உன் நினைவில்...
கருப்பு வெள்ளை
வானவில் காண்கிறேன்!
கலவை நிறத்தில்
நிலவை ரசிக்கிறேன்!
வெளிச்சக்கூட்டில் ஒளிந்து கொள்ள
ஓர் மறைவைத்
தேடுகிறேன்!
விதவை வானில் விடிய விடிய
வெளிச்சம்
தேடுகிறேன்!
உன் வீட்டு வாயில் திறக்கும் வேளையில்
செவ்வாயில்
ஜீவிக்கிறேன்!
கடவாயில் நீர் வடிய
கனவுலகில்
நான் வசிக்கிறேன்!
ஒரு காலில் ஆண் செருப்பும்
மறுகாலில் பெண் செருப்புமாய்
ஜோடி சேர்த்துப் பார்க்கிறேன்!
தொலைபேசி சிரிக்கும்போதெல்லாம்
தொடர்பில் நீ இல்லையென்றால்
தொலைந்து போகிறேன்!
என் கவிதைத் தொகுப்பிற்குள்
உன் கால் கொலுசின்
தடம் தேடுகிறேன்!
என் இளமை பூந்தோட்டத்தில்
உன் உருவத்தில்
மலர் தேடுகிறேன்!
பிறப்பின் மகிழ்ச்சிக்கும்
இறப்பின் இரங்கலுக்கும்
இடையில்
என் இனிய இளமைப் பருவத்தில்
ஏன் இந்த இதயத்தில்
ஊஞ்சலாட்டம்...?
காதலிக்கத் தொடங்கிவிட்டேனா ?
தமிழ் மதியன்