மேற்க்கே விழுந்து
மரித்துப்போன கதிரவன்;
வெள்ளை உடுத்தி விதவைகோலம்
பூண்டிருக்கிறாள் நிலா!
உடைத்து போட்ட
நட்சத்திர வளைத் துகள்கள்;
கண்ணீர் பெருக்கு மழை;
கருப்பு கொடிபிடித்த கார்மேகம்;
அலை எழுப்பும் அழுகுரல் ஒப்பாரி;
இருளின் மடியில் இறந்துபோன பூமி!
எதிர்காலம் விளக்கேற்றுகிறது கிழக்கில்;
சீர் வரிசையாய் தங்கமுலாம் பூசிய
பாடும் பறவைகள்;
சுபமுகூர்த்த வேளை;
சுடர்விடும் சூரிய மாப்பிள்ளை;
முகில் வெட்கம் மூடிய நிலாப்பெண்;
கண்பட்டுவிடாமல் கவர்ந்துகொண்ட கார்மேகம்;
புது வாழ்வு புணர அட்சதை தூவும் ஆனந்தமழைச் சாரல்;
ஏழு வர்ண்ணம் எடுத்து பூசிய வானவில் தாலிக்கயிறு;
எட்டு திக்கும் இடி(ந்து) விழும் கெட்டி மேளம்;
கடல் பாடும் வாழ்த்தொசை;
முதல் ராத்திரி!
அம்மாவாசையின் கருப்பு அறைக்குள்
காணாமல் போன காதல் ஜோடி;
சின்ன சின்ன சிமிலி விளக்கு பிடிக்கும்
நட்சத்திர கூட்டம்.
பிரபஞ்ச கருவறையில்
புத்துயிர் கொண்ட புதிய பூமி

சீமான்கனி