தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காலந்தோறும் காதல்

வைரமுத்து
 1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

2. காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

3. சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த

மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!

4. சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்

5. தேசிய காலம்
சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?

6 .திராவிட காலம் - 1
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?

7. திராவிட காலம் -2
விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது? விளையாட வேண்டும் வாடி என் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே

8. புதுக்கவிதைக் காலம் -1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

9. புதுக்கவிதைக் காலம் - 2
உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்

நட்பு

செந்தில்நாதன்
நட்புக்காக
உயிரைக் கொடுப்பது
அரிதல்ல...
உயிரைக் கொடுக்கும்
அளவிற்கு
நட்பு கிடைப்பது
அரிது...
ஆதலால்
உண்மை நட்பை
உதிரச் செய்யாமல்
உயிரில் விதைத்து
உறவில் உணருங்கள்...
- செந்தில்நாதன்
 

கூர் கனவு

சு.மு.அகமது
எனதென்று இல்லாத பொழுதுகளில்
நீ  உதிக்கிறாய்
கருகி உதிரும் மாம்பூக்களின்
அழுகல் நெடியோடு

எனக்கான எல்லாமும் ஓர்
ஒற்றை சருகென அலைபாய்கையில்
குலை தாங்கிய ஈச்ச மரமாய்
கூர்முனை ஓலை ஒற்றுகிறாய்

அதில்
வடியும் நிறம் பூசி
வாகாய் வந்தமர்கிறது உன் முகத்தில்
வலியும் வலி படர்ந்த நினைவுகளும்
தனிக் குயிலின் விடியலோசையாய்
தத்தளிக்கும் மூழ்குதலில்
எண்ணெயின் திரிவிளக்காய்
சுடர் படர்த்தி நிஜமடைகிறாய்

நெஞ்சார்ந்த தோழமைக்காய்
புள்ளியில் மையங்கொண்டு சுழற்றி அடிக்கிறாய்

எங்கோ மறைந்து போகிறது
மினுக்கட்டான் பூச்சியின் பகற்கனவும்
வானத்து விண்மீனின் பகலும்
எனது அபிலாஷைகள் போல்

இறக்கையால் எழுதியது

சு. வில்வரெத்தினம்
சொல்லித்தானாக வேண்டும்
தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.

சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்
கடலிடைச்சிந்திய துண்டங்களாம்
இத்தீவுகளைக் கவனியாமலேக
கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.

கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.
சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.

சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்
விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்
துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்

வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்
கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
ஆயினும்
வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்
வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?

சஞ்சீவி மூலிக்காற்றே வா
வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு
எழுந்து பறந்ததாக வேண்டும்
எம் முந்தைப் புலம் நோக்கி
வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.

இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர
அனுமனும் இங்கில்லை.
இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு
எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
எழுந்து பறந்தாகத்தான் வேண்டும்

குயில்கள் இப்போது குரைக்கின்றன

பொத்துவில் அஸ்மின்
ஓவியம் வரையும் தூரிகை கொண்டு
ஓட்டடை அடிக்கின்றாய்.
காவியம் பாடும் கைகளை கொண்டு
கற்களை உடைக்கின்றாய்.

சாதனை படைக்கும் சக்தி இருந்தும்
சாக்கடை அள்ளுகின்றாய்.
சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ
சப்பாத்து துடைக்கின்றாய்.

சவுக்கால் உன்னை அடிப்போருக்கு
சாமரை வீசுகின்றாய்.
சருகாய் உன்னை ஆக்கியோருக்கு
சந்தனம் பூசுகின்றாய்.

பசியை உனக்கு தருவோருக்கு
சோறு சமைக்கின்றாய்.
நஞ்சை உனக்கு தந்தோரிடமும்
நலமா என்கின்றாய்.

கடலைப் உனக்குள் வைத்துக் கொண்டு
பிச்சை கேட்கின்றாய்.
ஆயிரம் சூரியன்  அருகில் இருந்தும்
இருட்டில் இருக்கின்றாய்.

நாட்டை சுமக்கும் தோள்கள் உனது
மூட்டை சுமக்கின்றாய்.
மூட்டை சுமந்தும்  பசியால் ஏனோ
முடங்கிப்போகின்றாய்?

உறவுகள் ஆயிரம் இருந்தும் ஈற்றில்
உணவுக்கலைகின்றாய்.
தேகம்தேய உழைத்துமென்ன
தெருவில் நிற்கின்றாய்.

தென்றல் கூட புயலாய் மாறும்
தெரிந்து கொள்ளப்பா!
துவண்டு கிடந்து அழிதல் விட்டு
துணிந்து நில்லப்பா!

மரணம் என்ற நோயை கொல்ல
மருந்து இல்லப்பா!
வாழும் வரைக்கும் உனக்காய் வாழ்வை
வாழ்ந்து பாரப்பா!

தண்ணீர்கூட கோபம் வந்தால்
தட்டிக் கேட்கும்பா.
வெட்கம் கெட்ட உந்தன் நெஞ்சை
வெட்டிப் போடப்பா.

பாசம் நேசம் பந்தம் எல்லாம்
பழைய பொய்யப்பா
வேசம்போடும் மனிதர் கூட்டம்
விளங்கிக்கொள்ளப்பா

உந்தன் கையில் காசு இருந்தால்
ஊரும் மதிக்கும்பா.
சுவாசம் கூட  தேவையென்றால்
சும்மா கிடைக்கும்பா.

தண்ணீர் தோட்டம் வைத்துக்கொண்டு
தாகம் குடிக்காதே.
கண்ணீர் சிந்தி கலங்கி நின்றால்
கவிதை பிறக்காதே.

குயிலை உனக்குள் வைத்துக்கொண்டு
குரைத்துத் திரியாதே.
குட்டுப்பட்டு குட்டுபட்டே
குன்றிப்போகாதே.

காக்கைகூட நல்லவை சொன்னால்
காது கொடுத்து கேள்.
அகந்தை கொண்டு கேட்க மறுத்தால்
அதுவே உனக்கு வாள்..

நன்றி கெட்ட மனிதனை பார்க்கிலும்
நாய்கள் என்றும் மேல்,
என்பதை உணர்ந்து வாழ்வாயாயின்
வானம் உனக்கு கீழ்

மரியாதைக்குரிய தோல்வி

பிச்சினிக்காடு இளங்கோ
எல்லாரும் ஒரு
முடிவுக்கு வருவோம்
இனி அதை
யாராலும்
எந்தக்காலத்தும்
ஒழிக்கமுடியாது என்று
உறுதிகொள்வோம்

இவ்வளவு பலவீனமான நம்மை
பலப்படுத்த நினைத்தது
தவறுதான்
ஒரு நியாயமாற்றம்
நம் பலவீனங்களால் தோற்கிறது

காதலர்கள் அதை
அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள்;
மீறியிருக்கிறார்கள்;
தோற்கடித்திருக்கிறார்கள்
சமூகமும் அவர்களை
தோற்கடித்திருக்கிறது

தோற்கிற ஒன்றைத்தான்
சிலர்
தூக்கி நிறுத்த
ஆயுளைக்கழித்தார்கள்

நிலை நிறுத்தவேண்டிய
அவசியத்திற்காக
தோல்வியை வெற்றியாகக் கருதினார்கள்

அதனால்தான்
அவர்கள்
ஆற்றோடு
போகிறவர்கள் இல்லை
காற்றோடு
பறக்கிறவர்களும் இல்லை

ஊரோடும் அவர்கள்
ஒருவரில்லை
அவர்களால்
முடியாவிட்டாலும்
அவர்கள்
முயன்றதால் கிடைத்தத்தோல்வி
மரியாதைக்குரியது

நீ மட்டும் இருந்தால் அங்கு நீ மட்டும் போதும்

மீனாள் செல்வன்
காற்றே வேண்டாம் - நீ தென்றல் ஆகின்றாய்
ஈரம் வேண்டாம் - உன் விழிகள் போதும்
சுடர்கள் வேண்டாம் - உன் பார்வை போதும்
பூங்கா வேண்டாம் - உன் பூவுடல் போதும்
இசையே வேண்டாம் - நீ வாய் திறந்தால் ஆகும்
தத்துவம் வேண்டாம் - உன் மௌனம் போதும்
சுவர்க்கம் ஏனோ - அதுதான் நீயே

வெறுமன்

சு.மு.அகமது
பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன்
நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில்
அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான்

அதீத ஞானம்பெற்றவன் போல்
போதியின் நிழலில் நின்று
எதேதோ பிதற்றுகிறான்

இலையுதிர்த்த விருட்சத்தின்
கடைசி இலையை கையிலெடுப்பவன்
இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான்

போலப் பொழிதலும்
ஆகச் சிறப்பதுமாய்
பயணத் தொடர்கையில்
மௌனமாய் பொருளுணர கிரகிக்கிறான்

கவலையால் நிரம்பியவனின் ஓலம்
கவிதையாயின் அவன் கவிஞன்
பேத்தலெனின் புத்தி சுவாதீனமற்றவன்
தத்துவமெனில் ஞானியாகிறான்

ஏதுமற்று போனால்...
வெற்றுவெளியில் உலவும்
’வெறுமனா’ய் போவான் அவன்!?

மழைக்குருவி

வைரமுத்து
நீல மலைச்சாரல் - தென்றல்
நெசவு நடத்துமிடம்
ஆல மரக்கிளைமேல் - மேகம்
அடிக்கடி தங்குமிடம்

எந்திர ஓசைகளைக் - கழற்றி
எங்கோ எறிந்துவிட்டு
மந்திரம் போட்டதுபோல் - ஒரு
மௌனம் வசிக்குமிடம்

கட்டடக் காடுவிட்டு - நிழல்
கனிகின்ற காடுவந்தேன்
ஒட்டடை பிடித்தமனம் - உடனே
உட்சுத்தம் ஆகக்கண்டேன்

வானம் குனிவதையும் - மண்ணை
வளைந்து தேடுவதையும்
காணும் பொழுதிலெல்லாம் - ஒரு
ஞானம் வளர்த்திருந்தேன்

வெவ்வேறு காட்சிகளால் - இதயம்
விரிவு செய்திருந்தேன்
ஒவ்வோர் மணித்துளியாய் - என்
உயிரில் வரவுவைத்தேன்

சிட்டுக் குருவியொன்று - ஒரு
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் - என்னை
வாவென்றழைத்தது காண்

மொத்தப் பிரபஞ்சமும் - என்
முன்னே அசைவதுபோல்
சித்தப் பிரமைகொண்டு - அந்தச்
சிட்டை ரசித்திருந்தேன்

அலகை அசைத்தபடி - அது
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் - சற்றே
உயரப் பறந்ததுவே

பறக்க மனமிருந்தும் - மனிதன்
பறக்கச் சிறகுமில்லை
இறக்கை துடிக்கையிலே - என்
இமைகள் துடிக்கவில்லை

சொந்தச் சிறகுகளில் - வானைச்
சுருட்டி எடுத்துக் கொள்ளும்
இந்தக் குருவியினும் - மனிதன்
எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?

கீச்சு கீச்சென்றது - என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே - என்மேல்
பிரியமா என்றது

 அறிவுக்கு விரிவுசெய்ய - மனிதர்
ஆயிரம் மொழிகாண்பினும்
குருவிக்கு விடையிறுக்க - ஒரு
குறுமொழி கண்டதுண்டா?

ஒற்றைச் சிறுகுருவி - நடத்தும்
ஓரங்க நாடகத்திலே
சற்றே திளைத்திருந்தேன் - காடு
சட்டென்று இருண்டதுகாண்

மேகம் படைதிரட்டி - வானை
மிரட்டிப் பிடித்ததுகாண்
வேகச் சுழற்காற்று - என்னை
விரட்டியடித்துது காண்

சிட்டுச் சிறுகுருவி - பறந்த
திசையும் தெரியவில்லை
விட்டுப் பிரிந்துவிட்டேன் - விரைந்து
வீட்டுக்கு வந்துவிட்டேன்

வானம் தாழ்திறந்து - இந்த
மண்ணில் வீழ்ந்ததென்ன
காணும் திசைகளெல்லாம் - மழையில்
கரைந்து போனதென்ன

மின்னல் பறிக்குதென்று - சாரல்
வீட்டில் தெறிக்குதென்று
ஜன்னல் அடைத்துவைத்தாள் - மனைவி
தலையும் துவட்டிவிட்டாள்

அந்தச் சிறுகுருவி - இப்போ(து)
அலைந்து துயர்ப்படுமோ?
இந்த மழைசுமந்து - அதன்
இறக்கை வலித்திடுமோ?

காட்டு மழைக்குருவி - போர்த்தக்
கம்பளி ஏதுமில்லை
ஓட்டை வான்மறைக்க - அதன்
உயரே கூரையில்லை

கூடோ சிறுபுதரோ - இலைக்
குடைக்கு  கீழ் ஒதுங்கிடுமோ?
தேடோ தேடென்று - இடம்
தேடி அலைந்திடுமோ?

பெய்யோ பெய்யென்று - மழை
பெய்தால் என்ன செய்யும்
அய்யோ பாவமென்று - குருவி
அழுவதை நினைத்திருந்தேன்

காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த
கதையே வேறுவிதம்
கூட்டை மறந்துவிட்டுக் - குருவி
கும்மியடித்ததுகாண்

வானப் பெருவெளியில் - கொட்டும்
மழையில் குளித்ததுகாண்
கானக் கனவுகளில் - அது
கலந்து களித்ததுகாண்

சொட்டும் மழைசிந்தும் - அந்தச்
சுகத்தில் நனையாமல்
எட்டிப் போனவனை - அது
எண்ணி அழுதது காண்

இன்றைய இளைஞர்கள்

சந்தோஷ்ராஜ்
சோற்றுக்கே வழி இல்லை
சோனி எரிக்சனோடு போராட்டம்!
ஏறுபிடிக்கும் கலாச்சாரம் மறந்து
ஏர்செல்லோடு திண்டாடிக் கொண்டிருந்தாயே!
நோக்கத்தை மறந்து விட்டு
நோக்கியாவோடு என்னய்யா பேச்சு
எதிர்காலம் புதைந்து கொண்டிருக்கிறது
நீ சாம்சங்கோடு இசைமழையில் நனைந்து
கொண்டுருக்கிறாயா!
நம் முன்னோர்கள் போராட்டத்தின் வாரிசுகள்
இன்றைய இளைஞர்கள் வோடோபோனின்
இரசிகர்கள்