நெஞ்சைக் கவர்ந்தவனே! நேசமிகு நண்பனே!
சுடர்விடும் புத்தி, தன்னென்ற தோழமை,
குழைவான பாசம், கம்பீரமானக் காதல்
எங்கிருந்துதான் வாங்கி வந்தாய்
இத்தனையும்?
உன்னோடு பேசிச் சிரித்தப் பிறகு
வேறொருவரின் ஹாஸ்யமும்
என்னை ஈர்க்கவில்லை
நீதானே சொல்லித் தந்தாய் எனக்கு
கம்பன் ஷெல்லி எல்லாம்!
இத்தனையும் விட்டு பொருளீட்டப் போகிறேன் என்று
ஒரு மழைமாதத்தில் சொல்லிப் போனாய்
மைல்களுக்கு அப்பால் நீ
மணித்துளிகள் எண்ணியபடி நான்!
எப்போதாவது எத்தனை முறைப் படித்தாலும்
சலிக்காத கவிதையாய் வரும் உன் கடிதம்
அந்த அக்னி காலங்கள் எப்படியோ உருண்டோட
இதோ இன்று நம் திருமணம்.
நீ எனக்கு கணவனாகப் போகிறாயாம்!
நீ எனக்கு நல்ல கணவனாக
நான் உனக்கு நல்ல மனைவியாக
வாழ்த்துச் சொல்லிப் போகிறார்கள்.
நீயெனக்கு கணவனாவது இருக்கட்டும்
நாளைக்கும் நீயென் நண்பனாய்
இருப்பாய் என்று நம்புகிறேன்!
-
எட்வின் பிரிட்டோ