நான் நானாய் இருக்கிறேன்
இது அனைவரையும் ஆச்சிரியப்படுத்துகிறது
நான் என்ன செய்வது
என்கிறாய் நீ
உனக்கு தெரியுமா
நம் இருவரில்
யாரோ ஒருவர் தான் அப்படி வாழ முடியும்
அதிலும் நீ அதிர்ஷ்டசாலி
ஆணாய் பிறந்ததினால்
குடும்பத்து வரைமுறைகள்,
சமுதாய நடைமுறைகள்
எதுவும் உன்னை
கட்டுப்படுத்தி விட முடியாததாய்..
அதை விட
நல்லவையோ கெட்டவையோ
உன் கருத்துகளுக்கு செவிமடுத்து...
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உன் செயல்கள்
எல்லாவற்றையும் ஏற்று ...
அழுகிற குழந்தைக்கான
அவசர சமாதானமாய் வரும்
உன்
ஒரு சில பொய்களுக்கே சிரித்து ....
சகிப்பு தன்மையின் சான்றாய்
என் விருப்பு வெறுப்புகள் மறைத்து
அறிவிக்க வந்து விட்டு
ஆலோசனை
கேட்பதாய்
செய்யப்படும்
பாவனைகள் நம்பி
உன்
தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் பாதையில்
பயணம் செய்ய
என் வாழ்க்கையையே
நான் விலையாய் கொடுத்திருக்கிறேன்
சுபத்ரா