காதல் வயப்பட்டால்
முள்ளும் மலராகும்
என்றதை மறுத்தேன்.
காதல் வயப்பட்டால்
கண்கள் குருடென்பதை
உணர்வுகள்
ஒத்துக் கொள்ள மறுத்தது.
காதலில் காலத்தைக்
கழிப்பவனைக்
கவலைகள் தொட்டுப் பார்க்காது,
உண்மை அதுவல்ல என்று
உரைத்தது மனது.
காதலைச் சொல்லிப்
பழக்கப்பட்டால்
வார்த்தைகளில் வாசம் வீசும்
என்பதெல்லாம்
ஒதுக்கப்பட வேண்டிய
கற்பனை என்றேன்.
காதலுக்காகச் சொன்னதையெல்லாம்
எப்போதும் மறுத்தவன்,
இப்போது மறுக்கிறேன்,
முதலில் மறுத்ததை
சித. அருணாசலம்