தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நாட்காட்டி

நளாயினி தாமரைச்செல்வன்
திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே
கிழித்துப்போடும் எமக்கு
கடந்த பொழுதுகளின்
நிகழ்வுகளின் நினைவுகளை
மறந்துவிடத் தெரிவதில்லை.

நாட்கள் ஏனோ
அத்தனை
வேகமாகத்தான் போகிறது.

நிகழ்வுகளின்
நினைவுகள் மட்டும்
ஏனோ முடிவதில்லைத்தான்.

அழுகிறோம் .
சிரிக்கிறோம்.
அனலாகிறோம்.

ஆனாலும்
புதிதாய் வரும்
ஆண்டின் நாட்காட்டியை
ஏற்கத் துடிக்கும்
சுவரில் அறைந்த
ஆணிபோல் தான்
நாமும்

புள்ளிகள்

கி.பி. அரவிந்தன்
கண்களின் வீச்சில்
ஒரு புள்ளியில்
சந்திக்கும் வேளை
காதல் அரும்புகிறது.

அது கணங்கள் தோறும்
நிகழ்கின்றது.
புள்ளிகள் மாறுகையில்
காதலும் மாறகிறது.
காதலோ
அது மறைவதில்லை.
எனது கண்கள்
வீச்சைப் பாய்ச்குகின்றன,
புள்ளிகள் சந்திக்காத
நெடுந்தூரப் பயணம்.

முகத்தைச் சுருக்கி
நிராகரித்தும்,
கண்களால் எரித்துக்
காயமாக்கியும்,
நாவினால் சுட்டு
அவமானமாக்கியும்,
ஒரு புழுவென என்னை
மதியாமலும்.....
புள்ளிகள் சென்றன.
பயணத்தின் தூரம்
அதிகம் போலும்.
புள்ளிகள் சுருங்கி
சூனியமாகும்.
ஏகாந்தமெங்கும்
முகமறியாதவர்களுடன்
காதல் தொடர்கிறது

ஆனாலும் புடிச்சிருக்கு

சங்கீதா
"எழுதி எழுதி
என்னத்த கண்ட?"
மனசாட்சி என்னைக் கேட்டாலும்
எண்ணத்தில் உள்ளதை எல்லாம்
எழுதிக் குவிக்கின்றேன்.
உள்ளுக்குள் போராட்டம்
ஓராயிரம்.
ஆனாலும் புடிச்சிருக்கு
அவளைப் பற்றி எழுதுவதற்கு

விழி தீபம்

பாண்டு
கண்ணிரண்டும்  காட்சியதான் காண முடியல
கருப்புவெள்ளை காட்சியினா என்னனு தெரியல
கண்ணிரண்டும் இல்லனாலும் கண்ணீர் குறையல
கூளிங்க்லாஸ்  சூரியன பார்க்க உதவல...

சாலையத்தான் கடந்திடத்தான் உதவும் சாமியே..
காலையெது மாலையெது தெரிய வில்லையே
வாழையடி வாழையென விழியைக் கொடுங்களேன்
வாழ்க்கையினை கடந்திடத்தான் உதவி புரிங்களேன் !

இருக்கும்வரைக் கேட்டதுண்டா கண்ணை நாங்க?
இறந்தபிறகு ஒன்னுமட்டும் தந்து போங்க!
இருக்கும்வரைப் போற்றுவோம் உங்களை  நாங்க...
இறந்தபிறகும்  வாழலாமே வையத்தில் நீங்க !

சூரியனும் ஒளிகொடுத்துச் சாக வில்லையா ?
நிலவதையும் நினைத்துநினைத்து வாழ வில்லையா ?
மாறிமாறி விழிதீபம் ஏற்றிட வாங்க
மண்ணுக்குள் வீணாக விடுவதும் ஏங்க ?

தப்பு செஞ்சா தெய்வமும்தான்  கண்ண குத்துமா !
அப்படின்னு சொன்னவன் என்ன சுத்தமா ?
இப்படியே இருட்டறையில் விடத்தான் சித்தமா ?
அன்புள்ளம்  அடகுதான் போனதோ  மொத்தமா?

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

குஞ்சுப்பரந்தன்
சிலவேளை மாடுகள்
பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில்
குண்டுகள் காத்திருந்தன.
மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.

மிஞ்சியிருக்கும் இரண்டு
மாடுகளின்
சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.
மாதாவின் தலை
அவளது கைகளுக்கு
எட்டாமல் விழுந்திருக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.

தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்
வாழுகிற மாடுகளாயிருந்தன.
தடைசெய்யப்பட்ட
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.
ஒரு குழந்தை
வாய்க்காலில் மறைந்து
தப்பியிருக்க
மாட்டுக்கன்றுகள்
பால் காயு முன்பாகவே
இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்
எந்தத்துவக்குகளும் இல்லை.
இராணுவ உடைகளையும்
அணிந்திருக்கவில்லை.
வெடித்துச் சிதறிய குண்டு
மாடுகளை அள்ளி எடுத்த
பட்டியில்
துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.

சிதறிய சதைகளை
தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்
நாய் ஊளையிடுகிறது.
பாலுக்கு அழுகிற குழந்தை
தலை துண்டிக்கப்பட்டிருக்கிற
மாதாவை தேடுகிறது
இறந்த பசுவை
தேடுகிற கன்றினைபோல.

காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்
பட்டியிலிருந்தும்
மேய்ச்சலுக்காய் திரிந்த
தரைகளிலிருந்தும்
குருதிதான் பெருக்கெடுக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?

பசுக்கள் குழந்தைகளுக்கு
பாலினை கொடுத்தது
பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.
வாய்களை மீறி
மாடுகளிடம் அழுகை வருகிறது.

அவைகள் எதையும் பேசப்போவதில்லை?
குண்டுகளோடும்
கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்
அதிகாரத்தோடும்?

மாதாவிடமும் எந்த
திருச்சொற்களும் இல்லை.

மாதாவும் மாடுகளும்
வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க
மேய்ச்சல் தரைகளில்
மேலும் பல குண்டுகள் காத்திருந்தன

என் காதலும் நானும்

குட்டி ரேவதி
இனி எனக்குப் பேச எதுவுமில்லை
வாழ்வின் மெய்மைகளையெல்லாம் களைந்துவிட்டு
இறங்கிய நதியில்
ஊர்ந்து வரும் அவன்
பருகக் காத்திருந்ததுபோல் ஆயிற்று
மரணம் சம்பவிக்கும் அவனது தேகத்தின்
எச்சில்குளத்தில் மூச்சுத் திணறுகிறேன்
ஒரே காதலின் மாதிரிகள் தாம் எல்லாமும்
எதுவும் தவறில்லை;
கனவுகளிலிருந்து பிய்த்து இழுத்துச் செல்லும்
துயரத்தின் வலிமையே
காலமாய் உருமாறுகிறது
நீரைப் பிரித்துப் பிரித்துக் களிக்கும்
அவன் பரிசளித்த மயானம்,
குருவிகள் வந்தமர ஏங்கும் எனது விழிகள்
இவற்றோடெல்லாம்
நான் என்ன செய்துவிடமுடியும்?
புத்தகங்களுக்குள் உலாவும் கதைராட்டினத்தில்
அவன் கட்டிவிட்ட முத்தங்கள்
சுழன்று உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
இனி எனக்குப் பேச எதுவுமில்லை
அவனிலிருந்து வெளியேறிப்
பறக்க வேண்டும் பிளிறி
கரையில் உலரும் எனது ஆடைகளையும்
வாரிக்கொண்டு-  குட்டி ரேவதி 

தும்மலுக்கு நன்றி

சுரேஷ்
தும்மலின் முடிவில்
அன்று நான்
அனிச்சையாய் கூறிய 'அம்மா',
நினைவூட்டியது எனக்கு
மறுநாள் அவளுடைய
பத்தாம் ஆண்டு திதி என்று.

தும்மிய பின் மெளனம் காக்கும்
என் பையனிடம்
''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு'
என்கிறேன் சில நாட்களாய்.
தும்மலுக்கு நன்றி

இருவரின் புரிதலில்

கா.ந.கல்யாணசுந்தரம்
மனிதப் பிறவியின் பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது...
அவளது புன்னகையில்
பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்!

கற்றது கைப்பிடி அளவுதான்னென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில் அகமகிழ்ந்தது!

எதிர்காலம் ஒரு வினாக்குரியானபோது
புதிரல்ல நம் வாழ்க்கையென்று
திட்டமிட்டு அவளால்
தடம்பதித்தது நிகழ்காலங்கள்!

எல்லா வளமும் நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொருநாளும்
பிறப்பெடுக்கின்றன

உறங்கும் என் கவிதை

கீதா
ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்

காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கு
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்

எங்கே தொலைந்துபோனேன்?
மீண்டும் கிடைப்பேனா?
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?

இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..

வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது?

பெண் குழந்தை தாலாட்டு

புரட்சி கவிஞர் பாரதிதாசன்
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு