தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தோல்வி

ஜான் பீ. பெனடிக்ட்
மறையாத சூரியன்
மறுநாள் உதிக்காது
இருட்டாமல் மலராது
இனிய காலைப் பொழுது
உடையாத பனிக்குடத்தில்
உருவாகாது சின்னஞ்சிறு உயிரு
புடம்போடா தங்கத்தால்
பொன் நகை விளையாது
குழையாத களிமண்
குயவனுக்கு ஆகாது
தோல்வியை முத்தமிடில்
வெற்றி கிட்ட நெருங்காது

துளிகள் நிரந்தரமில்லை

நட்சத்ரவாசி
நிலவொளியில்
மல்லாந்து
படுத்துக்கொண்டு
சுயமைதுனத்தில்
ஆள்கிறான் அவன்
தரையில்
ஆங்காங்கே
விந்து துளிகள்
நிலவொளியாய்
--
நீ பெண்மையை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
மௌனத்தை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
என்னொரு நீயை எழுதிய போது
வார்த்தைகள் கலைந்தன
ஒரு சொல் கவிதை.
--
ஒரு பொழுதில்
கடலலை சீறும்
பின் தணியும்
உள்வாங்கும்
எப்போதும்
இப்படியாக தான்
போகுமோ
பொழுது

ஒன்ன நெனைக்காம ஒருபொழுதும் போனதில

பொத்துவில் அஸ்மின்
எங்கோ மலர்ந்திருந்து
எனக்குள்ளே மணப்பவளே...
நெலவே ஒன்னால
நெலமறந்து நிக்கேன்டி...

கலபேசும் கண்ணால
வலவீசிப் போனவளே...
நாளுமொன நெனச்சி
வாழுதடி ஏ..உசுரு..

பாகக்கா இனிக்குதடி...
பால்புக்க கசக்குதடி...
ஒன்ன நெனச்சாக்கா
ஒலகமெலாம் வெறுக்குதடி

முருங்கப்பூ பல்லழகே
முட்டநிற தோலழகே
கஸ்தூரி பாக்குநிற
கரும்புதட்டுக் காரிகையே...

சோளகன் மீசநிற
சோக்கான ஓமுடியில்
ஏமனச முடிஞ்சதுநீ
ஏமாத்தி போய்விடவா...

ஆசவடிஞ்சிடுச்சா
அன்புத்தீ நூந்திடிச்சா
காசக் கண்ட மனம்
காதலன மாத்திடிச்சா...

அண்டுநீ சொன்னதெல்லாம்
அடிநெஞ்சில் கேக்குதடி...
இண்டு அதநெனச்சி
இதயஅற கொளருதடி...

பகலிரவாய கதச்சதெல்லாம்
பழயகத ஆயிடுமா..?
நாம்கதச்சி கொண்டதெல்லாம்
நா மறந்து போயிடுமா...?

பிரியத்த வெதச்சிபுட்டு
பிஞ்சியில பிச்சபுள்ள
நெஞ்சபத்த வெச்சி
நெனப்பெல்லாம் நீயானாய்...

'சினேகா' சிரிப்பினிலே
சிறகடிச்சு நான்பறந்து
'சல்வார்' கனவுகளில்
சாஞ்சகத நெனப்பிருக்கு

காசித் திமிரொழுக
கட்டழகி நீபோக
எட்டா பழமெண்டு
எண்ணியது நெனப்பிருக்கு...


ஏங்கவித நீபடிச்சி
ஏக்கமுடன் தூதனுப்ப
'ஆம்ஸ்ரோங்காய்' நானன்று
ஆனதெல்லாம் நெனப்பிருக்கு....

பாடப் புத்தகத்த
படிக்கிறத்த நான்விடுத்து
பலதடவ ஓமடலில்
படிச்சதெல்லாம் நெனப்பிருக்கு...

'டியுசனுக்கே' நாமொருநாள்
'டிமிக்கி' குடுத்துபுட்டு
காதலில புதுப்பாடம்
கற்றதெல்லாம் நெனப்பிருக்கு...

நான்தின்ன நீதின்ன
நம்மிதழ தேன்தின்ன
சின்னவிழி சொக்கி
சிணுங்கியது நெனப்பிருக்கு...

விழிகளில மீன்புடிச்சி
விரல்களில சுளுக்கெடுத்து
ராத்திரியில் நாம்செய்த
ரகசியங்கள் நெனப்பிருக்கு...

வீட்டார் இதஅறிஞ்சி
வீணாக ஒனக்கடிக்க
புழவா நாந்துடிச்சி
புழுங்கியது நெனப்பிருக்கு...

அலரிவெத அரச்சி
ஆத்திரமாய் நீதின்ன
அலறி நாந்துடிச்சி
ஒளறியது நெனப்பிருக்கு....

ஒன்னப்பாத்துவர
ஓரிரவில் மனசுவெர..
நாய்வெரசி நானுழுந்து
நடுங்கியது நெனப்பிருக்கு...

கொழந்த மனசறிஞ்சும்
கொரல்வலய முறிச்சவளே..
எல்லாம் நெனப்பிருக்கு
என்னெப்பு ஒனக்கிருக்கா...

ஒன்ன நெனைக்காம
ஒருபொழுதும் போனதில
ஏய்புள்ள... நீசொல்லு..
என்னொனக்கு நெனப்பிருக்கா...?

இயல்பு

எழிலி
பொழுது புலர்ந்தது!
பூக்கள் மலர்ந்தது!

கறவைப்  பசுக்கள்
கன்றுகளுக்குப்
பால் சுரந்தன!

தெப்பக் குளத்தில்
தாமரைகள் விரிந்தன!
தெய்வப் பாசுரங்கள்
கோயிலில் முழங்கின!

தெருக்களில்-
முற்றந்தெளித்து
புதுக் கோலம்
அமைந்தது!

வீட்டின் கூரையில்
காக்கைகள்  விருந்துன்ன
அமர்ந்தன!

பள்ளிக்குழந்தைகள்
புத்தகப் பையுடன்
ஓடினர்!

மெத்தை வீடுகளில்
நெல் மணிகள்
காய்ந்தன!

ஆற்றில் குளிப்பவர்
ஆடு மேய்ப்பவர்
வீட்டில் இருப்பவர்
வெளியில் போவோர்
கூடிய சந்தையில்
பேரம் பேசுவோர்
ஓடி ஆடிட
ஏனையோர்
ஏதேதோ வேலையில்
உடன்பட-

சொல்லாமல் கொள்ளாமல்
சுழன்று வந்தது
சுனாமி!
இல்லாத வீட்டுப்
பிள்ளை-
வாரித் தின்பதேப்
போல் எல்லாவற்றையும்!                                                   

அரை மணிக்குப் பின் -
ஊர் அழிந்தது!
திண்ணை வீடுகளில்
பிணங்கள் மிதந்தன!
நொறுங்கிய  பங்களாக்களில்
பொருட்கள்  சிதறின!
பள்ளியில் பெஞ்சுகளோடு
பிஞ்சுகளும் மிதந்தன!

உயர் திணையும்
ஆய்தத்திணையும்
ஒன்றாய்த்  தின்ற
திருப்தியில்
ஏப்பமிட்டுக்
கடலுக்குள்
மூழ்கியது
காலக் கோளாறு!

புதிதாய்ப்
பொழுது புலர்ந்தது.
கழிவுகளை
அப்புறப்படுத்தி
அன்றாடக் கடமைகளில்
ஆழத்தொடங்கியது -
மனிதம்!
எதிர்மறையின்
இயல்பை
ஏற்கவும்
பழகிக் கொண்டது

காமம் செப்புதல்

சுகுமாரன்
நீ தாகபூமியும்
நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது
நின்று தயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது

இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ

பூமியை உறிஞ்சிவிடப்
பொழிகிறது
பொழிந்து தணிகிறது மேகம்

சினம் தணியக்
கூடலும் ஆயுதம் ஆவதெப்படி?
யோசித்துக் கிடந்த என் உதடுகளில்
சொட்டி விழுகிறது உன்
ஒரு துளிக் கண்ணீர்

அந்த ஒற்றைத் துளியில்
நூறு கடலின் உவர்ப்பு
அந்த ஒற்றைத் துளிக்கு
உறைபனிப் பாறையின் கனம்

பேசாவிடில் நான் சாவேன்

அழகிய பெரியவன்
 நான் பேசுகிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்

இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்

ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்

மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்

பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது

பேசாவிடில்
நான் சாவேன்

என்னைப் போல

கோகுல கிருஷ்ணன்
நான் பிறந்தபோது
பாட்டி சொன்னாளாம்
அம்மா போல என்று.

தலைமுடி மட்டும்
தாத்தா போல
முத்தத்துடன் சொல்வாள்
அத்தை.

குளிக்க மறுத்து
அழுது புரண்டபோது
முதுகில் இரண்டு வைத்து
அம்மா சொல்வாள்
அப்பா போல
அடம் என்று.

பள்ளிக்குப் புறப்படும்போதெல்லாம்
அப்பா சொல்வார்
பக்கத்து வீட்டு
பரசுராம் போல
படிக்க வேண்டுமென.

முதல் மதிப்பெண்
பெற்றபோது
தாத்தாவின் பெருமிதம்
மாமா போலவே
அறிவாளி என்று.

மட்டை பிடித்து
மைதானம் இறங்கும்போது
நண்பர்களின் கூச்சல்
ஸ்ரீகாந்த் போல
சிக்ஸர் அடியென்று.

உறவும் நட்பும்
திருமணத்தில்
வாழ்த்தினார்கள்
வானும் நிலவும் போல
வாழ வேண்டுமென.

மருத்துவமனையில்
மரணப்படுக்கையில்
மெல்ல நான்
நினைவிழந்து கொண்டிருக்க
சன்னமாய்க் கேட்கிறது
சங்கர் அண்ணாவின் குரல்
சித்தப்பா போலவே
சிறுநீரகக் கோளாறு
என்று.
 

புதிய மனிதன் காத்திருக்கிறான்

வையவன்
 
கருப்பாதையை
அடைத்து மூடினோம்
அதையும் மீறிக்
குடியிருக்கச் சென்ற
குட்டித் தெய்வங்களை
விரட்டி விரட்டிஅடித்து
நிர்மூலமாக்கியத்தில்
இடுகாடுகள் அதிகமாயின
மூலைக்கு மூலை
சட்டம் சிதைவுகளுக்கு
வாழ்த்துக் கூறிவிட்டது
புதிய மனிதன் காத்திருக்கிறான்
பிறப்பதற்கு எந்தக் கதவு திறக்குமென்று
 

என் மௌனம்

கவிதா முரளிதரன்
உன் புனிதத்தின் பிம்பங்களை உடைத்தெறியும்
என் மௌனம்
மிகப் புதிரானது.

என் மௌனங்களின் காற்புள்ளியில் தொக்கி நிற்கும்
உன் கேள்விகளுக்கு
என்னிடம் விடைகளோ தீர்வுகளோ இல்லை.

உன் வன்முறைகளின் மிச்சங்களிலிருந்துதான்
எனது மௌனம்
தனது தற்காப்பு ஆயுதங்களை
உருவாக்கிக் கொள்கிறது.

எனினும் என் மௌனம்
அதி வலிமையானது.

என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,
வலுவிழக்கும் உன் அதிகாரங்களையும்
விரியும் என் எல்லைகளையும்.
என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,

என் விடுதலையை.
உன் முயற்சிகளையும் மீறி
என் மௌனம்
சாத்தியப்படுத்தியிருக்கிறது

என்னை.

- கவிதா முரளிதரன் ( http://neerottam.wordpress.com/ )

என் மனைவியின் தாய்க்கு

சு.மு.அகமது
முடிவின் ஆரம்பம்
அழுகுரல் விசும்பலுடன்
ஒரு சகாப்தத்தின் இறுதியை நிச்சயப்படுத்தும்

மரணம் என்ற சொல்லுக்கு
அருகிலான பயணமும்
நிச்சயப்படாத இலக்கு நோக்கின முன்னேறுதலும்
சுருங்கின வயிறின் முடிச்சுக்களாய்

உயிர்ப்பின் முகவரி தொலைத்து
தொலைப்பில் உழலும் அறிமுகம்
தேசாந்திரியின் அழுக்குப்பையில் கிடக்கும்
கசங்கிய துணிச் சுருளாய்

சவக்குழியில் இறக்கப்பட்டு
சலனமற்ற முகத்தோடு
இறுதி உறக்கம் கலையாத உணர்வுக்கு
கனவுகளற்ற புதிய உலகில்
பகிர்ந்து கொள்ள ஏதும் உளதோ

அமைதியாய் சரியும் மண்ணும்
இருளாய் போகும் உலகமுமாய்
கண்களின் இரு துளி
ஈரமாய் என் கைக்குட்டையில்