தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தூசிகளாய்

விஷ்ணு
நீ காதலை!
உணர்ச்சிகரமாக சொல்லிய!
அந்த இரவில்...!
உனக்காக!
நான் வடித்த கவிதை ..!
உனது இதய அறையில்!
எங்கோ ஒரு மூலையில்!
தூசிபோல...!
இனியும்!
சில வருடங்கள்!
அது தங்கி இருக்கலாம்!
யாருமே அறியாமல் ..!
பனிக்காலம்!
மழைக்காலம் என்பது போல்!
மறதிக்காலம்!
உன் மனதை!
மூடும் வரை ..!
அதன் பின் ..!
வேறொரு இரவு ..!
வேறொரு கவிதை என!
தூசி மீது தூசி படர்வது போல் ,..!
இப்படித்தான்!
இவ்வுலகில்!
மீண்டும் மீண்டும்!
காதல்களும்!
கவிதைகளும்!
தூசிகளாய் ....!
- விஷ்ணு

நேசத்தாவரம்

அன்பாதவன்
ஒரு வண்ணத்துப்பூச்சியாய் அமர்ந்து !
மலைப்பாம்பாய் இறுக்கும் நீ யார்? !
உரையாடல்களில் சிந்துகிற சொற்களை !
விதைநெல்லாய் சேகரித்து !
மனக்குதிரில் பத்திரப்படுத்தும் நீ யார்? !
வார்த்தை வலைகளுக்குள் சிக்குமாறு !
வசப்படுத்தி வைத்திருக்கும் !
மாயச்சொல்லுக்கு உரிமையான நீ யார்? !
ஆறு காலங்களிலும் !
நினைவுகளை ஆக்ரமிப்பு செய்து !
ஆனந்த ஆதிக்கம் செய்கிற நீ யார்? !
பழைய மரபுகளை புறந்தள்ளி !
புதிய இலக்கணத்தில் !
வழிநடத்தும் சுழற்காற்றே நீ யார்? !
பூவாய் மலர்ந்து கொடியாய் படர்ந்த !
நேசத்தாவரத்தின் நிற மறிய !
உன்னைக்குவித்துக் கண்கள் மூட !
உன்னுள் வருவேன் !
நான்

காதல் ... காதல்...காதல்

சத்தி சக்திதாசன்
காதலென்னும் சோலையிலே கீதமொன்று பாடி வந்தேன்!
கன்னியுந்தன் கனவுலகில் நீச்சலடித்து மகிழ்ந்திருந்தேன்!
வண்ணமயில் தோகை போல விரிந்திருந்த கூந்தல் கண்டேன்!
வழிமறந்து விழிமூலம் உள்ளத்தினுள் குடி புகுந்தேன் !
புன்னகை அரும்பியதும் எந்நிலை இழந்து விட்டேன்!
பொன்னகை பூட்டி உந்த எழில்காணத் துடிக்கின்றேன்!
அன்னம் போல நடைபயின்று அள்ளிக்கொண்டாய் மனதினையே!
மின்னல் போன்ற இடையசைவில் எனை நானே தொலைத்து விட்டேன்!
வாட்டுகின்றாய் உள்ளத்தைக் கோதையுந்தன் நினைவுகளால்!
வாசமில்லை மலர்களுக்கு உந்தன் கூந்தல் ஏறாவிட்டால்!
மீட்டுகின்றாய் இன்பராகம் குயிலிசையாய் மொழிந்திடுகையில்!
மீதி என்னில் ஏதுமில்லை மிகுதி சொல்ல வார்த்தையில்லை!
தேவியுந்தன் கரம் பிடிக்க ஏகுதெந்தன் காளை மனம்!
தோல்வியில்லை என் காதலுக்கு காவியத்தில் வாழுமென்றும்!
நாளையெங்கள் வாழ்வினிலே நடப்பதெல்லாம் இன்பநிகழ்வுகளே!
நாயகியாய் நீ இருக்க நிற்பதெங்கே உணர்வலைகள் !
-சக்தி சக்திதாசன்

மழையும் நானும்

குரு
அடை மழை !!
நனைந்து விடுவோமோ !
என்ற பயத்தில் !
நீயும் !!
நீ !
நடந்தால் !
உன்னோடு சேர்ந்து !
மழையில் !
நனைந்தபடி !
நடக்கலாம் !
என்ற ஆசையில் !
நானும் !!!
ஆளுக்கு ஒரு ஓரமாய் !
நிற்கிறோம் !
மழையை பார்த்தபடி !
நம்மை பிரித்த !
சந்தோஷத்தில்!
மண்ணில் விழுந்து !
நக்கல் செய்கிறது !
மழை

கல்லறை நினைவுகள்

ஆர். நிர்ஷன்
அதிகாலை மல்லிகையை!
பறித்துவந்து!
அதில் வழிந்த!
சொட்டுப் பனித்துளியை!
நுனிவிரலில் ஏந்தி!
இனிக்கிறது தேன் !
என்று சொன்ன!
அந்த நாள்…!
ரயில் பாதையில்!
நான்!
ஓடி விழுந்தபோது!
உன் கைக்குட்டையில்!
எச்சில் தடவி!
ஒத்தடம் கொடுத்த!
நாள்…!
கரப்பானுக்கு பயந்து!
கூரையில் ஏறி!
தவறி விழுந்ததாய்!
நீ கண்ட கனவை!
நள்ளிரவில் !
தொலைபேசியில் கூறி!
என் கனவை!
கலைத்த நாள்…..!
யாரோ ஒருவன்!
வீதியில் இறந்துகிடக்க!
அருகில் அவன் மனைவி!
அழுவதைப்பார்த்து!
என்னைக்கட்டிப்பிடித்து!
எப்போதும் என்னுடன் இருப்பாயா!
என ஏக்கத்துடன் !
கேட்ட நாள்…!
மாமாவுடன் பேசியபொழுது!
இடையில் என்பெயரைக் கூறி!
நீ தடுமாறித் தவித்ததை!
அதே பயத்துடன்!
மழலை மொழியில்!
கூறிய நாள்…!
நகம்கடிக்கும் பழக்கத்தை!
விடச்சொல்லி !
நீ விரல்கடித்துக்கொண்டு!
அழுதுத் துடித்த!
அந்த நாள்…!
எப்போதோ நாம்!
ஒன்றாய் பயணித்த!
பயணச்சீட்டை!
பத்திரப்படுத்தி!
அடுத்தவருடம்!
அதே தினத்தில் !
முத்தம்கொடுத்தாயே!
அந்த நாள்…!
இவை அத்தனையும்..!
ஏன் !
இன்னும் எத்தனையோ!
நினைவுகளை !
நான்!
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்….!
யாரோ வைத்த !
கண்ணிவெடியில் - நீ !
கண்ணிமைக்கும் நேரத்தில்!
சிதறிப்போனதைத் தவிர….!
இன்னும் !
என்றும் உன்!
கல்லறையில்….!
-ஆர். நிர்ஷன்

அம்மா, முணுமுணுப்பு

தீபம் கோபி , சிங்கப்பூர்
அம்மா !
ஒருவரிக் கவிதையாய்... !
உச்சரிக்கும்போது !
உயிரோட்டமாய்... !
அன்பு,பாசம்,கருணை !
அனைத்தும் அடக்கமாய்... !
ஜனித்த உயிரெல்லாம் !
ஒலிக்கும் முதல் சொல்லாய்... !
வாழும் வார்த்தை எதுவென !
எனக்குள் வினா விதைத்து !
விடை தேட... !
என் இதயக் கூட்டுக்குள் !
உதயமானது.... !
அம்மா என! !
- தீபம் கோபி , சிங்கப்பூர் - !

!
முணுமுணுப்பு !
வரவுகள் கரைந்து !
செலவுகள் சேர்ந்து !
வருமானம் தொலைவது !
வாடிக்கையானாலும், !
மாத இறுதியில்... !
மனது மட்டும் மறவாமல் !
முணுமுணுக்கும்.... !
அடுத்த மாதம் முதல்.. !
சேமிக்க வேண்டுமென...! !
-தீபம் கோபி, சிங்கப்பூர்

கண்ணடிப் பூக்கள்

சஞ்சீவி சிவகுமார்
இது இலையுதிர் காலமல்ல!
மலருதிர் காலம்!
மணம் வீசும்!
புஸ்ப மரணங்கள்.!
காற்று தன்மீது!
இச்சை தீர்த்துக் கொண்டதால்!
பூக்கள் தற்கொலை!
புரிந்து கொண்டனவா?!
ஏன்...?!
காற்று!
தற்கொலை செய்யவில்லை.!
ஓ...!
களங்கப்பட்டது!
பூக்கள் தானோ!!
கற்பு!
கண்ணாடித்தனம்!
என்று!
கற்பிக்கப்பட்டது!
பெண்ணுக்குத்தானே!!
இந்தக் கற்பிதத்தைக்!
காப்பாற்றிக் கொள்ள!
தன்னை ஒடுக்கி!
மனதை மறைக்கும்!
முயலல்கள் தான்!
பெண்மையோ!!
இதுவும்!
சாதித் தாழ்த்தல்களின்!
வேலைப்பகர்வு போலா?!
குனிந்து நட;!
மெல்லச் சிரி;!
பணிந்து போ;!
அடக்கமாயிரு;!
அது போதாது!
மாற்றான்(ண்) தொட்டால்!
மரணித்துக் கொள்.!
உன்!
வாழ்வின் இலட்சியமே!
இந்தக் கண்ணாடிக் கற்பிதத்தைக்!
காப்பாற்றிக் கொள்வதுதான்!
வேறில்லை.!
நீ!
மங்கையான போது!
மஞ்சள் பூசியதே!
உணர்வுகளை!
மரத்துப்போக வைக்கத்தான்!
வெறில்லை.!
பெண் பிறந்தால்!
கொல்லையிலே!
அலரி ஒன்று!
நடுங்கள்.!
அவள் பருவமடையும் போது!
அதுவும் பருவமடையட்டும்!
மலர் பறித்துக் கொள்ளமட்டுமல்ல!
அவளின்!
உயிர் பறித்துக் கொள்ளவும்!
உதவலாம்

கண் மூடும் வேளை

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
கட்டி வைத்த கூந்தலது!
முந்தி வந்து விழுந்தந்த!
சாந்துப் பொட்டிட்ட!
சாந்தமான நெற்றியின்!
எழிலை எடுத்துக்கூற!
முத்து முத்தாக!
வியர்வை மொட்டுக்கள்!
விளிம்பிலே அரும்பி நிற்க!
வியாபாரமான வாழ்க்கையை!
விடாமுயற்சியுடன் வாழ்ந்திட!
வனிதையவள் போராட்டம்.!
உதிக்கவில்லை பாவம்!
உதயத்து தாரகை!
பணமுள்ள குடும்பத்தில்!
பாவம் அவளைச் சுற்றி!
மனமெங்கும் இருள் கொண்ட!
மந்தைக் கூட்டமொன்று!
மக்கள் எனும் பெயருடன்!
மயக்கத்துடன் நடக்கின்றது!
ஆகாயத்து வெண்ணிலவை!
அழகிற்கு உதாரணமாய்!
ஆயிரம் கவிபாடும்!
அத்தனை கவிஞராலும்!
அளிக்க முடியவில்லை!
ஆரணங்கு அவளுக்கு!
அரைவயிறை நிறைக்க!
ஆகாரம் என்ன விந்தை !!
அடுக்கு மொழி பேசி!
அரசியல் மேடைகளை!
அலங்கரிக்கும் தலைவர்கள்!
அடுத்த தேர்தலில் தாம்!
கொடுக்கும் வாக்குறுதிகளை!
தேடிப் பாவம் நிதமும் போராட்டம்!
இளம் பெண்ணவளுக்கு!
இது!
கண்மூடும் வேளை!
நாளைய பொழுது!
நன்றாய் விடியுமோ!
நங்கையின் நெஞ்சில் ஏக்கம்...!
கண்மூடி நடக்கும்!
கருணை நெஞ்சங்களே !!
கண்மூடும் வேளை இதுவல்ல!
கன்னிகளின் வாழ்வை!
கரைசேர்க்க நீங்கள்!
கண்திறக்கும் வேளையே

இன்று வேறு நாள்

இப்னு ஹம்துன்
நேற்றைப்போலில்லை!!
கணப்பொழுதில் நீண்டுவிட்டது!
வெயிலின் கொடு நாவு!
வெளியெங்கும்!
பரவியிருக்கும் வெறுமை!
முகத்திலறையும் பூதம்!!
இரத்தம் வெளிறி!
உறைந்துக் கிடக்கின்றன!
இரவு பகல்கள்!
பொருள் பிரிக்க..!
சக்தி இழக்கிறது வாழ்க்கை!!
காலடித்தடங்களில்!
ஞாபகத்துணுக்குகள்!
சிந்தியபடி மனம்.!
நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!!

நீரின் மட்டம் உயர்கிறது

துவாரகன்
முடிவுறாத பயணங்களின் மீதியில்!
நீரின் மட்டம் உயர்கிறது!
மலைகளையும் காடுகளையும் ஓடைகளையும் தாண்டி!
குதித்தோடி வீட்டுக்குள் வருகிறது வெள்ளம்!
நீரின் மட்டம் இன்னமும் குறைந்தபாடில்லை!
உயர்ந்து கொண்டேயிருக்கிறது.!
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்!
அடைமழை இணைந்த நாளொன்றில்தான்!
நான் என் மாமாவை இழந்தேன்!
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்!
நாளொன்றில்தான்!
என் பால்ய நண்பனையும் இழந்தேன்!
இந்த நாட்களில்தான்!
குந்தியிருந்த எங்கள் குடிசைகளும்!
வெள்ளத்துடன் அள்ளுண்டு போயின.!
இந்த நாட்களும் என் இறந்த காலங்களைப் போல்!
நிரம்பி வழிகின்றன.!
இன்னும் இன்னும் நீரின் மட்டம்!
உயர்ந்து கொண்டே செல்கிறது!
இன்னும் இன்னும் தலையின் பாரம்!
கூடிக்கொண்டே இருக்கிறது!
ஓன்றின்மேல் ஒன்றாய்!
சிறிதும் பெரிதுமாய்!
ஒழுங்கின்றிய அடுக்குகளாய்!
நிரம்பி வழிகின்றன!
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்கள்!
ஒரு சாவீட்டில் நிறைந்து வழியும்!
துக்க அமைதியைப் போல்!
இருட்டியபடி!
மார்கழிமாத அடைமழை கொண்டிக் கொண்டேயிருக்கிறது.!
யாரும் வெளியே செல்லமுடியாதபடி!!
!
-துவாரகன்