உன்னிடம்
இடம்பெயர்த்துவிட்ட பிறகு
மௌனமாய்
நீ என்னைக் கடந்து செல்லும்
கன நேரத்திற்காய்
கடிகாரத்துடன் என்னைப்
பிணைத்துக் கொள்கிறேன்.
சுண்டுவிரல் பிடித்து
நடைபழகும் குழந்தையின்
வினோத கேள்வியொன்றிற்கு
விடைதேடும் தகப்பனைப்போல
உன் உதட்டுச் சுழிப்பிற்கு
அர்த்தம் தேடுகிறேன்.
தூரம் சென்று
திரும்பிப் பார்த்த - உன்
தோழிகள்
ஏதோ சொல்லி - நீ
வெட்கப்பட்டுச் சிவந்ததை
இயல்பாக நடந்ததாக
ஏற்க மனமில்லை
அந்தக் கடைசி நாளின்
நண்பர்கள் கூட்டத்தில்
என்பெயர் உச்சரிக்க நேர்கையில்
உன் குரல் உடைந்து
கண்மை கலைந்ததற்கு
நீ
என்ன சமாதானம்
சொன்ன போதும்
ஏற்கத் தயாராயில்லை
நான்
பா. சக்தி கல்பனா