எல்லாம்
கழித்தல் குறியாகிப்போன தேசத்தில்...
பூஜ்யங்கள்
பூஜிக்கப்படுகின்றன!
ஒன்றை பத்தாக்குவதோ,
ஒன்றுமில்லாமல் ஆக்குவதோ,
பூஜ்யங்களே தீர்மானிக்கின்றன!
பூஜ்யத்தின் ஆளுமையின் கீழ்,
ஒன்றானாலும் ஒன்பதானாலும்
அணிவகுத்து நிற்கின்றன!
அணிவகுத்து நிற்கும் எதனோடும்
ஆலிங்கணம் செய்து
பூஜ்யங்கள்...
பூஜ்யங்களை மட்டுமே
பெருக்கிக் கொள்கின்றன!
கூட்டலும் பெருக்கலுமே...
வாழ்வாகிப்போனதால்,
வகுத்தல் வஞ்சிக்கப்பட்டு
சமன்பாடுகள்
தகர்க்கப்படுகின்றன!
வகுத்தலுக்கும் வகுபடாது...
கழித்தலிலும் கழிவுறாது...
தொன்றுதொட்டுத் தொடர்கிறது
பூஜ்யங்களின்
சாம்ராஜ்ஜியம்
பாண்டூ