஆடுகின்றன காட்டுமரங்கள்
பிரும்மாண்ட மலையின் மறைவில்
பிறந்து பெருகும் அருவியைக் காண
நூறு கனவுகளை உயிர்சுமக்க
சருகுகள் மறைக்கும் தடம்தேடி
நடக்கத் தொடங்குகிறோம் நாங்கள்
பகலின் கதிர்சுடாத வானம்
பால்மேகம் மிதக்கும் பாலம்
பார்க்காதே பாரக்காதே எனக்
கையசைத்துத் தடுக்கும்
மரங்களும் கொடிகளும் பின்னிய கோலம்
பக்கவாட்டில் ஒலிக்கிறதுநீர்ப்பரப்பின் கொலுசுச்சத்தம்
உச்சிக்கு அழைத்துச் செல்கிறது
வழுக்குப் பாறைகளின் கூட்டம்பாதையின் கிளைகள் குழப்பிவிட
பகல்முழுக்க அலைந்தலைந்து
சலிப்பில் மனம்நொந்து வலிக்கு இதம்தேடி
நிழல்பார்த்துச் சாய்கிறார்கள் சிலர்
பாறைச் சரிவிலும் முள்ளுப்புதரிலும்
கிழிபட்ட கால்சதையின் ரத்தம் கசிய
ஆகாது ஆகாது என
ஆயாசப் பெருமுச்சுடன்
திடீரென முடிவை மாற்றி
திரும்பி நடக்கிறார்கள் இன்னும் சிலர்
செண்பக அருவியைக் கண்ட நிறைவோடு
விடைபெற்று இறங்குகிறார்கள் மேலும் சிலர்ஈர்க்கப்பட்ட இரும்புத்துண்டென
தொடர்ந்து நடக்கிறேன் நான்
ஒவ்வொரு மரக்கிளையிலிருந்தும்
பறவைகள் நடத்தும் இசைக்கச்சேரியில்
குட்டிக் குரங்குகள் ஆடும் விளையாட்டில்
உற்சாகம் ததும்பும் உள்ளம்உந்தித் தள்ளுகிறது என்னை
நடுநடுவே சிற்றருவிக் கோலம்
நம்பிக்கையூட்டி இழுக்கிறது
அரைகுறையாய்க் கைக்கெட்டும்
கல்முனையைத் தொட்டுப் பற்றி
ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும்
பாறைக்குவியலில் திணறிநடந்து
எங்கெங்கும் படர்ந்த பாசியின் வழுக்கலுக்குள்
தடுமாறிக் கடந்து முச்சுவாங்க
குன்றின் திருப்பத்தில் பளீரிடுகிறது
உச்சிமலைத் தேனருவி
எங்கெங்கும் ஈரம் தெறிக்க
இசை மிதந்து வழிகிறது
இமைமுடும் கணநேரம்
என் உடலின் திரைச்சீலையில்
சாரலின் தூரிகை படர்ந்து
ஆனந்த ஓவியத்தைத் தீட்டுகிறது
உச்சித் தண்ணீரில் சிறகை நனைத்து
உல்லாசமாய்ப் பறக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள்
பாதத்தில் நுரைபொங்கி வழியும் நீரில்
தலைகுனிந்து நிற்கிறேன் நான்
விண்ணையும் மண்ணையும் தொட்டபடி
விஸ்வரூபமெடுத்து நிற்கிறது தேனருவி
பாவண்ணன்