நாளை என் மகனும் - கீதா மதிவாணன்

Photo by Lucas K on Unsplash

பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்,
பார்த்திராத வடிவங்களில் பந்துகள்,
உச்சியிலொரு ஒழுங்கற்ற சூரியன்,
நீரின்றித் துள்ளும் நீலநிறமீன்,
பக்கத்தில் பராக்குபார்த்தபடி
ஒற்றைக்கால் கொக்கு,
பாலு, பானுவென்று ஆங்கிலத்தில்
அரைகுறையாய் எழுதப்பட்ட பெயர்கள்,
எல்லாமும் உணர்த்தின,
இதற்குமுன் அங்கேயொரு குழந்தை….
ஆணோ பெண்ணோ தெரியவில்லை….
வசித்திருக்கிறது என்பதை!

ஒழுங்கற்ற வட்டமுணர்த்தியது
ஒன்றரை வயதிருக்கலாமென்பதை!
ஓரடிமேலிருந்த ஆங்கில எழுத்துகள் சொல்லியது
அது பள்ளிக்குழந்தையுடையதென்பதை!
எட்டுப்போட்டு வரையப்பட்ட பூனைக்கு
இருபக்கமும் வரையப்பட்ட வால்கள் மூலம் புரிந்தது
சண்டையிட்ட இரண்டுவாண்டுகளின்
கைவண்ணமென்பது!

சுவரின் ஒரு மூலையிலிருந்து மறுமூலை வரை
சீராய் இழுக்கப்பட்ட சிவப்பு கிரேயான் பார்த்தபோது
சின்னவயதில் அப்பாவிடம்
இதற்காக வாங்கிய அடி நினைவுக்கு வந்தது.
வீடு பிடித்தால் சொல்லுங்கள்,
வெள்ளையடித்துத் தயாராக்கிவிடுகிறேனென்ற
உரிமையாளரிடம்….

இப்படியே தரமுடியுமா என்றேன்.
விநோதமாய்ப் பார்த்தவரிடம்
விளக்க நா எழவில்லை….
மனவளர்ச்சியற்ற மகனிடம்
மாற்றம் உண்டாக்கும் என்றே
எங்கள் சோர்ந்த மனதோரம்
சுடர்விடும் நம்பிக்கையை!

- கீதா மதிவாணன
கீதா மதிவாணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.