நம்பிக்கை வை - கலைமகன் பைரூஸ்

Photo by Jr Korpa on Unsplash

வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்!
திமிர்பிடித்த
ஏறுகள் உன்மேலேறி
உனை மிதிக்க வரும்.
எடுப்பார் கைப்பிள்ளையாய்கொண்டு
மேலே தூக்கி கீழேபோடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்.
உன் திறமைகளை எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கைவை!
உன்னை நம்பு
உனக்குள் ஆயிரமாயிரம்
வேர்கள் முளைகொள்வதைத்தெளி!

நானோ நன்குபட்டவன்.
சமூகம் – சகபாடிகள்
நாடு -பெரியவர்கள் என்போர்
பேச்சளவில் உயரப்பேசுவர்
பூச்சியம்...
எல்லாம் பூச்சியம்.


உன்கையெழுத்தை கண்டு
உன் தலையெழுத்தைச்சொலும்
சூன்யங்களும் உண்டு!

சுரமில்லா கீதங்கள்கொண்டு
உனையேற்றிப் புகழ்வர்
ஈரமில்லா நெஞ்சுடையாரின்
ஈசல் வார்த்தைகளுக்குள்
உனை இழக்காதே!

வறுமை உன்னோடு ஒட்டிப்பிறந்த்து
அதற்காக
எருமைகள் குட்டையைக் குழப்புவதை
ஏரெடுத்தும் பாராதே!
உன்னில் நீ நம்பிக்கைவை
நம்பி நீ எதிலும்கைவை
வாழ்க்கையில் சறுக்காதவர்கள்
எவர் உளர்? புன்னகை
உன்னில் புன்னகை மலரும்


இன்று
உயரப் பேசப்படுபவர்கள்
அன்று
துன்பத்தின் சிகரத்தில்
ஊசிக்கயிறில்
நடந்து
சிறந்து பேறுகண்டவர்கள்!
உன்னில் நம்பிக்கைவை!

உன் மயிர்பிடுங்கி
உனைத் தரமிறக்கி
உன்னிதயத்தை
சல்லடையாக்கி
சந்தர்ப்பம் வரும்போது
உனை மேலேஅனுப்பிட
உள்ள சாரார்பற்றி
தெள்ளத் தெளி!

வாழ்வில் சறுக்கல்களுக்கு
துவண்டுவிடாதே!
உனை நம்பி கிழக்கில்
ஒளிக்கீற்றுக்கள் வருவதைப் பார்!
பார் ஒருநாள் உனை ஏத்தும்!
ஏன்
உனை இழிந்தோர்கூட
உன்பாதம் போற்றிநிற்பர்
கலைமகன் பைரூஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.